இரண்டு பூனைகள்

அழகியசிங்கர்

பத்மநாபன் வீட்டில் இரண்டு பூனைகள் வளர்ந்து வருகின்றன. ஒரு பூனை வெள்ளை நிறம். இன்னொரு பூனை மரம் நிறம்.

வெள்ளை நிறப்பூனையின் பெயர் மியாவ். மரம் நிறத்தில் இருக்கும் பூனையின் பெயர் மியாவ் மியாவ். அதை இரண்டு முறை கூப்பிட்டால்தான் வரும். ஒரு முறை கூப்பிட்டால் வராது. பத்மநாபன் இந்தப் பூனைகளைக் குறித்து எல்லோரிடமும் எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார்.

ஆனால் இரண்டு பூனைகளால் அவருக்கு எந்தத் தொந்தரவுமில்லை. காலைக் கடன்களைக் கழிக்க வேண்டுமென்றால் அவை வீட்டைவிட்டுவெளியே சென்று விடும். இப் பூனைகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்மநாபனின் நண்பர் இரண்டு பூனைகளையும் தன்னிடம் விற்றுவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் நண்பர் ஆசை வார்த்தைக் கூறினார்.


ஒரே ஒரு பூனையை மட்டும் விற்பதற்குச் சம்மதித்தார் பத்மநாபன். அதுவும் முழு சம்மதம் இல்லாமல். மரம் நிறத்தில் இருக்கும் பூனையை மட்டும் விற்பதாகக் கூறியதால் வெள்ளைப் பூனையை பத்மநாபன் வீட்டில் விட்டுவிட்டுப் போய் விட்டார் நண்பர். மரம் நிறத்திலுள்ள பூனை இல்லாமல் தவியாய்த் தவித்தது வெள்ளைப் பூனை. பின் சோகமாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அழுது கொண்டிருந்தது.
அது எந்த உணவையும் தொடவில்லை.


பத்மநாபனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவர் நண்பருக்குப் போன் செய்து அந்தப் பூனையைக் கொண்டு வரச் சொன்னார். அவரும் நான் கொண்டு வந்த பூனையும் சாப்பிடாமல் அடம் பிடிப்பதாகக் கூறினார். அங்கே எடுத்துக் கொண்டு வருவதாகவும் கூறினார்.

அடுத்தநாள் காலையில் இரண்டு பேர் வீடுகளிலும் பூனைகளைக் காணவில்லை.