சினிமா ஓர் அசாத்தியமான கனவு/லட்சுமி சரவணக்குமார்

சங்கடத்துடனும் தயக்கத்துடனுமே இதனை எழுதுகிறேன். ஆனால் எழுதியாக வேண்டியது காலத்தின் தேவை. சில சமயங்களில் உக்கிரமான ரணசிகிச்சை தேவைப்படுமெனில் அதனை செய்யத்தானே வேண்டும். அப்படியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
சினிமா ஓர் அசாத்தியமான கனவு, ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் அதுதான் யதார்த்தம். இயக்கம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எந்தத் துறையை நோக்கி ஓடிவந்தாலும் இங்கு ஆயிரத்தில் ஒருவரல்ல, லட்சத்தில் ஒருவர் மட்டுமே வெளிச்சத்துக்கு வரக்கூடியவராய் இருக்கிறார். உழைப்பு, நேரம், அதிர்ஷ்டம் என எத்தனையோ காரணிகள் சேர்ந்து ஒரு மனிதனின் வெற்றியை உருவாக்கினாலும் கூடுதலாக திறமை என்றொரு காரணியும் முக்கியமானது. வெற்றிபெற்றவர் மட்டுமே திறமையானவர் மற்றவரெல்லாம் திறமையற்றவர் அல்ல என்பதல்ல இதன் அர்த்தம்.

ஒருவரின் வெற்றிக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் காரணமாகச் சொல்லலாம், தோல்விக்கு அவரவர் மட்டுமே காரணமாய் இருக்கமுடியும். ( அரிதாக சில சூழல்களில் சந்தர்ப்பங்களோ தனிமனிதர்களோ இன்னொருவரின் தோல்விக்கு காரணமாகலா. அவை விதிவிலக்குகள்.) என்னளவில் எடுத்துக் கொண்டாலும் இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்துவிட்டு ஒரு படத்தை இயக்க ஏன் இத்தனை காலம்? நான் உதவி இயக்குநராக வேலை பார்த்த நாட்களில் சரியான தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவில்லை, சரியான திரைக்கதைகளை எழுதவில்லை. ஒருமுறை படம் கமிட் ஆகி எல்லாம் கூடிவந்தபோது பாதியில் நின்றதற்கு காரணம், என்னுடைய அகங்காரம். இப்படி எல்லா வகையிலும் எனது சிறு சிறு பிழைகள் இருக்கின்றன.
பத்து வருடங்களுக்கும் மேலாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறேன். உதவி இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக வெவ்வேறு இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். திரைப்படத் துறையை நோக்கி வருகிற நூற்றுக்கணக்கான இளைஞர்களை எதிர்கொள்கிறேன். இவர்களில் சிலர் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். வெற்றி பெறுகிற எல்லோரிடமும் நான் கவனிக்கிற ஒன்று நுண்ணர்வு. செய்கிற வேலையில் சின்னஞ்சிறிய செயல்களில் கூட அவர்களின் நுண்ணர்வு வெளிப்படுகிறது. அதோடு தொடர்ந்து கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு. அதிர்ஷடத்தால் வந்ததென நீங்கள் நினைக்கும் எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.
மாறாக, உதவி இயக்குநர்களில் எத்தனை பேர் தொடர்ந்து புத்தகம் வாசிக்கிறவர்களாய் இருக்கிறார்கள்? திரைப்படத் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்கிறவர்களாய் இருக்கிறார்கள். உதவி இயக்குநராய் வாய்ப்புத் தேடி அலைகிற வரை இருக்கும் அக்கறை, உதவி இயக்குநராய் ஆனபின் காணாமல் போவதேன்? சினிமா என்பது தொழில் என்பதையும் தாண்டி வாழ்க்கை முறை. ஒரு இயக்குநரின் வாழ்வென்பது அவனது திரைப்படங்களைச் சார்ந்தே அமைந்துவிடுகிறது. அதற்காக அவன் ஏராளமான சந்தோசங்களை, உறவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் ஒரு துளி சிரமங்களையும் சகித்துக்கொள்ள இயலாதவர்களாகவே இந்தத் துறைக்கு வருகிற பெரும்பாலனவர்கள் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மை.
என் அன்பான நண்பர்களே, நமது வெற்றிக்கான கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு எந்த தேவதூதனும் காத்திருக்கப் போவதில்லை. நாம் தான் பாதையைத் தேடிக் கண்டடைய வேண்டும். திறமையைப் போலவே நுண்ணுனர்வும் முக்கியமானதென ஏன் குறிப்பிட்டேனென்றால் அதுதான் மனிதர்களைக் கையாலும் பக்குவத்தைக் கொடுக்கிறது. ஒரு இயக்குநரின் மிக முக்கியமான பண்பு தனது குழுவினரிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டுமென்கிற புரிதலோடு இருப்பது.
என் கதை இந்த தயாரிப்பாளருக்கு புரியவில்லை என சில சமயங்களில் இளம் உதவி இயக்குநர்கள் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் தோன்றும், ஒரே ஒருவருக்கு உங்கள் கதையை புரிய வைக்க முடியவில்லையென்றால் ஒரு பெரும் குழுவுக்கு புரியவைத்து எப்படி வழிநடத்துவீர்கள்? கோடிக்கணக்கான மக்களுக்கு புரியும்படியாக எப்படி திரைப்படத்தை உருவாக்குவீர்கள்?
நீங்கள் தோற்க வேண்டும், அல்லது இந்தத் துறையில் இருக்கக் கூடாதென ஒருவரும் நினைக்கப் போவதில்லை, நம் மீது உள்ள சந்தேகங்கள் தான் மற்றவர்களின் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.
சற்று நிதானமாக கடந்த காலத்தைத் திரும்பி பாருங்கள், பிழைகள் கண்ணுக்குத் தெரியும். அதனை சரிசெய்து மீண்டும் முயற்சியுங்கள் எல்லோருமே சாதிக்க முடியும்…

பெரிய படங்களை இயக்குவதும், கோடிகளில் சம்பளம் வாங்குவதும் மட்டுமே வெற்றியல்ல. உங்களுக்குப் பிடித்த துறையில் நிறைவோடு வேலை செய்வதும், பிடித்த படங்களை இயக்குவதும் வெற்றிதான். எல்லாவற்றுக்கும் அப்பால் இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், இதனை நீண்டகால கசப்பான அனுபவத்திற்குப்பின் சொல்கிறேன். மற்றவர்களின் மீது புகார்களற்று இருக்கக் கற்றுக்கொண்டால் உங்களால் மகிழ்ச்சியாக இயங்க முடியும். ( நான் மற்றவர்களின் மீதான புகார்களோடு இருந்தவன்.) சினிமாவிற்கு வெளியில் ஒரு வாழ்க்கை உள்ளது, அதனையும் கொஞ்சம் அனுபவித்து வாழுங்கள், வாழ்க்கை நிறைவானதாக மாறும் போதுதான் கலை முழுமையானதாய் வெளிப்படும்.