
மதிப்பிற்குரிய நிர்வாகி,
உங்கள் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று ரத்னா ஸ்டோர் கடைக்கு நேர் எதிரே அந்த நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே தன் ஹாண்ட் பேகைத்தவற விட்டதைப்பார்த்தேன். அதுபற்றி அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும். நேற்று எந்தப்பெண் ஊழியர் பாண்டி பஜாருக்கு வந்தார் என்பதை தயவு செய்து விசாரித்து அவரின் முகவரியை எனக்குத்தெரிவிக்கவும்.
இப்படிக்கு
அருண்
திரு அருண்
உங்களின் நேர்மைக்கு எங்கள் பாரட்டு. நேற்று பாண்டி பஜார் வந்து ஹேண்ட் பேகைத்தவறவிட்டவர் அனுசூயா என்னும் எங்கள் நிறுவன டைப்பிஸ்ட். இதோ அவர் முகவரி.
மீண்டும் பாராட்டுக்கள்
இப்படிக்கு
நிர்வாகி
அன்புள்ள அனுசூயா மேடம்,
ஏழாம் தேதியன்று நீங்கள் பாண்டி பசாரில் ரத்னா ஸ்டோர் கடைக்கு நேர் எதிரே அந்த நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே ஹேண்ட் பேகைத்தவறவிட்டதைக் கவனித்து உங்களின் கையிலிருந்த பையில் நிர்வாகத்தின் பெயர் இருப்பதைக்கண்டு அவர்களுக்கு கடிதம் எழுதினவன் நான் தான்.
அன்புடன்’
அருண்
அன்புள்ள அருண் அவர்களுக்கு
ஹேண்ட் பேகைத்தொலைத்துவிட்டு மனம் வருந்திக்கொண்டிருந்த எனக்கு உங்களீன் கடிதம் பெரிய ஆறுதலாய் அமைந்துவிட்டது. இப்போதுதான் நிம்மதியாயிற்று. அதில் கொஞ்சம் பணம் தவிர முக்கியமாக என் வீட்டுப்பத்திரம் வைத்திருந்தேன். நல்ல வேளை நான் தவற விட்டதை நீங்கள் கவனித்து எனக்கு தெரியப்படுத்திவிட்டீர்கள்.
மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.
நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வரலாம்?
இப்படிக்கு
அனுசூயா
அன்புள்ள அனுசூயா
உங்கள் நன்றிக்கு தாங்க்ஸ். என் கடமையைத்தான் செய்தேன். ஆமாம், நீங்கள் ஏன் என் வீட்டிற்கு வர வேண்டும்?
இப்படிக்கு’
அருண்
அன்புள்ள அருண்
விளையாடாதீர்கள். சொன்னேனே, என் வீட்டுப்பத்திரம் அதில் இருக்கிறது என்றூ. எப்போது உங்கள் வீட்டிற்கு வந்து ஹேண்ட் பேகைப்பெற்றுக்கொள்ளலாம்.
இப்படிக்கு’
அனுசூயா
அன்புள்ள அனுசூயா
நீங்கள் ஏன் என் வீட்டிற்கு வர வேண்டும் என்று எனக்கு இப்பவும் புரியவில்லை. நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேனே நீங்கள் ஹேண்ட் பேகைத்தவற விட்ட இடம் ரத்னா ஸ்டோர்ஸுக்கு நேரெதிரே நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே என்றூ!
மற்றபடி நீங்கள் மீண்டும் எனக்கு நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். இது என் கடமைதான்.
இப்படிக்கு
அருண்

ஹஹஹ.சரியான sataire மாடலில் எழுதிய கதை.பர்ஸை தொலைத்தவர் ,தகவல் அளித்த வரிடம் பர்ஸ் இருப்பதாக நினைப்பது யதார்த்தமான உண்மை.