தனியாக ஒரு வீடு/ஜான்னவி


அருகே கடல்

ஊருக்கு ஒதுக்குப்புறம்
தனியான இடம்
இதுவே அது.

அந்தஇடமா
தண்ணீர்பிரச்னை தாராளம்
குழாயில் முக்காலும் வருவது காற்று மட்டும்.
தெரிந்தவர்
தெரியாதவர் எச்சரிக்கை விடுக்க
கவலையில்
மனைவியும் அதே
பல்லவி பாட

கண்முன் விரியும்
கனா என்னை தன்னுள் இழுக்க

தாழ்வான பகுதி
இது மட்டும்
குளமிருந்ததோ
முன்பு

கேள்விகளையும்
பயத்தையும்
குழியில் தள்ளி
கோலோச்சுகிறது
அடங்காத ஆசை.

சுற்றிலும் அமையப் போகும்
தோட்டத்துடன்
என் கனவு வீடு.
மிக அருகிருக்கும் வீடுகள் ஒரு
கிலோமீட்டர் தூரத்தில்

நிம்மதியான தனிமை
மனைவி முரணான கருத்துக்களையே
முன்வைக்க என்
முன் கோபம் அவற்றை
முறித்துப் போடுகிறது

பிரச்னைகளை
சமாளிக்கலாம்
சொல்கிறது ஆசை.

சமாளிப்பிலும்
தண்ணீருக்குச்
செலவழிப்பதிலும்
கரைந்தது காசோடு காலமும்

ஒருவருக்கு தனிமை இனிமையும்
மற்றொருவர்க்கு
தனிமைச் சிறையுமாக

வெள்ளம் வந்தது
எதிர்பாராது கொட்டித்தீர்த்த
மழையில்
தனியான வீடு
தண்ணீர் நிரம்பிய
வீடானது.

அதோ கிடக்கிறது கடல்
இதோ வீட்டின் பின் ஆழ்கிணறு
நீர் நிறைந்து
எதிரே தோப்பின்
நடுவே புதிதாக
ஓர் குளம்

தண்ணீருக்குப்
பஞ்சமேயில்லை

இப்போது
கண்ணீருக்கும்.

ஊர் ஜனம் மனம்
நிறைந்திருக்கிறது
என் இதயம்
கனத்திருக்கிறது.

கண்களை மூடிக்
காண்கிறேன்
இவ்வளவு தண்ணீருக்கும்
கீழ்
மண்ணின் அடி ஆழத்தில்
மறைந்திருக்கும்
அவளை
வீட்டினுள் இருந்து
விட்டவளை

அதோ கிடக்கிறது
கடல்
வீட்டின் முன்னே
குளம்
இதோ பின்னால்
கிணறு நீர் நிறைந்து
தண்ணீருக்குப்
பஞ்சமேயில்லை இப்போது

கண்ணீருக்கும்.

ஊர் ஜனம் மனம்
நிறைந்திருக்கிறது
என் இதயமோ
கனத்திருக்கிறது.