
வெயில் தக தகவெனச் சுட்டுப்பொசுக்கிக் கொண்டு இருந்தது. தலையை அடுப்பிற்குள் கொண்டு வைத்தது போன்ற உணர்வு; என்ன தான் சும்மாடு போட்டுக்கொண்டு வேலை பார்த்தாலும், வெயிலின் கொடூரத்தைத் தாங்கும் சக்தி அந்த தலைக்கும், அந்த தலையைத் தாங்கிக்கொண்டு இருக்கும் உடலுக்கும் அவ்வளவாக இருப்பதில்லை.
வசந்தாவுக்கு ஆறுமாதங்கள் வரை, இது ஒரு கொடுமையாகத் தான் தெரிந்தது. இப்போது அவள் வெயிலையும் நேசிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். எத்தனை வருடங்களாக இந்த சூரியன் இந்த கொடூர வெப்பத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு விடிகாலை ஆறு மணிக்கு எழுந்து, மாலை ஆறு வரை உஷ்ணத்தைத் தந்து கொண்டு இருக்கிறான்; வெளிச்சம் கிடைப்பது அவனால் தான்.
“சூரியனின் ஒளியில் விடிகாலை ஒரு மணி நேரம் நின்றாலே, உடலில் இருக்கும் சகல வியாதிகளும் விரைவில் குணமாகி விடும்” என்று பத்திரிகையில் படித்ததாக அவள் மகள் சுமதி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சொன்னாள். அதற்கு முன்பே, வசந்தா சூரியனுடன் கை கோர்த்துக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டு விட்டாள்.
சுமதி, வசந்தாவின் ஒரே பெண்; வயது 17 ஆகிறது. படிக்கவேண்டும் என்று பிடிவாதமாய் நின்ற பெண் அவள். அம்மாவின் சிரமம் புரியாத பெண் அல்ல; ஆனால், விரைவில் படித்து முடித்து அம்மாவின் சிரமத்தை போக்கவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டவள்.
அவள் மிகவும் நன்றாகப் படிப்பதை, அவளுடைய ஆசிரியை சுனைனா ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்த வருடம் அவள் ப்ளஸ் 2 பரீட்சை எழுத வேண்டும். வசந்தாவுக்கு அவள் என்ன படிக்கிறாள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாது. கேட்பவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள் என்றே சொல்லிக்கொண்டு வந்தாள்.
முனியசாமி என்ற அத்தை மகனைத் திருமணம் செய்து கொண்டு 18 வருடங்களுக்கு முன்பாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தவள் வசந்தா. மனதில் என்ன என்ன கற்பனைகள்; எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் முனியசாமி, இவளை மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என்று கூட்டிக்கொண்டு சென்று வந்து கொண்டு இருந்தான். அவனுக்கு என்றே ஒரு நிரந்தர வேலையும் கிடையாது. சில நாட்கள் வேலைக்குச் செல்வான். பணம் கொண்டு வருவான். அவளிடம் தருவான். சில நாட்கள் வேலை இல்லை என்று சொல்லிவிட்டு, வீட்டின் முன்பு இருக்கும் திண்ணையில் அமர்ந்து கொள்ளுவான். மாலை நேரத்தில் அப்படியே ஊர் சுற்றிவிட்டு வந்து இரவு உணவை முடித்து விட்டுப் படுத்து விடுவான்.
அவனுடைய தாயார் சொன்ன பொய் வார்த்தைகளை உண்மை என்று நம்பி வசந்தாவின் தகப்பன் அவளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டான். அவரை பொறுத்தவரையில் அதுவும் சரி தான். நான்கு பெண்களை வளர்த்துக் கரையேற்றவேண்டும். வசந்தா தான் மூத்தவள். ஒருவர் பின்னர்
ஒருவரை அனுப்பி வைத்தால் தான், அவருடைய காலத்திற்குள் அவர் தன்னுடைய கடமையை
முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கமுடியும்.
