தொன்மக்கதை/கால சுப்பிரமணியம்

The Northman (2022)
எனக்கு ஸ்காண்டிநேவிய தொன்மக்கதை(Norse mythology)களில் (Edda) எப்போதுமே ஆர்வமுண்டு. கிரேக்கத் தொன்மங்களுக்கு இணையாக மேற்கத்திய உலகில் பாதிப்பைச் செலுத்துபவை அவை. பல திரைப்படங்கள் இதை வைத்து வந்துள்ளன. அதன் பண்டைய வரலாறும் கூட சுவாரஸ்யமானது. எனவே வைக்கிங் (2013-20) நீண்ட சீரியல் தொடர் (6 சீசன் 89 எபிசோடு) வந்தபோதும் Vikings: Valhalla (Feb 2022) முதல் சீசன் வந்தபோதும் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்த்தேன். இந்தத் தொடர் வெற்றிபெற்றதால் வைக்கிங்குகள் தொடர்பான நிறைய திரைப்படங்களும் வந்து குவிந்தன. (The Ring of the Nibelungs. Uli Edel. 2004 சாதாரண படமானாலும் சகுந்தலை துஷ்யந்தன் கணையாழி கதையுடன் ஒப்பிட்டுப்பார்க்கவாவது அதைப்பார்த்துவையுங்கள். கதே. காளிதாசனின் சாகுந்தலத்தை அளவுக்குமீறிப் புகழ்ந்தது ஏன் என்று தெரியவரும்.)
The Northman (2022) நீண்ட காத்திருப்புக்குப் பின் இப்போது வந்திருக்கிறது. North Germanic/Nortic மக்களோடு தொடர்புடையது நார்ஸ் புராணிகம் என்பதால் நார்த்மேன் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். அதிலும் எடுத்தவர் அமெரிக்க டைரக்டர் Robert Eggers. எனவே அவரது கிறிஸ்தவப் பார்வையிலிருந்து படம் தப்பிக்கவில்லை. ஏதோ அந்தக்காலத்து ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்க பழங்குடிகளைச் சித்தரிக்கும் தோற்றம் இதிலுமுண்டு. ஏனெனில் இப்போது கிறிஸ்தவத்தை மீறிய நார்வீஜியப் பழங்குடி மதத்தைப் பற்றிய பார்வைக்கோணம் மேற்கூறிய தொடர்களிலும் சினிமாக்களிலும் வந்துவிட்டது.

மேலும் ஆம்லெத் (Amleth) / ஹாம்லெட்டின் மூலக்கதையைக் கூறும் இந்தப் படத்தின் கதைக்கருக்களம் நாட்டுப்புறக் கதையிலிருந்தோ வாய்மொழி மரபிலிருந்தோ வந்ததல்ல. காவிய இதிகாச தொன்ம எழுத்து மரபிலிருந்து வந்தது. எனவே பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் அதன் உறவுச் சிக்கல்களுக்குள் சென்றதைப் போல இந்த மூலத்தில் எதிர்பார்க்கக்கூடாது. அதாவது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தை இதனுடன் ஒப்பிட்டு குறைநிறைகளை நீட்டக்கூடாது. ஏனெனில் கணையாழி கதையின் தொல்படிவ (ஆர்க்கிடைப்பல்) வடிவம் நார்ஸ் தொன்மத்திலும் இந்திய தொன்மத்திலும் வந்துள்ளது போலவே ஆம்லெத்தின் கதை பண்டை உலகின் பல கதைக்கூறுகளோடு இனம்காட்டுப்படுகிறது.
நார்வீஜிய மக்களின் நம்பிக்கை வீரசொர்க்கம் (வல்கல்லா) அடைவதே லட்சியமாகக் கொண்டது. எடா தொன்மங்கள், வாக்னரின் Nibelungenliedத்தின் இசைவடிவத்தில் வரும் மோதிரம், இரும்புக் கொல்லர்கள், குள்ளர்கள், புராணக் கடவுளர்களான ஓடின், தோர் என்பவைகளும் ஆங்கில ஐரோப்பிய பரமூலங்களும் பற்றித் தெரிந்திருந்தால் இந்தப் படத்தில் வரும் வசனங்களின் நுணுக்கங்கள் பல புலப்படும். சிலப்பதிகாரத்துக்கு மாறாக மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாளாகவே நாட்டுப்புற கதைப்பாடலில் மாதவி வருகிறாள். இதில் வரும் ஆம்லெத்தின் தாயும் வருகிறாள். சகோதரனைக் கொன்று அவன் மனைவியை ராணியாக்கிக் கொண்டு அவன் மகனால் பலிவாங்கப்படும் கதை எங்கும் காணக் கிடைக்கும் ஒன்றுதான். (மனோகரா நினைவுக்கு வருகிறதா? அது ஹாம்லெட்டைத் தழுவி பம்மல் சம்பந்தம் எழுதிய நாடகக் கதைதான்)

