
அசோக் நகர் 11வது அவென்யூவில் மூன்று. ஆரிய கௌடர் சாலையில் (குறுக்கே வருகிற வீதிகளையும் சேர்த்து) நான்கு. அம்பேத்கர் சாலையில் இரண்டு. நான்காவது அவென்யூவில் இரண்டு. வெங்கீஸ்வரர் கோயிலுக்குப் போகிற வழியில் ஒன்று. லக்ஷ்மன் சுருதியைத் தொடும் ஆர்2 ஸ்டேஷன் ரோடில் ஒன்று.
மூன்று நாள்களாகப் பேய் வேலை. திங்களன்று காலை புறப்பட்டு அலுவலகம் சென்றவன், இப்போதுதான் வீடு திரும்புகிறேன். கிளம்பி வந்த வழியில் கண்ணில் பட்ட பானிபூரிக் கடைகளின் எண்ணிக்கையே மேலே உள்ளது. பிராந்தியத்தில் பல பெரிய உணவகங்கள் மூடப்படுகின்றன. மெட்ரோ பணிகளால் அனைத்துச் சாலைகளும் ஒன்வே என்று சொல்லப்பட்டு, அது ஃபோர் வே, ஃபைவ் வே என்று புரிந்துகொள்ளப்பட்டு எல்லா திசைகளில் இருந்தும் வண்டி வாகனங்கள் இப்போது சீறிப் பாயத் தொடங்கிவிட்டதால் உணவகங்கள் மட்டுமல்லாமல் சில டீக்கடைகளும் மூடப்படுவதைக் காண்கிறேன். அல்லது இட மாற்றமாக இருக்கலாம்.
ஆனால் எப்படியோ இந்தத் தள்ளு வண்டி பானிபூரிக் கடைகளுக்கு மட்டும் கூட்டம் வந்துவிடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மட்டுமல்ல. அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், அலுவலகம் விட்டு வீட்டுக்குச் செல்வோர், மாலை நடைக்கு வருகிற வயதானவர்கள் -பேதமே இல்லை. ஒட்டுமொத்தத் தமிழ் உலகமும் பானிபூரிக்கு அடிமையாகிவிட்டது என்று தோன்றுகிறது.
முன்னொரு காலத்தில் சோப்பு, பேஸ்ட், பாண்ட்ஸ் பவுடர், ஷாம்பு போன்றவற்றைத்தான் FMCG Products (Fast Moving Consumer Goods) என்று சொல்வார்கள். சந்தேகமின்றி இன்றைக்கு பானிபூரிதான் FMCG Product.
எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது. இருந்தாலும் தோன்றியதைச் சொல்லிவிடுகிறேன். மெட்ராஸ் பேப்பர் பானிபூரியைப் போல ஆதரவாளர்களைப் பெற வேண்டும்.
என்ன ஒன்று, பானிபூரி கெட்டது. மெட்ராஸ் பேப்பர் நல்லது.
