கோவில்பட்டி கடலைமிட்டாய்/சோ.தர்மன்

இனி மேல் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை இந்தியாவின் எல்லா தபால் நிலையங்களும் விற்பனை செய்யும்.இனிமேல் தபால்காரர்கள் “சார்….போஸ்ட்”என்று சொல்ல மாட்டார்கள் .சார் கடலை மிட்டாய் என்பார்கள்.கோவில்பட்டிக்காரன் என்ற முறையில் சந்தோஷம்தான்.ஆனால் முந்தி தபால் நிலையங்களில் நிரம்பி வழியும் கூட்டத்தையும் போஸ்ட்மேன்களுக்காக காத்திருந்த அந்த நாட்களையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு முறை கொரியர் அலுவலகம் செல்லும் போதெல்லாம் வயிற்றெரிச்சல் படுகிறேன்.நிரம்பி வழியும் கூட்டம்.அம்பாரமாகக் குவியும் பார்சல்கள்.மினிமம் 50ரூபாய்.உடனடி வருமானம்.லட்சம்லட்சமாய் சம்பாதிக்கும் தனியார் தபால் சேவைகள்.இதற்கெல்லாம் காரணம் என்ன?.
கடலை மிட்டாயும்,பழனிபஞ்சாமிர்தமும்,திருப்பதி லட்டும் விற்கிற இடமா தபால் அலுவலகங்கள்.ஒரு உயர் அதிகாரியிடம் பேசினேன்.சிறுசேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருப்பதாகவும் அதற்காக மட்டுமே தபால் நிலையங்களை வைத்திருக்கிறோம்.மற்ற தபால் சேவைகள் எல்லாமே தனியார் கொரியர் நிறுவனங்களுக்கு போய்விட்டன என்றார்.காரணம் என்ன என்று கேட்டேன்.அவர் சொன்ன காரணங்கள் அதிர்ச்சிகரமானவை.
இன்னொரு விஷயம் சொன்னார்.தமிழ்நாடு அரசே ஒரு கொரியர் சேவையை தொடங்கி ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கலாம்.திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் அரசிடம் இருக்கிறது.லாபகரமாக நடத்தலாம் என்றார்.
“இந்தியா டுடே”பத்திரிக்கையில் நான் ஒரு போஸ்ட்மேனைப் பற்றி எழுதிய சிறுகதை “சார்…..போஸ்ட்”.அக்கதையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருப்பேன்.
“இந்த போஸ்ட் மேன் இந்த தெருவுக்கு எத்தனை சந்தோஷங்களை சுமந்து வந்திருப்பார்.காதலர்களின்,பட்டாளத்து கணவர்களின்,வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவர்களின் எத்தனை ஆசை முத்தங்களை சுமந்து வந்திருப்பார்.எத்தனை காதல் மொழிகளை,எத்தனை விதமான அன்பு மொழிகளை தன் கனத்த பைகளில் திணித்து வந்து அவரவர் கைகளில் சேர்த்திருப்பார்.உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் வரும் செய்திகளை இணைக்கும் ஒரு வயரல்லவா போஸ்ட்மேன்”
இதே போஸ்ட்மேன் தான் பாவம் கடலைமிட்டாய் விற்கப் போகிறார்.