
ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ புத்தகத் தயாரிப்புக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், சிவசங்கரி எனும் ஆளுமையின் விஸ்வரூபம் எனக்குப் புலப்படலாயிற்று.
ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘ஒரு மனிதனின் கதை’ மறக்கக்கூடியதா என்ன? அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பும் ஒருவன் குடிப் பழக்கத்தைத் தொடர்ந்தான் என்றால், அவனை இனி ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் வைத்திருந்ததாக ஞாபகம். எனக்குத் தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தனை பெரிய கௌரவம் கிடைத்ததில்லை.
விகடனில் சிவசங்கரி எழுதிய மூன்று தலைமுறைக் கதை ‘பாலங்கள்’ தொடர்கதையும் அந்த நாளில் வாசகர்களிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. மூன்று தலைமுறைக்கும் கோபுலு, மாருதி, ஜெயராஜ் என மூன்று ஓவியர்களைப் படம் போடச் செய்திருந்தார் விகடன் ஆசிரியர். ஒரே தொடருக்கு மூன்று ஓவியர்கள் படம் வரைந்ததுவும் அந்நாளில் ஒரு புதுமை.
சிவசங்கரியை வெறுமே கதாசிரியராக மட்டுமே கொள்ள முடியாது. மிகச் சிறந்த கட்டுரையாசிரியரும் ஆவார்.
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரைச் சந்தித்து மிக விரிவான தொடர்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நடிகையர் திலகம் சாவித்திரி உடல்நலிவுற்று கோமாவில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படுத்திருந்தபோது, அவர் கிடந்த கோலத்தைக் கண்ணீர் வரிகளால் கட்டுரையாக்கியிருக்கிறார். கண் தானம் செய்வதன் அவசியம் பற்றி அவர் எழுதிய கட்டுரை அத்தனை அற்புதம்! அதைப் படித்ததுமே விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் முதல் வேலையாக தம் கண்களை தானம் செய்ய எழுதிவைத்தார் என்று சொல்வார்கள். அத்தனை வீரியமுள்ள எழுத்து சிவசங்கரியுடையது.
இன்றைக்கு நாம் பேசுகிறோமே, திருநங்கைகளுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று… அதை அந்தக் காலத்திலேயே விரிவாக, திருநங்கைகளின் துயர வாழ்க்கையை அவர்களின் பக்கமாக நின்று கட்டுரையாக்கியிருக்கிறார்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.
நன்றி: உங்கள் ரசிகன்
முகநூலில் பகிர்ந்தவர் : ஆர்.கந்தசாமி

திருமதி.சிவசங்கரி அவர்கள் வளர்த்த நாய்க்குட்டி காலமானது பற்றி எழுதிய கட்டுரை என்னிடம் இருக்கிறது.
உண்மை. சிவசங்கரி ஓர் அற்புதமான ஆளுமை.