டாக்டர் நரசிம்மன் என்னும் அவர்…/ஜெயராமன் ரகுநாதன்

எட்டு

டாக்டர் நரசிம்மனை ஐம்பது வருஷங்களாத் தெரிந்தாலும் ஸ்வதாவாக அவருடன் சகல விஷயங்கள் பேசினாலும் அவரிடம் பேசவே இயலாத இரண்டு விஷயங்கள்.

  • அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை!
  • ஏன் எந்த விசேஷங்களுக்கும் அவர் போவதே இல்லை.

மிகச்சமீபத்தில் ஒரு நாள் கல்யாண விஷயம் பத்திக்கேட்டுப்பார்த்தேன்.

“நீங்க அம்பது வருஷம் லேட்டா கேக்கறீங்களே?”

சிரித்து மழுப்பினார்.

நான் விடாமல் “சொல்லுங்களேன்! யாரையாவது காலேஜுல லவ் பண்ணி….?” என்று வம்புக்கு இழுத்தேன்.

எப்போதும்போல கண்களை இடுக்கிக்கொண்டே சிரித்தார்.

“என்னை யாரும் கல்யாணமே பண்ணிக்கல. அப்ப யாரு லவ் பண்ணியிருப்பாங்க சார்!”

சட்டென்று சப்ஜெக்டை மாற்றிவிட்டார்.

அதே போல வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிட்டு அலுத்துப்போய்விட்டோம்.

என் கல்யாணம், பவானி கல்யாணம் எங்கள் பிள்ளைகளின் கல்யாணம் ஒரு விசேஷத்துக்கும் ஆசாமி ஆம்டவில்லை.

” என்னை விட்ருங்க சார்! என்னோட பிளெஸ்ஸிங்ஸ் ஆர் ஆல்வேஸ் தேர்!”

ஒரு முறை மாடியிலேர்ந்து அவருடை அக்கா கீழெ இறங்கி வந்தபோது நாங்கள் கல்யாணம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

“நரசிம்மனா ஒரு விசேஷத்துக்கும் வர மாட்டானே! தப்பித்தவறி தவிர்க்க முடியலைன்னாகூட அங்க போய் சாப்பிடவே மாட்டான். எப்படியானு அவாள டபாய்ச்சுட்டு வந்துடுவான்!”

“சாப்பிடாம எப்படி தப்பிச்சு வருவீங்க டாக்டர்?”

“ரொம்ப ஈஸி சார்! எலை போட்டப்றம் அப்படி டைனிங் ரூம் பக்கமா நடந்து போய்ட்டு ரெண்டு வெத்தல பாக்கை வாயில போட்டுண்டு வந்துடுவேன். ஒருத்தரும் சாப்பிடலியான்னு கேக்க மாட்டாங்க!”

வாரந்தவறாமல் அவர் போய் வந்த இடம் பத்மனாப சுவாமி கோவில்.

“மனுஷனா பொறந்த பெருமாள சேவிக்கணூம் சார்! அத விட பெரிய காரியம் ஒண்ணும் இல்ல!”

ஆழ்ந்த நம்பிக்கை தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம், விசேஷ தினங்களில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொளல் என்று அவர் தனக்கென சில நியமனங்களை விடாமல் பின்பற்றினார்.

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சமயம் எப்போது ஃபோன் பண்ணினாலும் எடுக்கவே இல்லை. க்ளினிக்குக்கும் வரவில்லை. அவருக்கே உடம்பு சரியில்லையோ என்று அப்பாவும் நானும் அவர் வீட்டுக்கே போனோம். வீட்டு வாசலில் நடமாட்டம் இல்லை. எதிரே செயிண்ட் மைக்கேல்ஸும் சற்றுத்தள்ளி பால வித்யாமந்திரும் லீவு என்பதால் அமைதி.

நான் மெதுவாக வாசல் கதவை அடைந்தேன். முனகல் சப்தம் கேட்டது பின்னாலேயே நரசிம்மனின் குரல்,

“ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை!”

மீண்டும் முனகல் பேச்சு.

“அவ்வள்வுதானே பண்ணிண்டா போச்சு!”

சற்று நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தபோது கேட்டில் ஒரு வயதான பெண்மணி.

“யாரு? டாக்டரப்பாக்க வந்தேளா?”

“இல்ல ரெண்டு மூணு நாளா டாக்டர காண்டக்ட் பண்ணவே முடியல. அதான்…..!”

”நான் டாக்டரோட அக்காதான். எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ரொம்ப க்‌ஷீணமா இருக்கா. நரசிம்மன் தான் பாத்துக்கறான். இருங்கோ கூப்பிடறேன்!”

“இல்ல வேண்டாம். எங்களுக்கு அவசரம் ஒண்ணுமில்ல!”
வந்துவிட்டோம்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அம்மாவுடனேயே உட்கார்ந்து பாசுரம் படிச்சு வலியில தவித்த அம்மாவுக்கு ஆறுதலாய் கூடவே ஆதுரமாய்ப் பேசிப்பேசி பெற்றவளை வழி அனுப்பிவிட்டுத்தான் லௌகீக வாழ்க்கைக்கு திரும்பினார்.

துக்கம் விசாரிக்க போனபோது ஆசாமி பாதியாய் மெலிந்திருந்தார்.

“பாவம் சார் எங்கம்மா! அப்பா போனப்றம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. அதுவும் என்னை நெனச்சு அவளுக்கு ஒரே சங்கடம். நான் கல்யாணம் பண்ணிக்கலியேன்னு. அதான் கவலைப்படாதம்மா பண்ணிக்கறேன்னு சொல்லி அனுப்பிச்சேன்!”

“அட! நிச்சயம் பண்ணிக்கோங்க டாக்டர்! உங்களுக்கு நாப்பது ஆயிடுத்தே?”

அப்பா சந்தோஷமாகச்சொன்னார்.

“அட! சும்மா இருங்க சார்! அம்மாதான் நிம்மதியாப்போயாச்சே! இனிமே எதுக்கு கல்யாணம்?”
சொல்லிச்சிரித்தார்.

டாக்டர் நரசிம்மனைப்புரிந்துகொள்வது ரொம்பச்சுலபம்.

ஜீரணிப்பதுதான் கஷ்டம்!