இங்கும் அங்கும் எடுபிடி வேலை செய்து முனியசாமி தினமும் சொற்ப பணம் கொண்டு வருவான். சென்னை பெருங்குடி பகுதியில், ஒரு சந்துக்குள் இருந்த இருநூறு வீடுகளுக்குள் அவர்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. வாடகை சொற்பம் தான். ஒரே அறை தான்; அது தான் படுக்கையறை; அது தான் அடுப்பறை; மலம் போன்றவற்றைக் கழிப்பதற்கு வெளியில் கட்டிவைத்திருந்த இருபது கழிப்பறைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு தான் தினமும் எத்தனை போட்டி.; வரிசைகள்; சண்டைகள்; எத்தனை அடிதடி; எல்லாம் பழக்கப்பட்டுப் போய் விட்டன.
குளிக்க வேண்டும் என்றால், முனியசாமி வீட்டு முன்பு குளித்து விடுவான். வசந்தா வீட்டிற்குள் உள்ளே அடுப்பறை அருகில் குளித்து விடுவாள். அது தான் அவளுக்குக் குளியலறை மற்றும் பாத்திரங்கள் கழுவும் இடம்.
இப்படியே 18 வருடங்கள் சென்று விட்டது.
பெண் சுமதி பிறந்து பத்து வருடங்கள் வரை முனியசாமி ஒழுங்காகத் தான் இருந்தான். அதன் பிறகு தான், கெட்ட சகவாசம் வந்து சேர, குடி போதையில் மூழ்கி வேலையை விட்டு விட்டு, திண்ணையில் படுத்துக் கிடக்கவும், வசந்தாவுடன் ரகளை செய்யவும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை பிடிக்கவும் அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. வேலை இல்லாத காரணத்தால், அவனுக்குப் பணம் வேண்டியதாயிருந்தது.
அவனுடைய வயிற்றுக்கும், போதைக்கும் சேர்த்து, வசந்தா பணம் கொண்டு வரவேண்டியிருந்தது. சுமதி ஆறு வயது இருக்கும்போதே, வீட்டு வேலைகளுக்குச் செல்ல தன்னை நன்றாகப் பழகிக்கொண்டாள்.
விடிகாலை ஏழு மணிக்கு வேலைக்கு செல்லும் அவள், மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவாள். மீண்டும் மாலை நான்கு மணிக்குச் சென்று விட்டு ஆறு மணிக்குத் திரும்பிவிடுவாள். காலையில் நான்கு வீடுகள்; மாலையில் இரண்டு வீடுகள். பாத்திரங்கள் கழுவுதல், அறைகளைச் சுத்தம் செய்தல், துணி காயப்போடுதல் இவை தான். ஒரே அபார்ட்மெண்டில் வீடுகள் இருந்ததால், அவளுக்கு அலையவேண்டிய சிரமங்கள் எதுவும் இல்லை. ஒரு வீட்டிற்கு ஒரு மணி நேரம் என்று கணக்கு வைத்துக்கொண்டு, முடித்துவிட்டு வந்து விடுவாள். கிட்டத்தட்ட ஒரு வீட்டிற்கு ரூபாய் 1500 என்ற கணக்கில், மாதம் ரூபாய் 9000 வரைக்கு அவளுக்குக் கிடைத்தது. லீவு எடுக்க முடியாது
சில வீடுகளில், காபி மற்றும் டிபன் என்று தருவார்கள். ஒரு சில வீடுகளில் கண்டு கொள்ளவே மாட்டார்கள். தீபாவளி பண்டிகை என்று வந்துவிட்டால், வசந்தாவுக்கும் அவளுடைய பெண்ணிற்கும் சேர்த்து உடைகள் வாங்கி தருவார்கள், நான்கு வீடுகளில். சுமதிக்குப் பள்ளி யூனிபோர்ம் தவிர்த்து இவை தான் ஒரு வருடத்து உடைகள்.
முனியசாமி வேலைக்குப் போகும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வேலை இல்லாதபோதும் சரியாகத்தான் இருந்தது. குடி போதையில் அவன் தள்ளாட ஆரம்பித்த போது தான், வசந்தா வாங்குகின்ற பணத்திற்கும் வெட்டு வந்தது.
