தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள்

நா. விச்வநாதன்

‘காயாத கானகத்தே……..’—கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமே முறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.

சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது.40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படிபல காணமற்போய் 18 மட்டுமே கிடைத்திருக்கிறது.உப்பு ஸ்டோர்ஸில் வேலைபார்த்ததை உதறிவிட்டு வண்ணச்சரபம்தண்டபாணிசுவாமிடம் இசைபயின்றார்.

தீவிரமுருகபக்தராகி இடுப்புவேஷ்டியில்உலவி தான் துறவி என்றறிவித்தார்.புதுக்கோட்டை கஞ்சிரா வித்வான் மான்பூண்டியாப்பிள்ளையிடம் வந்து சேர்ந்தார்.மான்பூண்டியாப்பிள்ளை கஞ்சிரா வாசிக்க சுவாமிகள் பாடுவாராம்.புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை போன்றவித்வான்களின் இசைச் சதஸ் கோலாகலமானது என்பர்.வேலு நாயர்,ஜி.எஸ் முனுசாமி நாயுடு,ஜெகந்நாத நாயுடு என இசையாளர்கள் தொடர்பில் சுவாமிகள் இசைந்திருந்தார்.ராமுடு ஐயர்,கல்யாணராமஐயர்,சாமி நாயுடு போன்றோர் நாடகக்கம்பெனிகள் வைத்திருந்தனர்.அவர்கள் நட்பும் நாடகக்கலையில் ஈடுபாடுகொள்ளவைத்தது.’

மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை என்ற நாடக சபாவை ஆரம்பித்தார். சிறார்களுக்கென்றே ‘பாலர் சபா’வை ஏற்படுத்தினார்.தமிழ்முதல் நாடகமான காசிவிஸ்வநாத முதலியாரின் டம்பாச்சாரி என்ற நாடகத்தை அறிந்திருந்தார்.அதையொட்டியநாடகப்போக்கை விலக்கி ஏற்கெனவேமக்கள் மத்தியில் சிறப்பாக புழங்கிக்கொண்டிருந்த உருக்கமானகதைகளையே தேர்ந்தெடுத்தார்.இராமநாடகக் கீர்த்தனைகள்,காவடிச்சிந்து ,கதாகாலட்சேபப்பாடல்களைத் தேர்ந்தெடுத்தார்.இசைநாடகங்கள். இசைக்கு விளக்கமாகவேவசனங்கள் அமைந்திருந்தன.

மக்களைக்கட்டிப்போட்டது.நாடகமேடையை ஒரு புனிதக்கோயிலாக மாற்றினார்.அபிமன்யூ,பவளக்கொடி,சுந்தரி,நல்லதங்காள்,லலிதாங்கி போன்ற நாடகங்கள் பிரசித்தமானவை‌.இவரது நாடகங்களில் இசைதான் முதன்மைப்படுத்தப்பட்டது.நாடகமே இசையாலானதுதான்.

நல்லநடிப்பாற்றல்.பொலிவான தோற்றம் கொண்டிருந்ததால் யமன்,இரணியன்,கடோத்கஜன் போன்ற பாத்திரங்களில் நடித்தார்.இவரது உச்சபட்ச ஆவேசநடிப்பைக்கண்ட பெண் ரசிகை ஒருத்திநாடகக்கொட்டகையிலேயே மயங்கிவிழுந்து கர்ப்பம் கலைந்ததால் அன்றிலிருந்து நடிப்பையே விட்டார். நாடகங்கள் பாடல்கள் எழுதிப் பயிற்சி கொடுக்கஆரம்பித்தார்.ஒரே இரவில் முழு நாடகத்தையும் அழகாக எழுதிவிடும் ஆற்றல்பெற்றிருந்தார்.

சுவாமிகளால் நிறையப்பாடல்கள் புதுப்பொலிவைப்பெற்றன‌.”எத்தனை நேரமாக…” தன்யாசி,”சத்யவான் மீ துனக்குஆசை ஏன்?பீம்ளாஸி,”கழுத்தில் விழுந்தமாலை..” இந்துஸ்தானி காபி,”தேங்காய்உடைந்துபோச்சே..”முகாரி,”சத்வ குணபோதன்..”எப்போ வருவாரோ..”காதல்கனிரசமே” போன்றபாடல்கள் எங்கும்ஒலிக்க ஆரம்பித்தன.சங்கரதாஸ் சுவாமிகள் புயல் எனலாம்.சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடவில்லையாயினும் இவரதுபாடல்கள்–அதற்குத்துணையாக பிறர்பாடினர்.”கதர்க் கொடி கப்பல் தோணுதே..” பாடலை விஸ்வநாததாஸ் பாடியதைப்போல.

