நேற்று அழகியசிங்கர் நடத்திய விருட்சம் இலக்கிய இணைய சந்திப்பில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

நேற்று அழகியசிங்கர் நடத்திய விருட்சம் இலக்கிய இணைய சந்திப்பில் கலந்து கொண்டு என்னுடைய ‘ஈரப்பதம்’, ‘அரவான்’, ‘மாத்ரி’ ஆகிய கவிதைகளை வாசித்தேன். அழகியசிங்கர் அவர் நடத்தும் கூட்டங்களுக்கு பல முறை எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அவற்றில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையாமலிருந்து வந்தது. நேற்று தற்செயலாய் ஃபேஸ்புக்கில் அழகியசிங்கரின் கூட்ட அறிவிப்பை பார்த்துவிட்டு நான் போய் கலந்து கொண்டேன். நடேஷும் கூட்டத்தில் கலந்துகொண்டது எனக்கு உற்சாகமாக இருந்தது. பலரும் கவிதைகள் வாசிப்பதை கேட்டதும் நல்ல அனுபவம். எல்லா கவிதைகளும் சத்தமாக வாசிக்க உகந்தவை அல்ல; முக்கால்வாசி நவீன கவிதைகளை மனதிற்குள் வாசிப்பதே சாலச் சிறந்தது. நான் வாசித்த கவிதைகள் dramatic monologue வடிவத்தில் தனிநபர் நாடகங்களாகவும் நடிப்பதற்கானவை என்பதால் சத்தமாக வாசிக்க பொருத்தமாக இருக்கும் என நினைத்திருந்தேன். சத்தமாக வாசிக்கையில்தான் மூன்று கவிதைகளும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்ட லய ஒழுங்குகளைக் கொண்டிருக்கின்றன என்ற போதம் எனக்குக் கிடைத்தது. அது கவிதையின் லய ஒழுங்கைப் பற்றிய நல் விழிப்பினை ஏற்படுத்தியது. பல லய ஒழுங்குகள் கொண்ட கவிதைகளை ஒன்றாக்கி முழு நீளத் திரைப்படமாக 1983 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ‘நோக்குக்குத்தி’ (scarecrow – சோளக்கொல்லை பொம்மை) நினைவுக்கு வந்தது. மலையாள கவியும், சிந்தனையாளருமான எம்.கோவிந்தனின் கவிதைகளாலேயே முழுக்க முழுக்க ஆன திரைப்படம். மணிகண்ட வர்மா இயக்கியது. இசை நாடக, கவிதா திரைப்படம் என்றும் அதை அழைக்கலாம். அதிதி கோபாலகிருஷ்ணன், கே.வி. ஹரிதாஸ், கவி கடம்மனிட்டா ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தார்கள். எம்.கோவிந்தனின் புதல்வரும் என் நெருங்கிய நண்பருமான கே.சி.மானவேந்திரநாத் அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருந்தார். கேசியோடு (அவர் மறைந்து போவதற்கு முன்) அடிக்கடி ஃபோனில் நீண்ட நேரம் உரையாடுவது எனக்கு வழக்கமாய் இருந்தது. எங்கள் உரையாடல்களில் ‘நோக்குக்குத்தி’ திரைப்படம் அடிக்கடி இடம்பெறும். அப்போதெல்லாம் கேசி சொல்வார் நீதான் அடுத்த நோக்குக்குத்திக்கான கவிதைகளை எழுதவேண்டும் என்று. நேற்று விருட்சம் கூடுகையில் கவிதைகளை வாசித்தது பல லய ஒழுங்கு கவிதைகளால் ஆன முழு நீள ஐந்து அங்க நாடகம் / திரைப்படத்தை எழுதினால் அது கேசியின் நட்புக்கும் நினைவுக்கும் நான் செய்யும், என்னால் ஆன, எளிய அஞ்சலியாக இருக்கும் என்று தோன்றியது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அந்த முழு நீள கவிதைகளாலான நாடகம்/ திரைப்படத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன். அதற்கு தற்காலிகமாக ‘மாதுளை’ எனத் தலைப்பிட்டிருக்கிறேன்.