
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நம்மைப் பாதிப்பார். நம் கவனத்துக்கு வரும் ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும், கருத்தும் நம்மைப் பாதிக்கும். நாம் வாசிக்கும் ஒவ்வொரு நூலும் நம்மைப் பாதிக்கும். குளத்தில் வீசப் படும் கல்லின் அதிர்வு குளம் முழுவதும் உணரப் படுவது போல. சிறிதாகவோ பெரிதாகவோ. அரசியல் மட்டும் எப்படி பாதிக்காமல் இருக்கும்?
ஒரு குடிகாரனோ, பெண்பித்தனோ, சோம்பேறியோ, பொறுக்கியோ எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள மனிதனாக இருந்தாலும் நான் கூச்சமின்றி சுயநலத்தோடு அவனிடமிருந்து கற்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று அலைவேன். எனக்குக் கற்பிக்க எதுவுமற்ற மனிதன் யாருமில்லை. நம் முயற்சி சிறிதும் இல்லாமலும் கூட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைப்படமும், சீரியலும், முகநூல் பதிவும், பிற ஊடகமும் நம்மைப் பாதிக்கும். காலையில் பார்த்த ஒரு முகநூல் பதிவு நாள் முழுவதற்கும் நஞ்சூட்ட முடியும். மொழியும், பண்பாடும் ஒரே நாளில் உருவாகி வரவில்லை. பல நூறு ஆண்டுகளாக திரண்டு அவை நம்மை வந்தடைந்துள்ளன. நமக்கு அவை சிறிதும் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மால் தப்பிக்கவோ, ஒதுங்கியிருக்கவோ முடியாது.
நம் உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள், சுற்றியுள்ள சமூகம் எல்லாரும் நம்மை பாதிக்கிறார்கள். எந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன. ராமாயணத்தில் எந்த காண்டத்தைப் படிக்க வேண்டும் என்பதிலிருந்து எந்த காண்டத்தை பாவிக்க வேண்டும் என்பது வரை.
இந்த பன்முனைப் பாதிப்புகளை நாம் எவ்வாறு கையாள்வது? முழு நம்பிக்கையோடு ஒரு குருவை அணுகினால் தான் முழுமையான பயனைப் பெற முடியும். முழு நம்பிக்கை இருந்தால் தான் முழுக்க ஏமாறவும் முடியும். சிக்கல்தான். நான் ஒரு ஒற்றனை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதில்லை. மாறுபட்ட, தொடர்பற்ற இரு ஒற்றர்களைப் பயன்படுத்துவேன். மனிதன் என்பதால் யாரும் தவறிழைக்கக் கூடும் என்பதை மனதில் கொண்டிருப்பேன்.
மாற்றுக் கருத்து மிகவும் முக்கியம். எல்லோரும் அடித்துச் சொல்வதால் ஒன்று உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தவறாக இருக்க வேண்டுமென்றும். நானே என்னுடைய மோசமான விமர்சகனாக இருக்க முடிந்தால் நல்லது. கடவுளைக் கூட 100% நம்பி விடக் கூடாதென்று தோன்றும். ஆனால் சிலவற்றுக்கு இந்த விதி பொருந்தாது.
ஒரு புத்தகத்தை எழுதியவரை ஆசிரியர் என்று சொல்வது தற்செயல் இல்லை. ஒரு ஆசிரியர் எனக்கு கற்பிக்க வேண்டும். அவருடைய புத்தகம் சுவாரஸ்யமானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு எது பிடிக்குமோ அதை எழுதும் ஊழியராக அவர் இருக்கக் கூடாது. எனக்கு ஏற்கனவே தெரிந்ததையே சொல்வதற்கு அவர் எதற்கு? “நான் நினைத்ததையே சொல்லியிருக்கிறீர்கள்” என்று ஒரு ஆசிரியரிடம் சொல்வது பாராட்டு ஆகாது. நாம் நினைப்பதற்கு எதிராக சொல்லும் ஆசிரியராலேயே நமக்கு பலன் மிகுதி. அவரைத் தேடி அடைய வேண்டும்.
என் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு அதை நான் விரும்பும் வகையில் சமைத்துத் தருபவர் ஆசிரியர் இல்லை. நான் நினைப்பதற்கு மாறான, எதிரான கருத்துக்களையும் ஆசிரியர் சொல்லவேண்டும். உண்மையெனில் எனக்குப் பிடிக்காதவற்றையும் அவர் தர வேண்டும். மாற்று உண்மைகளை துணிந்து சொல்பவரே ஆசிரியர். எந்த தரப்பையும் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே பிரதிபலிப்பது ஆசிரியரின் பணியல்ல. பலவற்றை உண்டு, செரித்து, உட்கிரகித்து பின் அவருடையது என்று ஆன பின்னரே அவர் வெளிப்படுத்துவார்.
