உறவுகள் (பேருந்து படக் கதை)/பி.ஆர்.கிரிஜா

   பேருந்து திடீரென்று பட்டப்பகல் வெயிலில் ஒரு கிராமத்தில் நிற்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை டேவிடும் ரோஸியும். அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து கிராமத்தில் இருக்கும் தங்கள் பெற்றோரை பார்ப்பதற்காக இந்த பஸ்சில் ஏறினார்கள்.

    இது என்ன,?  திடீரென்று இந்த பஸ் இப்படி நின்று விட்டதே என்று ஒரே மன உளைச்சல் இருவருக்கும். ரோஸி இருப்பதோ ஹைதராபாத்தில். டேவிட் பூனேவிலிருந்து கிளம்பி ரோஸி வீட்டிற்கு புறப்பட்டு விட்டான். ரோஸியை விட டேவிட் ஐந்து வயது மூத்தவன். வேலை, திருமணம் குழந்தைகள் என்று ஆன பிறகு இருவரும் சந்திப்பதே அரிதாகப் போய்விட்டது.

   அவர்கள் பெற்றோர்களும் பிடிவாதமாக ஆந்திராவில் விஜயவாடாவில் கொல்லப்புடி என்ற கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த கிராமத்தை விட்டு வர விருப்பமில்லை. டேவிட்டும் பல முறை தன் பெற்றோரைப் தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சித்த போதும் அவர்கள் பிடிவாதமாக வர மறுத்து விட்டனர். ஆனால் திடீரென்று ரோஸியிடமிருந்து நேற்று அவசரமாக ஃபோன் வரவே உடனே கிளம்பி ஹைதராபாதில் உள்ள ரோஸி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ரோஸியின் கணவர் தாமஸ் அவனை வா என்று கூட கூப்பிடவில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரோசியிடம் பேசிக்கொண்டிருந்தான். 

    இருவரும் கொல்லப்புடி செல்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு இரண்டு பஸ் மாறி இந்த தனியார் பேருந்தில் ஏறினார்கள். அந்த கிராமத்திற்கு செல்வதற்கு நல்ல சாலை வசதி கூட கிடையாது. இந்த ஒரு பஸ் தான் அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் வரை செல்லும். இந்த கிராமத்திற்கு செல்லும் எல்லோரும் இந்த பேருந்தையே  நம்பவேண்டிய நிலை.

   அப்பாவிற்கு ஸ்ட்ரோக் வந்து கையை இழுத்துக் கொண்டு விட்டதாகவும் அருகிலிருந்த ஒரு நாட்டு வைத்தியர் ஏதோ மருந்து கொடுத்ததில் அப்பா நல்ல உறக்கத்தில் இருப்பதாகவும் டேவிட்டின் அம்மா ஃபோனில் தெரிவித்ததாக, ரோஸி டேவிட்டிடம் சொன்னாள். 

    இருவருக்குமே ஒரு ஒட்டுதல் இல்லாத உறவுதான். ஒரு வித குற்ற உணர்ச்சி இருவருக்குமே. காலம் எப்படி எல்லாம் மனிதனை மாற்றுகிறது? 

   திருமணம் குழந்தைகள் என்று வந்துவிட்டால் அண்ணன் தங்கை உறவுமா அற்றுப் போய்விடும்?

   இருவருமே தங்கள் இளமைப் பருவத்தை  அசை போட்டுக் கொண்டிருந்தனர் வெயிலின் தாக்கத்தில் தலைவலி வந்ததுதான் மிச்சம்.

    திடீரென்று ஒரு சக பயணி “எல்லோரும் பஸ்ஸில் ஏறுங்கள், பஸ் சரியாகிவிட்டது” என்று சத்தமாகக் கூறவே, சட்டென்று ஒரு நிமிடத்தில் பெருமூச்சு விட்டு டேவிட் ரோஸியை உலுக்கினான். “எழுந்திரு ரோஸி,  நாம பஸ்சுக்குள் போகலாம் எல்லோரும் ஏறியாச்சு பாரு,,,” இன்னும் பத்து நிமிடங்களில் பஸ் புறப்பட்டு விடும். நாமும் நம் கிராமத்திற்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம் என்று அவளை தள்ள மாட்டாத குறையாக பஸ்ஸில் ஏற்றினான். ரோஸியும் வலுக்கட்டாயமாக முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு டேவிட்டின் கையை பிடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாள்.

    வெகு நாட்களுக்குப் பிறகு தன் தங்கையின் ஸ்பரிசம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது. பழைய குழந்தைப் பருவ நினைவுகள் வந்து போனது. “ஆஹா ! என்ன ஒரு அற்புதமான நாட்கள் அவை ! இருவரும் இணைபிரியாது  விளையாடியது, பள்ளிக்கூடம் ஒன்றாகச் சென்றது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது,  ரோஸிக்கு அடிபட்டவுடன் அவளைத் தாங்கிப் பிடித்தது, இப்படி எத்தனையோ நிகழ்வுகள். அவன் மனதில் வந்து போயின.

    அருகில் அமர்ந்திருக்கும் தன் தங்கையையே சில நொடிகள் உற்றுப் பார்த்தான். அவள் கண்கள் லேசாக பனித்திருந்தன. ஆதுரத்துடன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் கெட்டியாக பிடித்துக் கொண்டு மெலிதாக முத்தமிட்டான் டேவிட்.

    அதற்காகத்தான் காத்திருந்தவள் போல் அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் ரோஸி. இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி கூறினான். அவன் அப்பா உடல் தேறி   தன்னுடனேயே தன் பெற்றோர்கள் பூனே வந்துவிடுவார்கள் என்று அவன் உள்மனம் திடமாக நம்பியது. அதை உறுதி செய்வது போல அந்த பேருந்தும் சத்தமில்லாமல் ஓடத் துவங்கியது.

4 Comments on “உறவுகள் (பேருந்து படக் கதை)/பி.ஆர்.கிரிஜா”

Comments are closed.