ஸிந்துஜாவுடன் ஒரு சந்திப்பு!/ஜெ.பாஸ்கரன்

தினமணிக் கதிரில் என் சிறுகதை ஒன்றைப் பிரசுரித்து, தன் உதவி ஆசிரியர் மூலம் மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு முழு நாவல் அனைத்தையும் கொடுத்து, “டாக்டரை இந்தப் புத்தகங்களையும் வாசிக்கச் சொல்லுங்கள் – இவை டாக்டருக்கு என் அன்புப் பரிசுகள்” என்று முகம் தெரியாத எனக்கு அனுப்பி வைத்தவர் திரு பாவை சந்திரன் அவர்கள்! என்ன புத்தகங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, சொல்கிறேன். ’நல்ல நிலம்’ – நாவல் (பாவை சந்திரன்), ஜெயபாரதி சிறுகதைகள், எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்(முழுத் தொகுப்பு), ஸிந்துஜா சிறுகதைகள்.

ஸிந்துஜாவின் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்தது பாவை சந்திரன் அவர்கள்தான்! இருவருக்கும் இலக்கிய உலகில் இருக்கும் ஒற்றுமை பற்றி திரு வெங்கட் சுவாமிநாதன் குறிப்பிடுவதை இங்கு சொல்வது சரியாக இருக்கும் :

(ஸிந்துஜா சிறுகதைகள் – விமர்சனப் பார்வை, வெ.சா. – ‘பதிவுகள்’ இணைய இதழ்)
“1971 லிருந்து 1980 வரை உள்ள காலகட்டத்தில் எழுதப்பட்ட சுமார் 18 கதைகள் உள்ளன இத்தொகுப்பில். அதற்குப் பின் 30 வருடங்கள் கழிந்துவிட்டன. முதலில் நானறிந்த கலாப்ரியா, அசோகமித்திரன், முத்துசாமியை யெல்லாம் கலாய்த்து அவர் எழுதிய போதெல்லாம் சிலருக்கு உற்சாகத்தையும், சிலருக்கு திகிலையும் தந்த ஸிந்துஜாவைப் பின்னர் நாம் காணவில்லை. சிறு பத்திரிகைகள், வெகுஜனப் பத்திரிகைகள் , இரு தரப்புகளிலும் வரவேற்கத் தக்கவராகவே அவர் இருந்திருக்கிறார்….(30 வருடங்களாக ஸிந்துஜா எதுவும் எழுதவில்லை!)

(நல்ல நிலம் நாவல் பற்றி) தஞ்சை விவசாயக் குடும்பத்தின் ஒரு கால கட்டம் நம் முன் விரியும். சுகமான எழுத்து. அவர் மறக்கப் படக் கூடியவர் அல்ல. எங்கே போனார் அந்த பாவை சந்திரன்?

தன்னைப் போலவே இன்னொருவரான ஸிந்துஜாவை வெளியிட்டது (நன்னூல் அகம் வெளியீடு) பொருத்தம்தான். ஒருவரை ஒருவர் நமக்கு நினைவு படுத்துகிறார்கள்.”

‘விருட்சம்’ அழகியசிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு நேரடியாக அறிமுகம் செய்தவர். “உங்களுக்கு சிறுகதைகளைப் பற்றிய ஒரு பார்வை கிடைக்க, ஸிந்துஜா சிறுகதைகளைப் படிங்க…’ என்பார் அவர்.

முப்பது வருட நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் ஸிந்துஜா எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இவரது படைப்புகள் கணையாழி, விருட்சம், காணி நிலம், அந்திமழை, தினமணிக் கதிர், அமிர்தா, சொல்வனம், பதாகை, எழுத்து என அச்சு மற்றும் மின்னிதழ்களிலும் காணக் கிடைக்கின்றன!

ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் (இன்னும் இரண்டு தொகுப்புகள் ரெடி!), ஒரு கட்டுரைத் தொகுப்பு (வானில் புரளும் கடல்), ஒரு குறுநாவல் தொகுப்பு, மற்றும் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு தொடர்க் கட்டுரைத் தொகுப்பு என இவரது படைபுலகம் விரிகின்றது.

