விக்ரம் (2022)/சுரேஷ் கண்ணன்

oOo

உங்களுக்கு ரணகளமான ஆக்ஷன் படம் பிடிக்கும் என்றால் விக்ரம் உங்களுக்கானது. குறிப்பாக ‘கைதி’ படம் பிடித்திருந்தது என்றால் இதற்கு நம்பிச் செல்லலாம். அதை விடவும் ஆக்ஷன் காட்சிகளை எக்சிகியூட் செய்வதில் பல படிகள் தாண்டியிருக்கிறார்கள். ஏன் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளே ‘விக்ரமின்’ மூலம் அடுத்தபடியைத் தாண்டியிருக்கிறது. அத்தனை ரணகளமாக விளையாடியிருக்கிறார்கள். மற்றபடி காமெடி, சென்டி, பாடல் போன்றவற்றின் கலவையை எதிர்பார்த்தால் இது உங்களுக்கானதல்ல.

‘விக்ரம்’ பெரும்பாலும் ‘கமல்’ படமாக அல்லாமல் (பத்தல பத்தல போன்ற காமெடிகளைத் தவிர்த்து) லோகேஷின் படமாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம், சகித்துக் கொள்ளக்கூடிய சில fan boy Moment களைத் தாண்டி இது டைரக்டரின் படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.. லோகேஷின் கைகளுக்கு கமல் தாராளமாக சுதந்திரம் அளித்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

ஆகஃஃ விக்ரமின் ஹீரோ கமல் கூட அல்ல. அது லோகேஷ்தான். இன்னமும் கேட்டால் அன்பறிவ், அனிருத், கிரிஷ் (ஒளிப்பதிவு) பிலோமின் ராஜ் (எடிட்டிங்) உள்ளிட்ட டெக்னிக்கல் டீம் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. குறிப்பாக ஆக்ஷனும் பிஜிஎம்மும் கூட்டணி சேர்ந்து கை கோர்த்து பின்னிப் பெடல் எடுத்திருக்கிறது. தியேட்டர் எபெக்டில் பார்ப்பது உத்தமம்.

கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியையும், பழைய விக்ரம் பாத்திரத்தையும் திரைக்கதையில் உறுத்தாமல் நன்றாகப் பொருத்தியிருக்கிறார்கள். முதல் பாதியில் கமலுக்கு கூட அத்தனை ஸ்பேஸ் இல்லை. மாறாக ஃபகத் பாஸில் இறங்கி அடித்து நொறுக்கி விளையாடியிருக்கிறார். பார்ப்பதற்கு செளகார்பேட்டையில் பான்பராக் விற்கிற சேட்டுப்பையன் மாதிரி சாதாரண தோற்றத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் எதைச் செய்தாலும் நம்பும்படியாக இருக்கிறது. விசேவின் பாடி லேங்வேஜூம் நன்று.

‘இது ஏன் Revenge Story அல்ல’ என்று நரேனுக்கு விளக்கும் காட்சியில் கமலின் நடிப்பும் வசனமும் அருமை. (இதில் மட்டும் கமலின் கைங்கர்யம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரின் வாசனை அடிக்கிறது). இப்படி பல காட்சிகளில் அட்டகாசமாக ஜொலிக்கிறார் கமல். மற்றபடி பிரதான பாத்திரங்கள் அனைத்திற்கும் ஸ்பேஸ் வருவது போன்ற திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

சென்னையில் இத்தனை பெரிய Drug mafia gang இருக்குமா, ஏதோ கொலம்பிய தேசத்து பாப்லோ எஸ்கோபர் போல ராணுவம் மாதிரி இத்தனை ஆயுதங்கள் வைத்திருப்பார்களா என்றெல்லாம் யோசித்தால் உங்களால் படத்தை ரசிக்க முடியாது. லோகேஷ் உருவாக்கும் அந்த இருட்டு உலகத்தில் உங்களை ஒப்படைத்துக் கொண்டால் ஏறத்தாழ இரண்டரை மணி நேரமும் படு சுவாரசியம் என்பதை உத்தரவாதமாகச் சொல்ல முடியும்.

கமல் என்பதாலேயே படத்தைப் பற்றி நிறைய நெகட்டிவ், கிண்டல் அபிப்ராயங்கள் வரலாம். Just ignore it. தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாயத்தை லோகேஷ் போன்ற இளம் இயக்குநர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சமீபத்திய சாட்சியம் ‘விக்ரம்’.

2 Comments on “விக்ரம் (2022)/சுரேஷ் கண்ணன்”

  1. வெறும் ரணகளமான ஆக்ஷன் படம் என்கிறீர்கள். Drug mafia படம் என்கிறீர்கள். இளைஞர்களின் மிருக உணர்வைத் தூண்டி சமூகத்தில் குற்றங்களை வளர்க்கும் இது போன்ற படங்கள் Technical ஆக சிறந்திருக்கிறது என்பதாலேயே நல்ல படம் ஆகி விடுமா? இது எப்படி தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியும்?

  2. வருங்கால இளைஞரகள் இன்னும் வனமுறையில் நம்பி எதிரகாலத்தை ஒப்படைப்பார்கள்…டாலபி சவுண்ட்..பல தலைமுறைகளை செவிடாக்கிவிடக்கூடும்..மனநோயுக்கு உள்ளாகும் சாத்திய கூறுகள் அனேகம்..ஒரு ப்ளஸ்..கவர்ச்சி காட்சி என்ற பெயரில்…யாரும்…சட்டைஉறிக்கவில்லை..

Comments are closed.