எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து….

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
துப்பாக்கியிலிருந்து எழும் இசை
சினிமா.


உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் பற்றி Ennio என்ற ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

எனியோ மோரிகோன் என்றதும் வெஸ்டர்ன் திரைப்படங்களின் மறக்கமுடியாத இசை நினைவில் எழுகிறது. அதிலும் குறிப்பாக விசிலோடு கூடிய The Good the Bad and the Ugly – Main Theme மற்றும் Man with Harmonica – Once upon a time in the west அற்புதமான இசைக்கோர்வையாகும்.
இந்த இசை வழியே நமது இளமைக்காலத்திற்கு பின்னோக்கி செல்லத் துவங்குகிறோம். ஏதோ ஒரு திரையரங்கில் இருட்டிற்குள்ளிருந்தபடி குதிரைகளில் செல்லும் சாகசவீர்ர்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துப்பாக்கி நம்மை நோக்கிச் சுடுகிறது. ஆனந்தமாகக் கைதட்டுகிறோம். பெயரில்லாத ஒருவன் யாருமில்லாத ஊருக்கு ரயிலில் வந்து இறங்குகிறான். அவன் மவுத்ஆர்கான் வழியே பேசுகிறான். கண்சிமிட்டுவதை விட வேகமாக துப்பாக்கி சுடுகிறான். இப்போது நான்காவது குதிரை தேவையற்றுப் போகிறது. இசையே அவனது சாகசத்தை முழுமையாக்குகிறது.

Cinema Paradiso, Once Upon a Time in America, The Mission, The Untouchables, Days of Heaven, 1900, Battle of Algiers என எனியோ மோரிகோன் இசையில் வெளியான படங்களில் அவரது பங்களிப்பு காட்சிமொழியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாகவும் பலநேரங்களில் காட்சிகளைத் தாண்டியதாகவும் இருக்கிறது. திரையிசைக்கு மிகப்பெரிய கௌரவத்தை உருவாக்கியவர் எனியோ மோரிகோன். ஒரு ஆண்டில் 24 படங்கள் வரை இசையமைத்திருக்கிறார் என்பது அவரது மேதமையின் சான்று. இத்தாலியத் திரைப்படங்கள் மட்டுமின்றிப் பிரெஞ்சு, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்திருக்கிறார். அவரது திரையிசைத் தொகுப்புகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.
ஆறுமுறை ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போதும் ஆஸ்காரின் உள்அரசியல்காரணமாக அவருக்கு விருது கிடைக்கவில்லை. 2016ல் The Hateful Eight படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற போது அவர் கண்கலங்கிய நிலையில் மேடையில் நிற்கும் காட்சி மறக்கமுடியாதது.

இந்த நிராகரிப்பைப் பற்றி ஆவணப்படத்தில் பேசுகிறார். அப்போது அவரிடம் வெளிப்படும் கோபம் அகாதமியின் செயல்பாடு அற்பத்தனமானது என்பதையே காட்டுகிறது.

ஆவணப்படத்தின் துவக்கக் காட்சியில் எனியோ மோரிகோன் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். யாரோ ஒரு முதியவர் போலத் தோற்றம் தரும் அவர் இசைக்குறிப்புகளை எழுதுவதற்காக மேஜையில் அமருகிறார். பரபரப்பாக இசைக்குறிப்புகளை எழுதுகிறார். அப்போது தான் அவர் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் என்பது புரியத்துவங்குகிறது.

தனது இளமைக்காலத்தை நினைவுகூறும் போது மருத்துவம் படிக்க விரும்பிய தன்னை, கட்டாயத்தின் பெயரில் டிரம்பட் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார் தந்தை என்கிறார் எனியோ மோரிகோன்.