இதற்குமுன் இந்த டைரக்டர் Robert Eggers எடுத்த அமெரிக்க நாட்டுப்புற வாய்மொழிக்கதைகளின் கூட்டு அவியலான The Witch (2015) புயூரிட்டன் சமூகத்தை விமர்சித்தாலும்ஒரு கிறிஸ்தவ மனத்தையே காட்டியது. ஆலன் போவின் கதையை வைத்து இருண்ட The Lighthouse (2019) என்ற முக்கியமான படத்தையும் எடுத்திருக்கிறார். அது பல பரிசுளையும் பெற்றது என்று நினைக்கிறேன். இந்த The Northman பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளைப் பெறவில்லை என்றாலும் பல பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

ஹாம்லெட் நாடகமும் பல விதங்களில் காலங்காலமாக திரைவடிவம் பெற்றிருக்கிறது. இதன் மூலக்கதை அடங்கிய Gesta Danorum என்ற தொன்ம வரலாற்று ஆவணத்தை Saxo Grammaticus (1150 – 1220) என்ற மதபோதக வரலாற்றியலாளர் அன்றே படைத்திருக்கிறார். அவருக்குப் பின்பு திருந்திய வடிவமே இன்றைய கதைகளின் மூலமாக இருந்திருக்கிறது. இந்த ஆம்லெத் மூலத்தை வைத்து இன்றைய தொன்மப் பேண்டசி நாவல்களாக (The Green Man (1966) by Henry Treece / An Antic Disposition (2004) by Alan Gordon) சில வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நார்த்மேன் படத்தின் மூலம் போன்ற Royal Deceit (Prince of Jutland). Gabriel Axel. 1994 என்ற படத்தையும் பார்த்திருக்கிறேன். வாக்னரின் தழுவல். குறைவான பட்ஜெட்டில் தொழில்நுட்ப வசதிகளற்று எடுக்கப்பட்ட மோசமான படம் அது. இவை இல்லாவிட்டால் நல்ல நடிகர்களாலும் மோசமாகத்தான் நடிக்கமுடியும் என்பதை இப்படம் காட்டியது. ஆனால் ஆம்லெட்டின் மூலக்கதை. அதில் துணைப்பாத்திரமாக வந்த Alexander Skarsgård தான் நார்த்மேனின் கதைநாயகனாக வந்துள்ளார் என்று நினைக்கிறேன். இவரை நிறைய ஸ்காண்டிநேவியப் படங்களிலும் எனவே ஹாலிவுட் படங்களிலும் துணைப் பாத்திரங்களில் பார்த்திருக்கிறேன். ஜிம் கேரி போன்ற ஒருவித (அவரைவிட) நல்ல முகச்சாயல் என்பதால் நினைவில் தங்கியிருப்பவர்.

கதைச் சிக்கலுக்குள் போகவில்லை. பார்க்கவேண்டிய படம் என்பதால் நீங்களே பார்த்து விசாரம் கொள்ளுங்கள்.