
தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது நீங்கள். எனக்கு எதற்கு காசோலை…” என்று சின்னக் குத்தூசி அக்காசோலையைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். விடாப்பிடியாக “எனக்குத் தெரியாது. அலுவலகத்தில் கொடுத்தார்கள். நான் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்…” எனக்கூறி அந்நிருபர் மேசையில் காசோலையை வைத்திருக்கிறார்.
அப்போதுதான் தனக்கு வங்கிக்கணக்கே இல்லையென்னும் தகவலை சின்னக்குத்தூசி தெரிவிக்கிறார். அதன்பின் அக்காசோலை, பணமாகத் திரும்பி வந்திருக்கிறது. அதையும் அவர் பெற்றுக்கொள்ளாமல், பத்திரிகை வாயிலாக உதவி கேட்டிருந்த ஒரு சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு அப்பணத்தை அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். உதவி செய்வதே இதயத்திற்கான சிறந்த சிகிச்சையென சின்னக் குத்தூசிக்குச் சொல்லியா தர வேண்டும்? இளம் பத்திரிகையாளர்களை வாஞ்சையுடன் வரவேற்கும் அவர், ஒருபோதும் தம்முடைய கருத்துகளை அவர்களுக்குள் திணித்ததில்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை முடிந்தவரை தெளிவுபடுத்தும் பணியையே செய்திருக்கிறார்.
ஆற்காடு வீராசாமி நடத்தி வந்த ‘எதிரொலி’யிலும் சின்னக்குத்தூசி சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ‘எதிரொலி’யை நடத்திவந்த வீராசாமியின் சிரமங்கள் சின்னக் குத்தூசிக்குத்தெரியாமல் இல்லை.கடனில் எதிரொலித்துக் கொண்டிருந்த அப்பத்திரிகையில், சம்பளம் வாங்காமல் பல மாதங்கள் உருண்டோடி இருக்கின்றன.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சின்னக் குத்தூசியின் தந்தை மரணமடைந்து விடுகிறார். ஊருக்குச் செல்லவே பணமில்லை என்னும் நிலையில், எங்கெங்கோ இரண்டாயிரம் ரூபாயைப் புரட்டி வீராசாமி தந்திருக்கிறார். கைக்கு வந்த இரண்டாயிரம் ரூபாயில் தந்தைக்கான இறுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்புகிறார் சின்னக் குத்தூசி. ஆனால், அவருக்கு முன்பாகவே அவருடைய திருவாரூர் நண்பர்கள் இறுதிக் காரியத்திற்குத் தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். ஒரு மகனாக அவர் செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறாதவாறு அவரைத் தாங்கிப்பிடித்த நண்பர்களும் அவரைப் போலவே இருந்திருக்கிறார்கள். நாமெப்படியோ அப்படியே நமக்கு நண்பர்கள் வாய்ப்பார்கள் என்பது பொய்யில்லை.
வெறும் இரண்டாயிரத்தை மட்டுமே கொடுத்தனுப்பி இருக்கிறோமே, அது போதாதே என வீராசாமி ஒருபுறம் வருந்திக் கொண்டிருக்க, சின்னக்குத்தூசியோ எல்லா செலவுகளையும் நண்பர்களே பார்த்துக்கொண்டார்களென கொண்டுபோன இரண்டாயிரத்தை மறுபடியும் அவரிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தில், நின்றுபோக இருந்த ‘எதிரொலி’மீண்டும் வந்திருக்கிறது. தேவைக்குக்கூட பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவழிக்கும் குணம் சின்னக் குத்தூசிக்கு இருந்திருக்கிறது. அறம் சார்ந்து வாழ்வதென முடிவெடுத்துவிட்ட ஒருவர், எந்த இக்கட்டிலும் அதிலிருந்து வழுவுவதில்லை. கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பார்த்தால்கூட சின்னக் குத்தூசி, அண்ணாந்து பார்க்கத்தக்க உயரத்தை எட்டிவிடுகிறார்.
-கவிஞர் யுகபாரதி (குங்குமம் இதழில் தொடராக வந்த ஊஞ்சல் தேனீர் தொடரில் இருந்து)
–

மகத்தான மனிதர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.