விருப்பமில்லாமல் இசைக்கற்கத் துவங்கிய போதும் குறுகிய காலத்திலே இசையின் மீது தீவிர ஈடுபாடு உருவாகி மிகச்சிறந்த டிரம்பட் இசைக்கலைஞராக உருவானார். அதன்பின்பு இசைக்கோர்வைகளைக் கற்றுக் கொண்டு தனியிசை தொகுப்புகளை உருவாக்குபவராகவும், வானொலி நாடகங்களுக்கு இசை அமைப்பவராகவும் மாறினார்

இந்த ஆவணப்படத்தில் எனியோ மோரிகோன் தனது இளமைக்கால நினைவுகளையும், முக்கிய இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

முறையாக மேற்கத்திய இசை கற்றுவிட்டு சினிமாவிற்கு இசையமைக்க வந்தது தனக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அதற்காகவே தனியிசை மற்றும் திரையிசை என இரண்டு தளங்களில் தொடர்ந்து இயங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.
திரையிசையின் தரத்தை உயர்த்தியதிலும், புகழ்பெறச் செய்ததிலும் இவருக்கு முக்கியப் பங்கிருக்கிறது. திரையில் அவரது பெயரைப் பார்த்த மாத்திரம் பார்வையாளர்கள் கைதட்டிக் கொண்டாடியது மதுரையில் நடந்திருக்கிறது. நானே நேரில் கண்டிருக்கிறேன்.

எனியோ மோரிகோனுடன் பணியாற்றிய முக்கிய இயக்குநர்கள் அவரது இசைமேதமை குறித்து வியந்து கூறுகிறார்கள். மிக வேகமாகவும் சிறப்பாகவும் இசையமைக்கக் கூடியவர், திரை இசையில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்திருக்கிறார் என்று விவரிக்கிறார்கள். திரைப்பட இசை என்பது “முழுமையான சமகால இசை” என எனியோ மோரிகோன் நிரூபித்திருக்கிறார்.

அவர் இசைக்குறிப்புகளை எழுதும் வேகத்தைத் திரையில் காட்டுகிறார்கள். வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் இத்தோடு சினிமாவை விட்டு விலகி விடலாம் என நினைத்ததாகவும் ஆனால் ஒரு புதிய படம் அது தரும் வெற்றி, அடுத்த பத்தாண்டிற்குத் தன்னை வேலை செய்ய வைத்து விடுகிறது என வேடிக்கையாகக் கூறுகிறார்

மோரிகோன் தனது ஆரம்பகால இசையமைப்பில் ட்ரம்பெட் இசையை வேண்டுமென்றே தவிர்த்ததாகக் கூறுகிறார். இந்த ஆவணப்படத்தில் தனது நண்பனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அவர் டிரம்பட் வாசிப்பது சிறப்பான தருணமாகும்.

தனது இசையாசிரியரான கோஃப்ரெடோ பெட்ராஸியை வியந்து கூறும் மோரிகோன் தனது The Good the Bad and the Ugly படத்தின் பின்னணி இசையை அவர் பாராட்டியதைப் பெருமையாகச் சொல்கிறார்.

செர்ஜியோ லியோனும் அவரும் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள். அந்த நட்பின் காரணமாக அவர் இயக்கிய வெஸ்டர்ன் படங்கள் அத்தனைக்கும் எனியோ மோரிகோன் இசையமைத்திருக்கிறார். இந்தக் கூட்டணி திரையிசையில் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள் . படப்பிடிப்பு தளத்திலே எனியோ மோரிகோனின் இசையை ஒலிக்கவிட்டு காட்சிகளைச் செர்ஜியோ லியோன் படமாக்கியிருக்கிறார். நடிகர்களும் கூட அந்த இசைக்கு ஏற்ப நடித்தார்கள் என்பது வியப்பானது.

