இளம் எழுத்தாளர்கள்/வாசுதேவன்

நட்சத்திர எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை சாராமல் பல இளம் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அமைதியாக இயங்கி வருகிறார்கள். (இவர்கள் அவ்வபோது தங்கள் நூல்களை எனக்கு அனுப்பிவைக்கிறார்கள். வேலைப்பளுவால் வாசிக்கமுடியவில்லை. குற்றவுணர்ச்சியில் உழல்கிறேன்). சில‌ வருடங்களுக்கு முன் வாரம் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி எழுதி வந்தேன். அதை தொடர முடியவில்லை. மீண்டும் தொடர முயல்கிறேன். இதைத்தவிர சிறுபத்திரிக்கைகள் பலர் என்னை தொடர்பு கொண்டு கட்டுரை கேட்கிறார்கள். இதையும் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. நாலைந்து கட்டுரைகள் பாதியில் நிற்கின்றன. ஒரு நாவல் எழுதலாம் என குறிப்புகள் எழுதி வைத்ததோடு சரி. அதுவும் அந்தரத்தில் நிற்கிறது. இங்கு நான் அறிமுகப்படுத்தி எழுதும் பதிவுகளை ஓரக்கண்ணால் பார்த்து ஒதுங்கும் பேர்வழிகளும் தெரியும். இதை எழுதுவதற்குக் காரணம் நண்பர் திரு.சரவணன் மாணிக்கவாசகம் விடாமல் நூல்களை வாசித்து எழுதிவருகிறார். அவரது அயராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. எந்த அக்கப்போரும் இல்லை, மிக நாகரிகமாக எழுதி வருகிறார். உண்மையில் எழுதுகிறவர்களுக்கு தான் எழுதிய நூலைப் பற்றி யாராவது எழுதியதை வாசிப்பதில்தான் உத்வேகம் வரும். ஆனால் இங்கு தங்கள் நூல்களை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள். அல்லது குழு மனப்பான்மையோடு செயல்படுகிறார்கள். பிறர் நூலை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பாராட்ட பரந்த மனப்பான்மையே இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு சொறிந்து கொடுத்து பல்லிளிக்கிறார்கள். தமிழில் பல இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இவர்களைப் பற்றி எந்த ஒருவரி குறிப்பும் இல்லை. ஆனால் ஒரு வணிக திரைப்படம் வெளிவந்தால் விழந்தடித்துக்கொண்டு மாய்ந்து மாய்ந்து எழுதி குவிக்கிறார்கள். வாசிப்பது என்னமோ உன்னத இலக்கியங்கள், பார்ப்பது குப்பை படங்கள், கேட்பது குத்துப்பாடல்கள், சிந்திப்பது சமூக நீதி. இந்த விநோத ரசனைக் கழிவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எல்லாவிதத்திலும் விசித்திரமானவர்கள் மூத்தகுடி தமிழ் மக்கள்!