நகுலன் சுருதி கவிதைகள்

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை

வந்தது JACK
எப்பொழுதும் போல்
துயிலிலிருந்து எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்பொழுதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாராளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிக்கொண்டிருந்தோம்
அப்பொழுது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில் சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
00

தான்

கண்டதுதான்
நடந்ததுதான்
கேட்டதுதான்
ஆனால்
நீ
ஒன்றையும்
கண்டுகொள்ளவில்லை
கேட்கவும்
செவிசாய்க்கவில்லை
ஒன்றும்
நடக்கவில்லை
என்றும் சொல்கிறாய்
கடைசியில்
காணாமல்
போய்ச் சேர்ந்தாய்
கண்டிருக்க
வேண்டும்
கேட்டிருக்க
வேண்டும்
நடந்திருக்கக் கூடாது
என்ற நினைவுடன்
என்றுதான்
சொல்கிறார்கள்
எஞ்சியிருக்கும் என்னை
ஒன்றுமில்லாமல்
போய்விட்டால் போதும் என்று
ஒரு உள் போதம்
உந்தித் தள்ளுகிறது.