
எங்கோ சென்று வந்ததுபோல்
ஆகிவிட்டது வாழ்விடம்
என்வசமிருந்தாலும் கைகொள்ள முடியாமல் போனது
நினைவின் ஒரு பகுதி
எதிரிலுள்ள பழைய இல்லத்தின் தகர்ந்த மேல்தளத்தை
புதிதாய் நிர்மாணிக்க வேகய்ந்துள்ள கம்பிகளின் மீது
காகங்கள் அமர்ந்து கரைந்து எச்சமிட்டு செல்கின்றன
பணியாளர்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கியுள்ளனர்
எம் சாண்ட் குவியல்மீதிருந்து இறங்கிய
கட்டிட பணியாளர்கள் இருவர்
செம்பிலுள்ள தேநீரை குவளையில் ஊற்றி பருகிவிட்டு
மெல்ல ஹாலோ ப்ளாக்குகளை எடுத்து
அடுத்தவரிடம் கொடுக்கின்றனர்
நம்ம பகுதியில் அதிநவீன மால் ஒன்றின் வருகையைப் பற்றிய பேச்சுகளுக்கிடையில்
தொலதூரத்தில் தென்படும் இராட்சத பாரம்தூக்கியில்
தொங்கிச் செல்லும் கான்கிரீட் பலகைகள்
பறக்கும் பாறைகளாக தோன்றுகின்றன
புறநகரின் விளிம்புகள் காணாமைக்குள் அமிழ்கின்றன.
