
விருந்துகளில் அளவோடு குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது உடல்நலத்திற்குப் பெரிய கெடுதலை விளைவிக்கப் போவதில்லை என்பதான கருத்து உள்ளது.
ஆனால் அளவோடு குடிப்பது என்பதில் தான் எல்லாமே தொடங்குகிறது. மொடாக் குடியர்களாகி, வீட்டைக் கவனிக்காமல், தன் நண்பர்களில் எவன் குடிக்கக் கடன் தருவான் என்று ஓரக்கண்ணால் பார்த்து, பல பொய்களைக் கூறிக் கடன் என்ற பெயரில் யாசிக்கும் இழிவான நிலைக்கு ஓர் எழுத்தாளரைத் தள்ளுவது, முதலில் அந்த நபர் குடித்த விருந்துக் குடியில் தான் ஆரம்பமாகிறது.
மன உறுதியோடு விருந்துகளில் மட்டுமே குடிக்கும் எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே. எப்போதுமே குடிக்காத எழுத்தாளர்களும் மிகச் சிலர் இருக்கிறார்கள்.
எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாமல் வேறு நல்ல வேலையில் இருந்துகொண்டு எழுதுபவர்கள் குடித்தால், அதனால் குடும்பம் அதிகம் சிரமப்படுவதில்லை. ஆனால் எழுத்து, பத்திரிகை போன்ற தொழில்களில் மட்டுமே ஈடுபட்டிருப்பவர்கள் குடிகாரர்களாகி, தங்கள் சொற்ப வருவாயையும் குடியில் அழிக்கிறபோது குடும்பம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டதுபோல் பொருளாதார வளமின்றி நடுநடுங்குகிறது.
குடிகார எழுத்தாளர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் அவர்களின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அவர்களோடு போகும். அவர்களின் மோசமான பழக்கத்திற்கு அவரவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்ற அளவில் அது நின்றுவிடும்.
ஆனால் குடிக்கிற எழுத்தாளர்களைக் கட்டிக்கொண்ட மனைவி படுகிற பாடு சொல்லும் தரமுடையது அல்ல. மானமிழந்து மதிகெட்டு என்கிறார்களே, அப்படி எல்லா வகையான அவமானங்களையும் அந்த மனைவியும் குழந்தைகளும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
- திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி: தினசரி.காம்
முகநூலில் செய்தி அளித்தவர் : ஆர்.கந்தசாமி

உண்மையான பதிவு. ஒரு தலைமுறையை மது பழக்கத்திற்கு அடிமையாக்க அரசு அதன் மூலமாக சம்பாதிப்பது நியாயமாக இல்லை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறும் உலகில், உயிரைக் கொல்லும் நஞ்சாகவே கருதும் அளவுக்கு மிஞ்சிய மது எதற்கு? எழுத்தாளர்கள் என்ன? எவருக்கும் இது பொருந்தும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று என்று நன்குணர்ந்த அரசேன, காந்தி படம்போட்ட தாள்களை வசூலிக்க காந்தியத்தை விற்றுவிட்டது.
– கு.மா.பா.திருநாவுக்கரசு