கலைமகளைத் துதி செய்து எழுதிய நீண்ட பாடல் . எனவே இரு பகுதிகளாகப் பகிர்கிறேன்.
பானுமதி ந
விநாயகர் காப்பு
முக்கனிக் கைக் கொண்டு
மும்மலம் அறுத்தொழித்து
முப்புரி நூலணிந்து
முத்தானி மண்டபத்தில்
முருகனின் மூத்தோனாய்
முதல்வனாய் அமர்ந்தோனே!
மாலின் மருகனே!
மாதங்க முகத்தோனே! காத்தருள்வாய்
வேறு
அத்தையின் புகழ் சொல்ல ஆறுமுகன் சோதரனே
அழைத்தேன் உனை, தத்தை சொற் பிழையெலாம்
பொறுத்திடுவாய், தயானிதியே!
நூல்
ஞானச் சுடர் விளக்காய் ஞாலத்தில் ஒளிர்ந்து வரும்
குளிர் அருவியாய் அறிவிலே குளிர்ந்து வரும்
கான மாருதமாய் காற்றிலே தவழ்ந்து வரும்,
கனக மொழி அஞ்சுகமே! கவலை தீர்க்க வருகாயோ?
மோனத் தவ மோகனமாய் புன்முறுவல் படர்ந்து வர
மோதும் அலை கொண்டான் மருகியே வருவாயே!
சீராய் நடனமிடும் சீதளச் சிவன் தங்காய்!
ஆறாத துயர் தீர்க்க அம்பிகையே வருவாயே!
கற்றைக் குழலது இன்ப சதங்கை ஒலிக்கேற்ப
பற்றறுத்துப் பாடிடவே பூங்குழலாய் வருவாயே!
இற்றை உலகிற் கின்பமாய் நடனமிட்டு
மற்றை நம் காரியங்கள் நடந்திடவே வருவாயே!
ஆதியும் அந்தமான ஆதி சிவன் வீணையுடன்
ஆதியின் பாதியான பைரவி இன்பாட்டுடன்
நீதியே உருவான விநாயகன் மத்தளமும் பொய்
கூறியே உலகளந்தான் குழலும் ஒலித்திடவே
மாரியே குழலெனக் கொண்ட உன் மாமியும்
செய் நீதி நான் முகர்க்கு எடுத்துரைத்த ஆறுமுகன்
நாவிலே உனைக் கொண்ட நல் நாயகன் இன்னும்
தேவ கந்தர்வர்கள் வேதம் இசைத்திடவும் நந்தி
தேவன் மத்தளமும் காம தேனு கர தாளத்துடன்
ஜோதி மண்டபத்தில் நடனமாடும் மாலினியே! இம்
மேதினியில் என்முன் இப்படியே வருவாயே!
வெள்ளைக் கலையுடுத்தி யான் வெண் கவரி வீசிடவே
வெள்ளைத் தாமரை மேல் அமர்ந்தருள்வாயே!
வெள்ளமெனப் பொங்கி வரும் உனது வீணை இன்னிசையில்
உள்ளமது உனதாக விரும்பியே ஏற்பாயே!
கொன்றை மரமொன்று ஆகாசக் குடை விரித்து
கொற்றவள் உனக்கொரு ஆசனமாகிவிட
பன்னீர் மரங்கள் உனக்கென்றே பூச்சொரிய
கண்ணீர் மல்கும் அகக் காட்சியினை அளித்தாயே!
வல்வில் இராமன் தன் வலி ஆற்றல் விளக்கிடவே
சொல்லான வில்லெய்து அசுர சிம்மமும் அசந்திடவே
தாளாத உறக்கத்தைத் தவப் பயனாய் அளித்தாயே!
மாளாத என் துயரைப் போக்கவும் மறந்தாயோ?
தொடரும்)
