
குமாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இந்த படகு வீட்டை ஐந்து வாரங்களுக்கு முன்பே தன் நண்பர்களின் ஃபேமலிக்காக புக் செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு? கேரளாவிலேயே இருந்துகொண்டு ஏன் இன்னும் தாமதம் ?
எல்லோரும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டார்கள். குமாருக்கு எப்போதுமே எல்லாவற்றிற்கும் அவசரம். பத்து மணி ட்ரெயினைப் பிடிப்பதற்கு எட்டு மணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விடுவான்.
எல்லோரையும் இணைப்பதும், எந்த இடத்திற்கு போனாலும் மறக்காமல் எல்லோரையும் சந்திப்பதும் அவன் வழக்கம். இந்த அலாதியான நல்ல குணத்தினால் குமாருக்கு நண்பர்கள் ஏராளம். இந்த படகு வீட்டை ஒட்டி உள்ள ரிசார்ட்டில் எல்லோரும் வந்து சேர்ந்தாகிவிட்டது. ரமேஷை துரத்தித் துரத்தி விடாமல் போனில் கான்ட்டாக்ட் செய்தான் குமார்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து சேருவதாக ரமேஷ் சொன்னவுடன்தான் குமாருக்கு நிம்மதியாக இருந்தது. அதற்குள் எல்லோரும் அந்த ரிசார்ட்டில் இருந்த பால்கனி வழியாக அந்த படகு வீடுகளை ரசித்து தத்தம் செல்ஃபோன்களில் செல்ஃபி, வீடியோ, ஃபோட்டோ என்று எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
விஜய் மனைவி சுகந்தி மட்டும் தனியாக அமர்ந்து அமைதியாக இருந்த வேம்பநாடு ஏரியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். சத்யாவின் மனைவி சுகுணா, அவள் அருகில் சென்று அவள் தோளைத் தொட்டு :என்ன சுகந்தி… ஏன் கவலையாக இருக்க… என்கிட்ட சொல்லும்மா… உன் மன பாரம் குறையும்” என்று கனிவுடன் கூறினாள். சுகந்தி சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஒன்னுமில்ல… சுகுணா… ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு நான் என் தம்பி ஃபேமிலியோட இந்த குமரகோம் போட் ஹவுஸ் வந்து இரண்டு நாட்கள் தங்கினோம். என் அம்மாவும் எங்களோட வந்து நல்லா என்ஜாய் பண்ணினாங்க… போட்ல போகும் போது கூட என் அம்மா குழந்தையாகவே மாறி, “அமைதியான நதியினிலே ஓடம்” என்று இனிமையாக பாடிக்கிட்டே வந்தாங்க… அந்த ட்ரிப் முடிஞ்சு நாங்க கோயம்புத்தூர் திரும்பி வந்தோம். அப்பக் கூட எப்ப பாரு… இந்த போட் ஹவுஸ்ல ஜாலியா இருந்தது பத்தி எங்க அம்மா சொல்லிக்கிட்டே இருந்தாங்க…. அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துல அவங்க இறந்துட்டாங்க….அதனாலதான் இந்த போட்ட பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் அடிக்கடி வருது….
இப்ப நாம எல்லோரும் இப்படி ஒன்றாய் இருக்கிறது மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அம்மா ஞாபகம் வருது ரொம்ப வருது சுகுணா” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் சுகந்தி. சில நிமிடம் அங்கு மவுனம்.
சுகுணா உடனே சுதாரித்துக் கொண்டு, கமான் சுகந்தி…. எல்லோரும் ஜாலியா அதே பாட்டு பாடி டான்ஸ் ஆடலாம் வா… உங்க அம்மா ஆத்மாவும் சந்தோஷப்படும் வா…. என்று அவளை இழுத்துக் கொண்டு எல்லோரும் அந்த போட் நடுவில் சென்று டான்ஸ் ஆட ஆரம்பித்தார்கள். சுகந்தியின் கண்களுக்கு அந்த ஏரியும் போட் ஹவுஸ்களும் தீபாவளி பொங்கலுக்கு அனுப்பும் வண்ண வாழ்த்து அட்டைகள் போல மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் காட்சியளித்தது.

இந்த ரமேஷ் என்ன ஆனான்?