வசந்தா, அரிசி பானை, பருப்பு பானை போன்றவற்றில் ஒளித்து வைத்து இருக்கும் பணம், அவனுக்கு எப்படியாவது பாட்டில் வாங்குவதற்குச் சென்று கொண்டே இருக்கும்.
வசந்தா மனதளவில் பட்ட சிரமங்களுக்கு எல்லையே இல்லை. அவனை விட்டுவிடவும் முடியாது. பெண் வளர்ந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கின்ற வரைக்கும், அவள் அவனோடு மல்லுக்கட்டித் தான் ஆகவேண்டும்.
அவள் வேலை பார்த்த வீட்டில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ஒரு நாள் இவள் தன்னுடைய சிரமங்களைச் சொல்லி அழ, அவர் இவள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி இவள் பெயரில் பணம் சேர்க்க ஆரம்பித்தார். தன்னுடைய கையில் இருக்கும் உபரி பணத்தை அவரிடம் கொடுக்கவும், அவர் கணக்கில் வரவு வைப்பதாகவும் இப்படியே சில வருடங்கள் ஒடி விட்டன. அந்த பணம் தான் சுமதியின் படிப்பு செலவுக்குப் பயன்பட்டது.
இந்த சூழ்நிலையில் தான், முனியசாமி அவள் வேலை பார்க்கும் வீடுகளுக்குச் சென்று வசந்தா கேட்டதாகப் பொய்கள் சொல்லி, பணம் வாங்கி வர ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில், இவளுக்கு வீட்டு வேலைகளை விடவேண்டியதாகி விட்டது.
கடந்த ஆறு மாதங்களாக ஒரு கட்டிட கான்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வருகிறாள். சிற்றாள் வேலை. வேலை பார்த்தால் தினமும் 500 ரூபாய் சம்பளம். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை. மாதம் முழுவதும் வேலை பார்த்தால் அவளுக்கு 15000 வரை கிடைக்கும். ஆனால், 25 நாட்கள் வேலை இருந்தாலே அதிகம். அதிலும், பத்து சதவீதம் கமிசன் ஏஜென்ட் பழனிச்சாமிக்குத் தரவேண்டும். அங்கு அவன் தயவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த கமிஷன் பொருந்தும். சில நாட்களில் அவன் இப்படியே கடின வேலை செய்யாமலே 4000 ரூபாய் வரை கூட சம்பாதித்து விடுவான். அவனுக்கென்றே ஒரு சொந்த வீடு இருக்கிறது. அவன் இரண்டு பிள்ளைகள் பெரிய படிப்பு வேறு படிக்கிறார்கள்.
பழனிச்சாமியை விட்டால் வேறு வழியும் இல்லை. இவன் கீழ் வேலை பார்க்கும் அனைவருக்கும் வேலை கிடைப்பதற்கு இரவும் பகலும் போன் செய்து செய்து அலுத்து விடுவான். கொரானா காலங்களில் – வேலை இல்லாத நிலையில் எல்லோருக்கும் மாதம் 2500 வரை தனது சொந்த காசில் இருந்து தந்து உதவினான். அவனிடம் இதுவரை ஒருவரும் சண்டை பிடித்ததாகத் தெரியவில்லை. எவருக்காவது காயம் பட்டு விட்டால், உடனே, ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களை மருத்துவ மனைகளுக்குக் கொண்டு சென்று விடுவான். அதற்குண்டான செலவுகளை அவனே ஏற்றுக்கொள்ளுவான். அவனுக்குப் பணம் நன்றாகவே கிடைக்கும்; அதையும் தேவைக்கு ஏற்ப செலவுகள் செய்வதில் அவன் கில்லாடி. இதுவரை அவனை யாரும் குறை சொன்னதே இல்லை.
பழனிச்சாமியைத் தேடி முனியசாமி மூன்று மாதங்களுக்கு முன்பு வந்து, அவருடன் தகராறு செய்து, பணம் பறிக்க முயற்சி செய்யவும், முனியசாமியை அடித்து விரட்டாத குறை தான். அதன் பிறகு அவன் வருவதே இல்லை.
