
7.
காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி
பூனை கிளியைப் பிடித்துத் தின்னும். எனவே பூனை வந்தால் கிளிப்பேச்சு அடங்கிவிடும். அதுபோலக் கற்றார்முன் கதைக்க முடியாது.
8.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்க குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
