
தமிழின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர் ந.முத்துசாமியின் பிறந்த தினம் இன்று. அவர் எழுத்தில் பாசாங்கு,ஆடம்பரம் கிடையாது. அவர் கதைகளைப் பற்றி அவரே குறிப்பிடுவதுபோல (நீர்மை தொகுப்பு முன்னுரையில்) “நீர்மையின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டிவிடப்பட்டிருக்கின்றன.”
புஞ்சை கிராமத்து வாழ்க்கைதான் அவருடைய கதைகளில் வெளிப்படுகின்றன. வைக்கோல் மணமும், மத்தியான வெய்யிலின் உக்கிரமும், மாட்டு வண்டியின் ஓசையும், கிராமத்து தெரு புழுதியையும் இவரைப்போல் எழுத்தில் கொண்டுவந்தது எவரும் இல்லை. அப்பாவின் பள்ளிக்கூடம், சுவரொட்டிகள்,நீர்மை,யார் துணை போன்ற சிறுகதைகள் அபாரமானவை. அவருக்கும் அவர் கிராமத்திற்கும் உள்ள நெருக்கத்தை நீர்மை தொகுப்பு முன்னுரையில் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் என படித்துப்பாருங்கள். ” இது புஞ்சைக்கும் எனக்கும் உள்ள உறவுமுறையில் உள்ள ஒரு சிக்கல். எப்போதும் அது வெளியீட்டுக்கு மனதில் காத்துக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் சொல்லி அதற்கு அடையாளம் உண்டாக்க வேண்டும் என்ற வற்புறுத்தலோடு இருந்துகொண்டிருக்கிறது. `நை… நை என்று அலுத்துக்கொண்டு சவலைக்குழந்தையைப்போல இருக்கிறது. அதற்கு உண்டான இடத்தில் அது இருக்க வேண்டும். அதற்கு பெரிய இடமாக வேண்டுமாம். எல்லாக் கதைகளிலும் வந்தாலும் ஆசை தீர்ந்துபோய்விடவில்லை. நாடகங்களிலும் வர வேண்டுமாம்.”
அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தாலும் அவர் பிறந்த கிராமம் அவர் நினைவிலிருந்து அகலவே இல்லை. இதை அவரே விவரிக்கிறார் ” “ஒரு காலகட்டத்தோடு வளர்ச்சி குன்றிப்போனதாக பழைய மனிதர்களால் நிரம்பியதான அது, நிகழ்காலத்தில் வந்து அழுகிறது. எனக்கு அதன் நிலை புரிகிறது. என்றாலும் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரே ஓலம். அதைவிட்டு நான் விலகி வந்துவிட்டேன். அது வேறு மனிதர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. அவர்களோடு நான் சேர்ந்து வளரவில்லை என்பதால், எல்லோரும் எனக்கு அந்நியமாகிவிட்டார்கள். பழைய மனிதர்கள் ஒவ்வொருவராக உதிர்ந்துபோய்விட்டார்கள். ஊர் எனக்கு சொந்தமாகத் தோன்றினால், அதன் இன்றைய குடிமக்களுக்கு நான் அந்நியமானவனாகவே தோன்றப்போகிறேன் என்ற அவலத்தை நினைத்து மனம் புழுங்குகிறேன்.” அவர் நாவல் எழுதாதது தமிழுக்கு பேரிழப்பு. தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான கூத்துக்கலையை செழுமையாக்கியவர்.கூத்துக்கலைக்காக அயராமல் உழைத்தவர். சாவுக்கு அடிக்கப்படும் ‘பறை’ என்ற இசைக்கருவிக்கு கவுரவத்தை வழங்கியவர். அவருடைய கணீர் குரல் அவருக்கு வரப்பிரசாதம். துணுக்குத் தோரணமாக மாறிய நாடககக்லையை நவீனத்துவமாக மாற்றி அரங்குக்கலையையும் செழுமையாக்கியவர்.(இன்று தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் பசுபதி, சோமசுந்தரம், முத்துக்குமார், விஜய் சேதுபதி போன்ற பல அசாத்தியமான நடிகர்கள் அவருடைய கூத்துப்பட்டறையில் செதுக்கப்பட்டவர்கள்). நாற்காலிக்காரர், இங்கிலாந்து போன்ற நாடகங்கள் தனித்துவமானவை. தமிழ் பண்பாட்டுத் தளத்தில் அவர் ஆற்றிய அரும்பணிகள் ஈடு இணையற்றது. தமிழ் ஆகக்சிறந்த ஆளுமை.
