நாம் நமக்கு தெரியாமலேயே …/சோ.தர்மன்

நாம் நமக்கு தெரியாமலேயே எப்படி குற்றவாளியாகி விடுகிறோம் அதற்கு சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்படி வாய்ப்பாக அமைந்து விடுகின்றன என்பதற்கு இந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களைப் பாருங்கள்.
1.கோவில்பட்டியில் மதியழகன் ஓட்டலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.மதியழகன் தி.மு.க.வில் முக்கிய புள்ளி.தினமும் கோவில்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு காலையில் குளிக்கப் செல்வது வழக்கம்.அன்றைக்கு குளிக்கப் போனவர் தன்னுடைய செருப்புக்களை மறந்து போய் கிணற்றடியிலேயே விட்டுவிட்டு போய்விட்டார்.
மத்தியானம் அதே கிணற்றில் உடம்பில் காயங்களுடன் ஒரு ஆண் சடலம் மிதக்கிறது.போலீஸ் அந்த ஒரு ஜோடி செருப்பைக் கைப்பற்றி விசாரணையை தொடங்க மதியழகன் சிக்குகிறார்.எத்தனையோ முக்கிய புள்ளிகளெல்லாம் எடுத்துச் சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை.காவல்துறை இரண்டு கேள்விகளை முன் வைத்தது.
அவர் மிதந்த பிணத்தை பார்த்துத்தான் செருப்பை விட்டுவிட்டு ஓடியிருக்கிறார் ஏன் காவல்துறைக்கு தகவல் சொல்லவில்லை.
இரவு அந்த நபரை கொன்று கிணற்றில் வீசும் போது ஏன் செருப்பை விட்டுச் சென்றிருக்கக் கூடாது?
இந்த வழக்கிலிருந்து வெளிவர அவர் ஓட்டலை மூடியதையும் தன் சொந்த வீட்டை விற்றதையும் அப்புறம் அவர் காலமானதையும் என்னுடைய “கூகை”நாவலில் அந்த போலீஸ் அதிகாரியின் உண்மையான பெயருடன் பதிவு செய்திருப்பேன்.

  1. அதிகாலை நேரம்.அந்தப் பள்ளிக் கூடத்திற்கு மாணவமாணவிகள் சென்று கொண்டிருக்கிறார்கள்.பெற்றோர்கள் டூ வீலரில் பிள்ளைகளை இறக்கிவிட்டு டாட்டா காண்பித்து செல்கிறார்கள்.தன் குழந்தையை இறக்கிவிட்டு புறப்பட்ட ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் வந்து ஒரு உதவி கேட்கிறாள்.
    “ப்ளீஸ். மேம் என்செல்போனை வீட்டில் வைத்து விட்டு வந்திட்டேன்.அவசரமா ஒரு தகவல் சொல்லணும் ஒன் மினிட் செல் போன் கொடுங்க”
    பேசினாரோ பேசவில்லையோ அடுத்த நிமிஷமே போனைக் கொடுத்து விடுகிறார்.செல்போன் கொடுத்த அந்தப் பெண் நேராக மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்குப் போகிறார்.வீட்டில் போலீஸ் வேன் நிற்கிறது.பார்த்ததும் பதறிப் போகிறார்.
    “மேடம் இது உங்களோட செல் நம்பர் தானே”
    “ஆமா சார்”
    “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரெயில்வே லைன் பக்கத்துல ஒரு மர்டர் நடந்திருக்கு கொல்லப்பட்டவரோட செல்போன்ல கடைசியாக உங்கள் நம்பர் தான் பதிவாகியிருக்கு ஸ்டேஷனுக்கு வாங்க உங்களை விசாரிக்கணும்”
    இரண்டு பெண்குழந்தைகளும் அந்த தாயும் நிலை குலைந்து போகிறார்கள்.கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.அந்தப் பெண் அரசு ஊழியர்.மாலையில் செய்தித்தாள்களில் செய்தி.
    “கள்ளத் தொடர்பில் வாலிபர் படுகொலையா?”
    என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை.ஒரு மாசம் லீவு எடுத்துக் கொண்டு கணவர் வருகிறார்.அவருடன் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள்,உயரதிகாரிகள் திரண்டு வருகிறார்கள்.இதிலிருந்து மீண்டு வர அவர்கள் பட்ட பாடுகள் செலவழித்த தொகை தலை சுற்றும்.ஒரு பாரம்பரியமிக்க குடும்பப் பெண் ஒரே நிமிஷத்தில் நடத்தை கெட்டவளாகவும் கொலைகாரியாகவும் ஆக்கப்பட்டால்.எப்படி தாங்கிக் கொள்வாள்.மூன்று மாதங்கள் தொடர்ந்து மனநல சிகிச்சை பெற்றும் இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் ஆயிற்று.அவருடைய கணவர் போற்றப்படக் கூடியவர்.வீண் பழி என்பதும் தன் மனைவி அப்படிப்பட்டவர் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு போராடினார்.அந்த குடும்பம் காப்பாற்றப்பட்டது.
  2. கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு.தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.கோவில்பட்டியிலிருந்து நகைத்தொழில் செய்ய கோயம்புத்தூர்போன இரண்டு நகைத்தொழிலாளர்கள் காலையில் ஒரு டீ கடையில் பேசிக்கொண்டே டீ குடிக்கிறார்கள்.அப்போது ஒரு ஃபோன் வருகிறது.எடுத்துப் பேசுகிறார்.
    “பாலம் கட்டியாச்சு குண்டும் வச்சாச்சு ஊத வேண்டியதுதான் பாக்கி ஊதியாச்சுனா சோலி முடிஞ்சது இன்னைக்கு ராத்திரியே கூட நம்ம இங்கேயிருந்து எஸ்கேப் ஆகிறலாம்”
    பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சி.ஐ.டி.போலீஸ் இருவரையும் அள்ளிக் கொண்டு போயிற்று.அவர்கள் பேசியது நகைத் தொழில் சம்பந்தமான சங்கேத வார்த்தை என்பது போலீசுக்கு புரியவில்லை.அப்புறமென்ன கோவில்பட்டியிலிருந்து நகைத் தொழிலாளர் சங்கம்,நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் எல்லாம் கோயம்புத்தூர் போய் முக்கியப் புள்ளிகளை சந்தித்து அந்த அப்பாவித் தொழிலாளர்களை வெளியே கொண்டு வர பெரும்பாடும் பெரும் செலவும் ஆயிற்று.
    உதவிகள் உபத்திரமாக மாறுவதும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் நம்மை குற்றவாளியாக்குவதும் விதி என்றுதான் கொள்ள வேண்டும்.வேறென்ன சொல்ல.

எழுதியது – சோ. தர்மன்

சேகரிப்பு – மகேஸ்வரி