கவிஞர் பிறைசூடன் குறிப்பு

இயக்குநர் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருந்தது.

அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்தப் படம் பற்றி இளையராஜாவிடம் எடுத்துச் சொல்லி அவரைப் படம் பார்க்க வைத்து இசையமைக்க ஒத்துக் கொள்ள வைத்தவர் கவிஞர் பிறைசூடன். ஆனாலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து முடியும் தருவாயில் அவரிடம் இருந்து தான் விலக நேரிட்டது என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

அது என்ன கதை என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.

“ராஜ்கிரண் எனது ஆரம்பக் கால நண்பர். அவர் நடிப்பில் உருவான ‘என் ராசாவின் மனசிலே’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காக என்னை அழைத்து டபுள் பாஸிட்டிவ்வாக படத்தைப் போட்டுக் காட்டினார். நன்றாக இருந்தது. “நான் இளையராஜாவிடம் இது பற்றிப் பேசுகிறேன்” என்று ராஜ்கிரணிடம் கூறினேன்.

அடுத்த நாள் இளையராஜாவுடன் அமர்ந்து மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மெதுவாக, “ராஜ்கிரண் ஒரு படத்துல நடிச்சிருக்கார். படம் நல்லாயிருக்கு…” என்றேன். நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக “எந்திரிங்க” என்றார் கோபத்துடன் இளையராஜா. “ஒரு படம் நல்லாயிருக்குன்னு ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு.. இயக்குநரா.. தயாரிப்பாளரா..?” என்றார் இளையராஜா.

நான் கையில் இருந்த கவளம் சோற்றை சாப்பிடலாமா.. வேண்டாமா.. என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டேன். மானம் போனாலும் போகிறது.. இப்போது நமக்கு சாப்பாடுதான் முக்கியம் என்று நினைத்து அப்படியே தொடர்ந்து சாப்பிட்டேன். ஆனாலும் கொஞ்சம் கோபம் இருந்ததால் உடனேயே வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

நான் வந்த பிறகு என்னைத் தேடியிருக்கிறார் இளையராஜா. நான் இல்லாததால் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நானும் திரும்பவும் சென்றேன். “என்ன கோச்சுக்கிட்டீங்களா..?” என்றார். “இல்ல.. படம் நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன்…” என்றேன். “சரி. எனக்குப் படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லுங்க…” என்றார்.

இளையராஜாவுக்காக அந்தப் படத்தை தேவி ஸ்ரீதேவி தியேட்டர்ல போட்டாங்க. அவர்கூட நான் இளையராஜா, ராஜ்கிரண், இயக்குநர் கஸ்தூரி ராஜா எல்லாரும்தான் பார்த்தோம். படம் பார்த்திட்டு இளையராஜாவும், ராஜ்கிரணும் ஒரே கார்ல போயிட்டாங்க. இயக்குநர் கஸ்தூரி ராஜா வேற ஒரு கார்ல போயிட்டாரு. என்னை மட்டும் ‘அம்போ’ன்னு விட்டுட்டாங்க. நான் அங்கேயிருந்து நடந்தே வீட்டுக்குப் போனேன்.

தகவல் : ஆர். கந்தசாமி