வசந்தாவைப் பொறுத்தவரையில், வேலை கடினம் என்றாலும், அவளுக்கு ஓரளவு தேவையான பணம் வர ஆரம்பித்தது.
இன்னும் நான்கு வருடங்கள் தான். சுமதிக்குப் படிப்பும் முடிந்து விடும்; திருமணமும் செய்துவிடலாம்.
சிந்தனை எகிறி எகிறி, ஒரு கட்டத்தில், அப்படியே தலை சுற்றி வசந்தா மயங்கி விழும் நிலை வந்து சேர்ந்தது. உடன் வேலை பார்த்த செல்வி அவளை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு வேலை பார்க்கச் சென்று விட்டாள்.
நிழல் போன்று ஒன்று தெரியவே, அப்படியே கலங்கிய கண்களால் வசந்தா நிமிர்ந்து பார்க்க, முனியசாமி இவள் அருகில் நின்று கொண்டு இருந்தான். தன்னுடைய நிலைமை கண்டு இரங்கி, அவன் வந்திருக்கிறான் என்று பேதை மனம் நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில், படக்கென்று, இவள் கழுத்தில் இருந்த செயினை பறித்துக்கொண்டு, காதுகளில் இருந்த தோடுகளைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
ரத்தம் சொட்டச் சொட்ட வசந்தா மயங்கி விழும்போதே, செல்வி என்று சத்தமாகக் குரல் கொடுக்க, செல்வியும் ஓடி வந்து சேர்ந்தாள்.
மருத்துவமனைக்கு வசந்தா வந்து சேர்ந்து அன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டன. காதுகளில் உள்ள புண்கள் ஆறிவிட்டன. வலி மட்டும் இருந்தது. சுமதி தினமும் வருவாள்; இரவில் அவளுடன் படுத்துக்கொள்ளுவாள். ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொண்ட அவள், போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் என்ற காரணத்தால், பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். செல்வியும், தினமும் வந்து இவளைக் கவனித்துக்கொண்டான். பழனிச்சாமி, இவளுடைய மருத்துவச் செலவுகளைக் கவனித்துக்கொண்டார்.
முனியசாமி
அதன் பிறகு வரவேயில்லை. அவன் எங்குச் சென்றான் என்ற தகவலும் இல்லை.
“பிளஸ் 2 முடிக்கப்போகும் சுமதிக்கு எப்படியாவது பணம் புரட்டி, கல்லூரி செல்வதற்கான பணம் புரட்ட வேண்டும்”.
வசந்தா குறைந்த பட்சம், ஒரு மாதம் ஓய்வு எடுக்கவேண்டும், என்று மருத்துவர்கள் சொல்லச் செய்வதறியாது வசந்தா திகைத்தாள்.
அன்று அவள் வீட்டிற்குச் செல்லவேண்டிய நாள். கவுண்டரில் பணத்தைக் கட்டி விட்டு வந்த பழனிச்சாமிக்குப் பின்னால் வந்த செல்வி இவளை கைதாங்கலாக அழைத்துச் செல்வதற்காக கை நீட்ட, அந்த நேரத்தில் பழனிச்சாமிக்கு ஒரு போன் வந்தது.
போனில் பேசியது சுமதி.
“அங்கிள்; நான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து ப்ளஸ் 2 பாஸாகிவிட்டேன். என்னுடைய கல்லூரி படிப்பு செலவை அனைத்தையும் ஒரு நிறுவனம் தருவதாக வாக்கு தந்து விட்டார்கள்.”
நெகிழ்ந்து போன பழனிச்சாமி, வசந்தாவிடம் போனை கொடுக்க, அவன் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் திரண்டு கீழே வீழ்ந்தது.
பழனிச்சாமி நிமிர்ந்து பார்த்தபோது, வசந்தா அவனை இருகரம் கூப்பி வணங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அவளுடைய கண்களில் இருந்து தாரை தரையாகக் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
“திக்கற்றவருக்குத் தெய்வமே துணை” என்ற பழமொழியும் அவன் நினைவில் வந்து போனது