இது போலவே The Mission படத்தின் இயக்குநர் ரோலண்ட் ஜோஃப் தனது படத்திற்காக அரிய இசைக்கருவிகளைக் கொண்டு எப்படி மகத்தான இசையை உருவாக்கினார் என்பதை விவரித்திருக்கிறார். இசையில்லாமல் அந்தக் காட்சிகளை ஒருமுறை பாருங்கள். பின்பு இசையோடு அதைக் காணுங்கள். அப்போது அந்த மேதையைப் புரிந்து கொள்வீர்கள் என்கிறார் ரோலண்ட்.
மோரிகோன் தனது முதல் இசைக்கோர்வையைத் தனது ஆறு வயதில் எழுதினார். ஆனால் அது பரிகசிக்கப்படும் என்பதால் தூக்கி எறிந்துவிட்டார். டிரம்பட் கற்றுக்கொண்டு நாடகம் மற்றும் இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்ப ஊதியம் பெற்று வந்தார். பின்பு வானொலி நாடகங்களுக்குப் பின்னணி இசையை உருவாக்கியதன் மூலம் பிரபலமாகத் துவங்கினார். அங்கிருந்தே திரையிசைக்கு அறிமுகமானார். இத்தாலிய ஒலிபரப்பு சேவையான RAIவுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். ஆகவே அவர்களுக்காகத் தொடர்ந்து இசைப்பதிவுகளை மேற்கொண்டு வந்தார்.

ஜான் ஹுஸ்டன் இயக்கிய பைபிள் படத்திற்கான ஒரு இசைக்கோர்வையை உருவாக்க அழைக்கப்பட்ட போது கடவுள் உலகைச் சிருஷ்டித்த பகுதிக்காக 15 நிமிட இசைக் கோர்வையை எழுதினார்

ஆனால் படத்தில் அவர் பணியாற்ற இத்தாலிய ஒலிபரப்பு சேவை அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஜான் ஹுஸ்டன் படத்தில் பங்குபெற முடியவில்லை.

பின்பு இத்தாலிய ஒலிபரப்பு சேவையிலிருந்து விலகி ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். நிறைய ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்த போதும் தனக்கு மிகக் குறைவாகவே ஆங்கிலம் தெரியும் என்கிறார் மோரிகோன் இது போலவே. ஹாலிவுட் திரைப்படங்களுக்குத் தொடர்ந்து இசை அமைத்த போதும் அவர் வாழ்நாள் முழுவதும் இத்தாலியில் வாழ்ந்தார்.

மோரிகோன் செஸ் விளையாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர். சொந்த வாழ்க்கையின் சிக்கல்கள். பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளச் சதுரங்க விளையாட்டு மிகவும் உபயோகமாக இருக்கிறது என்கிறார். தனிப்பட்ட முறையில் செஸ்விளையாடுவது மட்டுமின்றிச் சதுரங்க போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளை ஆவணப்படத்தில் காணுகிறோம். பெருந்திரளாக மக்கள் கூடி அவரைக் கொண்டாடுகிறார்கள்.
பெர்டோலூசி, பசோலினி, பிரையன் டி பால்மா , டெரன்ஸ் மாலிக், ஆலிவர் ஸ்டோன், க்ளின்ட் ஈஸ்ட்வுட், குவென்டின் டரான்டினோ ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். அது போலவே ஸ்டான்லி குப்ரிக் படத்தில் பணியாற்ற முடியாமல் போன வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஹான்ஸ் ஜிம்மர், ஜான் வில்லியம்ஸ் மற்றும் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் போன்ற இசைக்கலைஞர்கள் அவரது இசை எவ்வளவு தனித்துவமானது என்பதைப் பற்றிக் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு எந்த இசை பொருத்தமானது என்பதில் மோரிகோன் எப்போதுமே ஒரு உள்ளுணர்வைக் கொண்டிருந்தார் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். செவ்வியல் இசையைத் திரைக்கு ஏற்ப உருமாற்றிக்கொடுப்பது எனியோ மோரிகோனின் சிறப்பாகும்.

இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் இந்த ஆவணப்படம் மேஸ்ட்ரோ எனியோ மோரிகோனிற்குச் செலுத்தப்பட்ட சிறந்த சமர்ப்பணமாகும்.

நன்றி : முக நூலில் சந்திர பிரபா ராமகிருஷ்ணன்