ஞானபழத்தைப்பிழிந்து..”இன்றளவும் ஈர்க்கும் பாடல்.சதி அனுசூயா,சரஸ்வதி சபதம் போன்ற நாடகங்களின் தாக்கத்தால் நாடகக் கூறுகளோடு சினிமாவாக வந்தன.பாரம்பரிய வட்ட அரங்கை ஒருபக்க அரங்காக சுவாமிகள் மாற்றினார்.பம்பல் சம்பந்தமுதலியாரின் மனோகரனுக்கு பாட்டெழுதினார்.

உடுமலைச்சரபம்முத்துசாமிகவிராயர்,குடந்தை வீராசாமி வாத்தியார்மதுரகவி பாஸ்கரதாஸ், பாலாமணிஎன ஏகப்பட்ட சக நண்பர்களோடு சதாநாடகங்களை மேம்படுத்துவது பற்றிஉரையாடினார்.”தேவரும் மகிழும் நாடகம்சீர்கெடுப்போச்சு..என்ற வசை வரக்கூடாதென்று கவலையுற்றார்.

தமிழ்மொழியை முன்னெடுத்தார்.கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும்என்றார்.”பவள சேனா மந்திரி/ இப்பாரினிலே/ உள்ள ஆலயங்கள் தோறும்/பூஜிக்கின்றனர்/ அந்தணர் யாரும் ஆறுகாலம் தோறும்/ தந்த மேள வாத்ய கோஷ்டியாய் எல்லோரும் / செந்தமிழ்த் தேவாரம் திருப்புகழ் அலங்காரம் செப்புமுறைஒப்பிடவே தப்பிதம் அல்லாமல்…”என்றுபாடினார்இயற்கை ஒலிகளை எவ்வாறு தமிழாக்கிஅழகுபடுத்துகிறார்.பம் பம் பம்..தும்பியெல்லாம் தும் தும் தும் என்று ஒலிக்கின்றன.

தாளவகை மல்லாரி கடிகைகளோ தீம்தீம்..என்று சப்திக்கின்றன.இவை எல்லாஒலிகளையும் ஒன்று கூட்டி தும் பம் தீம்தோம் – தும்பத்தீம்தோம் துன்பம் தந்தோம் என்று பொருள் கொள்ள வைத்தார்.கூந்தல் நீருண்ட மேகம் போலிருக்கும்நீளம், கொஞ்சமல்ல பத்து பாகமிருக்கும்என்று பவளக்கோடியில் வர்ணிப்பார்.அம்மானைப்பாடல்களையும் தெருக்கூத்துப்பாடல்களையும் பழங்கதைகளாயிருந்தவற்றை நாடகங்களாகக் காட்சிப்படுத்தினார்

அவற்றின் பழமை மாறாமல்.பவளக்கொடி,சீமந்தினி,சதி அனுசூயா,பிரகலாதன், சிறுதொண்டர்,வள்ளித்திருமணம்,சத்யவான் சாவித்ரி என நீளும்.அரிச்சந்திரா மயான காண்டம்,பாதுகாபட்டாபிஷேகம்,இராம ராவண யுத்தம்வாலிமோட்சம் முக்கியமானவை.சினிமா வந்தபிறகும் சுவாமிகளின் தாக்கத்தோடுதான் ஆரம்பசினிமாக்கள் வந்தன.

மற்றவர்களைப்போல சுவாமிகள் காணாமற்போகவில்லை.காரணம்அவ்வை சண்முகத்தின் பிரவேசம். பேரா.வீ அரசு போன்றவர்கள் -பேசும்போதெல்லாம் சுவாமிகளை நினைவுகூறும் இசையறிஞர்அரிமளம் பத்மநாபன் போன்றவர்களும்காரணமாகின்றனர். காணாமல்போனதாகச் சொல்லப்படும் பிரதிகளை மீட்டெடுப்பது இவர்களின் பணியாகும்

.”அபசாரம் செய்யும் பகைவனும் வீடுவந்தால் உபசாரம் செய்யவேணும்” என்றுபாடுவார் சுவாமிகள்.ஒரு சகாப்தமாகவாழ்ந்த சுவாமிகளுக்கு இன்னும் வெளிச்சம் வேண்டும் என்பது பேராசையல்ல.* நன்றி செலுத்துதல்தான்.

One Comment on “தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள்”

  1. அருமையான தகவல்களைத் தந்திருக்கிறார் திரு.நா.விசுவநாதன். சுவாமிகள் வாழ்ந்த காலத்தை
    குறிப்பிட்டிருக்கலாம். ஏறக்குறைய பாரதி காலத்தவரா?

Comments are closed.