அமைதியான, ஆரவாரமில்லாத மனிதர். அதிர்ந்து பேசாத எழுத்தாளர். தி.ஜா., சுஜாதா இருவரின் எழுத்துக்களையும் விரும்பி வாசித்து, வியப்பையும், அனுபவத்தையும் அழகாகப் பகிர்ந்து கொள்பவர். தன் எழுத்து குறித்த தீர்க்கமான பார்வை கொண்டவர். சிறுகதைகளை, அதன் இயல்பு மாறாமல், மிக சரளமாக எழுதிச்செல்பவர். எழுத்தில் உண்மையும், நேர்மையும் சமரசமில்லாமல் ஒங்கியிருக்கும்!

போனவாரம் வெள்ளிக்கிழமை மாலை ஸிந்துஜாவை நம் நண்பர்கள் சிலர் என் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். விருட்சம் சிங்கர், குவிகம் கிருபானந்தன், கெளரி கிருபானந்தன், பேரா. வ.வே சு., எஸ் எல் நாணு, கவிஞர் மீ.விஸ்வநாதன், சதுர்ப்புஜன், ஆர்.கே.ராமனாதன், ஹரிஹரன், ராஜாமணி, ரம்யா வாசுதேவன் என ஒரு சிறு இலக்கிய நண்பர்கள் கூட்டம். (சிறகு, இரா முருகன், நாகேந்திரபாரதி மூவருக்கும் வர இயலவில்லை – செய்தி வந்தது!)

சிறுகதைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், கதை சொல்வது குறித்த விமர்சனங்கள், கதைக் களன்கள், ‘கரு’க்கள், படைப்புகள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த உரையாடலாய் அமைந்தது அன்றைய பேச்சு. தி.ஜா., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பாலகுமாரன், கி.ரா., ஆகியோரின் படைப்புகள் பற்றிய வாசிப்பானுபவப் பகிர்வுகள் சுவாரஸ்யமாக இருந்தன.

வந்திருந்த எழுத்தாளர்களின் புத்தக மழையில் நனைந்தார் ஸிந்துஜா! தான் கதை சொல்வதற்காக, ‘ஸிந்துஜா சிறுகதைத் தொகுப்பு’ ஒன்றை வாங்கிச் சென்றார் ரம்யா.

தி.ஜா. வின் ‘கச்சேரி’ (காலச்சுவடு) சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அவருக்கு அளித்ததில் மகிழ்ச்சி அடந்தேன்.

‘ட்ராபிகானா’ லிச்சி ஜூஸ் வந்தவுடன் கொடுக்கப்பட்டது – பின்னர் கொஞ்சம் கேசரி, மைசூர் போண்டா, 2 வித சட்னி, சாம்பாருடன் சிற்றுண்டி – ஆர்கே கொண்டுவந்த ‘புட்டு’ மற்றும் சிப்ஸ், கடைசியில் சூடான காப்பி!

ஸிந்துஜாவை மேலும் அறிந்து கொள்ள, அவரது படைப்புகளை, குறிப்பாகச் சிறுகதைகளை வாசிப்பதுதான் ஒரே வழி! ஏனென்றால் அவர் மிகக் குறைவானவே பேசுவார் – A man of few words!

“ஒரு படைப்பை முடித்தவுடன், ஒரு எழுத்தாளனின் வேலை முடிந்து விடுகிறது. அதன் விமர்சனங்கள் குறித்த விசாரம் தேவையில்லை! அடுத்த படைப்புக்குள் போய்விடுவதுதான் உடனடி வேலை” – இதைத் தீவிரமாகக் கடைபிடிப்பவர் ஸிந்துஜா.

ஸிந்துஜா அவர்களுடன் ஆன நட்பு, பல புதிய இலக்கிய சாளரங்களை எனக்குத் திறந்து விட்டிருக்கின்றது!

மீண்டும், மீண்டும் சந்திப்போம் என்றபடி, விடை பெற்றுக்கொண்டோம்!

One Comment on “ஸிந்துஜாவுடன் ஒரு சந்திப்பு!/ஜெ.பாஸ்கரன்”

  1. ஸிந்துஜாவின் சிறுகதைத் தொகுப்புகள்
    கிடைக்கும் பதிப்பகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொள்ளலாமே.

Comments are closed.