வாசகரின் ருசியறிந்து தந்திரமாகக் கணக்கிட்டு பரிமாறுவதே வணிக எழுத்து எனப் படுகிறது. அந்த எழுத்து வியாபாரிகளின் பாதிப்புகளைத் தவிர்க்க முயல வேண்டும். எது நல்லதோ, எது உண்மையோ அதை எந்த எதிர்பார்ப்புமின்றி சொல்லும் ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கையை முற்றளித்து அவர்களது பாதிப்புகளை ஏற்க வேண்டும்.
மனிதன் தவறிழைக்கக் கூடியவன் என்பதையும், எந்தக் கருத்தும், எந்தக் கொள்கையும், எந்த தலைமையும் பிழையற்றவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கருத்தில் அல்லது கொள்கையில் தவறே இருக்க முடியது என்று பிடிவாதம் பிடிப்பது கண்மூடித்தனம் என்று வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றின் பாதிப்பில் சிக்கி விடக் கூடாது.
ஒருவருக்கு நடப்பு அரசியலில் சிறிது கூட உவப்பில்லை என்றாலும் அதன் பாதிப்பிலிருந்து முழுவதும் விலகியிருக்க இயலாது. எனக்கு ஒவ்வொரு கட்சியிலும் பிடித்த ஒன்று அல்லது ஒரு சில அம்சங்கள் உண்டு. முழுவதும் என்னை ஈர்த்த ஒரு கட்சி கூட இல்லை. இப்போது எனக்குப் பிடிக்காத கட்சிகளின் பட்டியலைப் போட்டால், அதில் முதலாவதாக, முன்பு எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்த கட்சியைத் தான் போடுவேன்.
எல்லா கட்சிகளும் என்னைப் பாதிக்கும் வாய்ப்பு உண்டு என்பது உண்மையெனில், எல்லாவற்றையும் நான் பாதிக்கும் வாய்ப்பும் இருக்கக் கூடும். ஒரு கட்சிக்கு நான் வாக்களிப்பதன் மூலம் அதை நான் சிறிது பாதிக்கிறேன். இன்னொரு கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பதன் மூலமும் நான் அதை பாதிக்கிறேன்.
ஒருவேளை எந்தக் கட்சிக்கும் நான் வாக்களிக்கவில்லை என்றாலும் அவற்றின் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கான பொறுப்பிலிருந்து நான் தப்பித்து விட முடியாது. அரசியல் இல்லாத எதுவுமே இல்லை என்கிறார்கள். அரசியலை விட்டு விலகியிருந்தாலும், தொலைவிலிருந்தாலும், சற்றும் ஈடுபாடே இல்லாதிருந்தாலும் எந்த பொறுப்பேற்பிலிருந்தும் நழுவ முடியாது.
எனக்கு அரசியல் கட்சி ஈடுபாடு இல்லை. எந்த தேர்தலிலும் நான் யாருக்கு ஒட்டுப் போட்டேன் என்று நான் யாரிடமும் சொன்னதில்லை. எனவே அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு யாருக்கும் இல்லை. எந்த கட்சிக்கும் கண்ணை மூடிக் கொண்டொ, தொடர்ந்து மாற்றமின்றியோ ஓட்டுப் போட்டதில்லை.
ஒரு பிரச்னைக்கு பல பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு கட்சியும் அவற்றில் தனக்கு பயன்தரக் கூடியதை, லாபகரமானதை மட்டுமே பார்க்கும். எந்த கட்சியையும் சார்ந்திராதவர்கள் மட்டுமே உண்மையைப் பல கோணத்திலிருந்தும் காணும் வாய்ப்பைப் பெற முடியும். அவர்கள் சொல்வது ஒரு தரப்பு ஏற்கனவே சொன்ன பக்கமாக இருக்க முடியும். உடனே அந்த கட்சியின் பாதிப்பு என்று சொல்வது எளிது.
எனக்கென்னவோ ஒரு கட்சிக்கு/ தரப்புக்கு தாலி கட்டிக் கொண்டவர்களால் உண்மையைக் காண்பது சிரமம் என்றே தோன்றுகிறது. மாற்று உண்மையைப் பார்க்கும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. முரண்பட, மாற்றி சிந்திக்க அவர்களால் முடியாது. சிந்தனைச் சுதந்திரம் எனக்கு முக்கியம். எதிரியின் நியாயத்தையும் சொல்லக் கூடிய, தான் தவறிழைக்கக் கூடும் என்றும் உணர்ந்துள்ள ஒரு ஆசிரியரை அவர் அவ்வாறு இருக்கும் வரை அவருடைய பாதிப்பில் மகிழ விரும்புகிறேன்.
உண்மை முக்கியம் என்று நினைப்பவர்கள் காற்று வீச எல்லா ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும். அதே நேரம் எந்த காற்றும் தம்மைசுருட்டித் தூக்கி எறிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@@@@@@
