யோகியின் புதல்வி திருமதி பீனா அவர்களின் அனுபவ அரங்கம் !


O
ஸ்ரீரங்கம் யோகி விழாவின் போது,
29/5/2022 ஞாயிறு காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் முன்பு
அன்னை மாதேவகி அவர்கள் பக்தர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். அதன் இறுதியில் திருவண்ணாமலையில் வசித்து வரும் யோகியின் இளைய புதல்வி திருமதி பீனா அவர்களை யோகியுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்னை மாதேவகி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்
O
சரளமான ஹிந்தியில் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு திருமதி பீனா அவர்கள் உரையாட, அன்னை மாதேவகி அவர்கள் அதன் சாரத்தை தமிழில் வழங்கினார்கள்.
O
யோகியின் நான்கு குழந்தைகளில் யோகியைப் பார்த்திராத, தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையைப் பிரிந்த ஏக்கத்தை சுமந்து பிறந்தவர்தான் திருமதி பீனா அவர்கள்.
O
தங்கள் தந்தையார் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தலத்தில் ஒரு ஞானியாக வாழ்ந்து வருவதை பத்திரிகை வழியாகத் தெரிந்த யோகி குடும்பத்தார் 1982 ல் யோகியை தரிசிக்க அருணைக்கு வருகை தந்தனர்.
O
உணர்ச்சிமயமான அந்த சந்திப்பை ஒரு ஞானியின் பூரணத் தன்மையில் இருந்தே யோகி எதிர் கொண்டார்.
தம் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அவர் சரியாக நினைவு கூர்ந்து பேசினாலும், வேறு
எந்த நெருக்கமும் காட்டாது, எல்லோர் மீதும் பொழியும் அன்பையே அவர்கள் மீதும் பொழிந்தார் ! குலம், கோத்திரம், குடும்ப எல்லைகளைத் தாண்டி, வசுதேவக குடும்பமாக இந்த உலகினைப் பார்க்கும், நேசிக்கும் ஒரு யோகியாகவே அவர்களுக்கும் யோகி தம் இருப்பை வெளிப்படுத்தினார்.
O
ஆனால் அந்த சந்திப்பிலேயே திருமதி பீனா தமது ஆதங்கத்தை யோகியிடம் வெளிப்படுத்தி உள்ளார். உலகையே நேசிக்கும் தாங்கள் ஏன் எங்கள் குடும்பத்தை மறந்து விட்டீர்கள் என்ற அவரது கேள்விக்கு, யோகி தாம் யாரையும் மறக்கவில்லை என்றும், அவரது குடும்பம் விரிந்து விட்டது என்றும், உலகமே அவரது குடும்பம் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
O
தங்கள் தந்தை ஒரு குடும்பத்தின் தந்தையாக மட்டும், தன்னைச் சுருக்கி கொள்ளாது, உலகோரின் தந்தையாக பரிணமித்திருப்பதை பீனா அவர்களுக்கு யோகி முதல் சந்திப்பிலேயே தெளிவுபடுத்தி இருக்கிறார்.
O
ஆயினும் தந்தை அன்பு என்பதையே அனுபவித்திராத பீனாவின் மனதில் ஒரு ஏக்கம் குடி கொண்டுள்ளது. இப்போதும் தமக்கே உரிமையான தந்தையின் அன்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் விடைபெற்றுள்ளார்.
O
1984 ல் இரண்டாம் முறை யோகியை தரிசிக்க வந்த போது, அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில், பீனா அவர்களை ஒரு தந்தையின் அன்போடு எதிர் கொண்டு, அவரது மனக்குறையை தீர்த்துள்ளார். தற்போது தமது தந்தை உலகின் தந்தையாக உயர்ந்துள்ளதை உணரவும் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. அந்தப் பக்குவத்தை யோகி அருளியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
O
1983 ல் யோகியை தரிசிக்க மாமாஜி குடும்பம் திருமதி மனோரமா அவர்களோடு வந்தபோது, அவருக்கு
விருப்பம் இன்றியே வந்துள்ளார்.
ஆனால் அந்த சந்திப்பின்போது திருமதி மனோரமா அவர்கள் மீது யோகி அன்பைப் பொழிந்துள்ளார். அவர் இல்லத்தில் செய்யும் தினசரி பூஜையை யோகி பாராட்டி, சன்னதித் தெரு இல்லத்தில் அன்று இருந்த அகர்பத்திகள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி பரிசளித்துள்ளார். ஒரு ஆண்டுக்குத் தேவையான அகர்பத்தி அந்த மூட்டையில் இருந்துள்ளது.
O
1984 ல் பீனாவோடு வருகை தந்த அன்னையார் திருமதி ராம்ரஞ்சனி தேவி அவர்களுக்கு, யோகி தமக்கும் அகர்பத்தி வழங்க மாட்டாரா என்ற ஏக்கம் இருந்துள்ளது. அவர்கள் ஊருக்குத் திரும்பும் வரை யோகி எதையும் பரிசாக அவருக்கு அளிக்கவில்லை. வேறு வழியின்றி பீனாவிடம் அம்மாவிற்கு அகர்பத்தி வேண்டுமென்று, யோகியிடம் கேட்கத் தூண்டி உள்ளார். உடனே யோகி சன்னதித் தெரு இல்லம் முழுக்கத் தேடியும் அகர் பத்தியே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு, கடைசியாக இரண்டே இரண்டு அகர்பத்திகளை தேடி எடுத்து இது மட்டுமே இருப்பாதாக கூறி பரிசளித்துள்ளார். தமது குடும்பத்தினர் என்ற எந்த சிறப்புச் சலுகையும் காட்டாத நிலையிலேயே யோகி இருந்துள்ளார்.
O
பல இடங்களில் பீனா அவர்களின் ஏக்க உரை நம் கண்களில் நீரை வரவழைத்தது. யோகியின் குடும்பத்தினர் தியாகம் மகத்தானது. 1982 ல் அவரை கண்டடைந்த பின்னும், அவரை தங்கள் தந்தையாக நெருங்க முடியாத ஏக்கத்தை சுமந்து கொண்டு, மற்ற பக்தர்களைப் போல் யோகியை உலகின் தந்தையாக தாமும் ஏற்றுக் கொண்டு, இன்று தமது கணவர் தீட்சித் அவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு திருவண்ணாமலை வாசிகளாகி வாழும் திருமதி பீனா, தீட்சித் தம்பதியர் போற்றுதலுக்கு உரியவர்கள் ! அவர்களின் குருபக்தி உன்னதமானது !
O
இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அன்னை மாதேவகி அவர்கள் திருவடிகளுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா

One Comment on “யோகியின் புதல்வி திருமதி பீனா அவர்களின் அனுபவ அரங்கம் !”

  1. நானும் திருவண்ணாமலையில் வசித்த போது முதலில் 1984 ல் விசிறி சாமியார் என்கிற யோகிஅவர்களை சன்னதித்தெரு வில் வசித்த சமயத்தில் நான் கேட்டுக்கு வெளியே நிற்க அவர் வீட்டுக்குள்ளே இருந்த படியே நீ என்கிற வராதே அண்ணாமலையார் என்று சொல்லி அனுப்பி விட்டார்.நவம்பர் 1985 அதிகாலையில் நான் அண்ணாமலையார் கோயிலுக்கு ப்போகும் போது அவர் கீழே இறங்க, நான் அவரைப் பார்க்க, அவர் என்னை நீ பார்க்க வேண்டாம் அண்ணாமலையாரைப்பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்.என்னால்தான் முடியாத நிகழ்வாக என் மனதில் இன்னும் இருக்கிறது.

Comments are closed.