
வேறு நாய்களை
விரட்டிவிட்டு
நொண்டிக்குத் தான்
இரவில் மீந்ததைப் போடுவார்கள்
நொண்டி நாய்க்கு
மனிதர்களிடம் அன்னியோன்யம்
அதிகம்
மனிதனின் உடல்மொழியைக்
கூட அறிந்துகொள்ளும்
கட்டாயம் அடுத்த பிறவியில்
மனிதனாய் தான் பிறக்கும்
நொண்டி இங்கே
எப்படி வந்தது என்பதைப்பற்றி
ஆளாளுக்கு ஒரு
கதை சொல்வார்கள்
நொண்டி என்பது
தன் உடல்ஊனத்தைக் குறிக்கும்
என்று அதற்குத் தெரியாது
நாய்களுக்கு கடவுள்
வால் வைத்திருப்பது
நன்றியினைத் தெரிவிக்கத்தானோ
நள்ளிரவில்
போதையில் அதிவேகமாக
சென்ற வாகனம்
தெருவில் படுத்திருந்த
நொண்டி மீது ஏறி இறங்கியது
அலறல் கேட்டு எழுந்தவர்களெல்லாம்
தலையில் கைவைத்துக் கொண்டார்கள்
இதுதான் எங்கள் நாடார் தெரு
நொண்டித் தெருவான வரலாறு!
