அறிவு பற்றிய தத்துவப் பிரச்சனைகள்/முடிப்பர் ரஹ்மான்

தத்துவப் பிரச்சனை பற்றிய ஆய்வில் அறிவு பற்றிய ஆய்வும் அது தொடர்பான பிரச்சனைகளும் மெய்யியலில் முக்கிய இடத்தை வகிக் கின்றது. அறிவு அனைத்திற்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைகின்றது. இதனால் அது பற்றிய ஆய்வும் அணுகுமுறைகளும் தத்துவ வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. தத்துவ வரலாற்று ஆய்வாளர்கள் அறிவு எனும் எண்ணக் கருவிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அறிவே இப் பரிணாமம் அனைத்திற்கும் ஆதாரமாக அமைவதாலும் அறிவின் துணை கொண்டே மனிதன் பிரபஞ்சத்தின் உண்மையை அறிந்து கொண்டான் என்றும் ஏற்றுக் கொள்ளப்படுவதினால் அறிவு பற்றிய ஆய்வு தத்துவத்தில் அவசியமாகின்றது.

அறிவு எத்தகையது எனவும் கஎதுவெனவும் ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை தத்துவவாதிகள், ஆய்வாளர்கள், சாதாரண மக்கள் என்போரிடத்து நிலவிய கருத்துக்கள் இங்கு தத்துவம் ஆய்வில் முக்கிய இடம் பெறுகின்றது. அறிவு உள்பொருளானது எனவும் அது நிச்சய தன்மையுடையது என்றும் தெரியும். நம்பிக்கை, நுண்ணறிவு என்பனவற்றிலும் அது மேலானது ஆகும். அறிவே அனைத்து பரிணாமத் திற்கும் அடிப்படை ஆதாரம் எனவும் அறிவு பற்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களை பிற்கால தத்துவவாதிகள் எந்தளவிற்கு ஏற்புடையது என ஆராய்ந்தனர். இவ் வகையில் மேற்கூறிய அறிவு பற்றிய கருத்துக்கள் பாமரக் கருத்துக்கள் என்பர். இவ்வறிவு பற்றிய பாமரக் கருத்துக்கள் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் என ஆராய்ந்தபோது எழுகின்ற முரண்பாடுகளே அறிவு பற்றி எழும் தத்துவ பிரச்சனையாகும்.

தத்துவவாதிகள் இப் பிரச்சனையை ஆராய்வதோடு இது பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான கற்பிதங்களையும் தீர்க்க முனைந்தனர். குறிப்பாக நவீன தத்துவவாதிகளின் கருத்துக்கள் ஆய்வுகள் என்பன இப்பிரச்சனைக்கு வழி கூறுவதாக அமைவதைக் காணலாம்.

அறிவு உள்பொருளானது என்ற கருத்தினை எடுத்துக் கொண்டால் ! அறிஞர்கள் தொட்டு சாதாரண மக்கள் வரை இக்கருத்து உறுதியாக அமைந் திருப்பதைக் காணலாம். ஆரம்பகால தத்துவவாதிகள், மத மெஞ்ஞானிகள், அறிவு உள்பொருளானது என்பதையே வலியுறுத்தி வந்துள்ளனர். பிளேட்டோ எனும் தத்துவஞானி ‘அறிவு’ என்பது நிச்சியமான பொருள் எனவும் அது முழு மையாக இறைவனோடு இணைந்துள்ளது எனவும் அதன் பிரதியையே நாம் இங்கு தரிசிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் ஆசிரியராகிய சாக்கிரடிஸ்சும் அறிவு நிச்சியமானது, உறுதியானது, உள்பொருளானது என்றே வலியுறுத்தியுள்ளார். பிதாகிரஸ் எனும் கணிதமெஞ்ஞானி அறிவை இறைவனே உள்பொருளாக அளித்தார் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறே மதமெஞ்ஞானிகளும் அறிவு உள்பொருளானது எனவும் அதற்கும் ஆன்மீக த்திற்கும் தொடர்பு உண்டு என வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பியர் காலத்திலும் அறிவு முதல்வாதிகள் அறிவு உள் பொருளானது என்றே வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக டேகாட் எனும் தத்துவவாதி மனிதன் பிறக்கும் போதே அறிவோடு பிறக்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அறிவு உள் பொருளானது எனும் கருத்து உறுதியாக நிலவுவதைக் காணலாம்.

நவீன தத்துவவாதிகள் இக் கருத்துக்கள் எந்தளவிற்கு ஏற்புடையது என ஆராய்ந்தனர். உள்பொருள் என்பதன் கருத்து என்ன? உள் பொருள் அறிவு எங்கே இருப்பில் உள்ளது? கடவுள் உள்பொருளானது என்ற கூற்றைப் போன்றே அறிவும் உள்பொருளானது என வழங்கப்படுகின்றதா? உள்ளுக்குள் ஓர் வஸ்து இருப்பில் இருக்கின்றது என்ற பொருளில் பிரயோகிக்கப்படுகின்றதா? இங்கு உள்பொருளானது என்ற கருத்து மேற்குறிப்பிட்ட எந்த வினாவிற்கும் பொருத்தமானதாக அமையவில்லை. அவ்வாறாயின் ஒரு வகையான நடத்தைக்கே இப்பதம் பிரயோகிக்கப்படுகின்றது. என்ற நவீன மெய்யியலாளருடைய கருத்தை தற்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது.

அறிவு உறுதியானது, நிச்சியமனது, பிழைக்கமுடியாதது என்ற கருத்தும் இவ்வாறானதே. அறிவின் இலட்சணத்துக்காக இது உறுதிப்படுத்தப் படுகின்றதே தவிர உண்மையில் அறிவு அவ்வாறு அமைந்திருக்கவேண்டும் அல்ல. அறிவு காலதேவைக்கு ஏற்ப பரிணாமம் அடைந்து வந்திருப்பதைக் காணலாம்.

அறிவைப்பற்றி ஆராய்கின்ற ஓர் பாடம் அறிவாராய்சியியலாகும். அறிவைத் தருகின்ற சகல துறைகளது விடயமும் இதன் விடயமாக அமையலாம். இவ்வாறே அறிவியியலுக்கு ஒரு தனிப்பட்ட ஆய்வு முறை இருக்க வேண்டியதில்லை. அறிவைப் பெறமுயற்சிக்கும் ஆய்வு இதன் முறையாகவும் இருக்கும். அறிவைப் பெறுகின்றபோது அறிபவன், அறியும் முறை, அறியப் படும் பொருள் என்பன அடங்கும். சமயத்தில் அறிபவனை மெஞ்ஞானி என்றும் அறியும் முறையை பரிசுத்த அனுபவமுறையென்னும் அறியப்படும் பொருளை மெய்ப்பொருள் எனவும் கூறப்படுகின்றது.

அறிவும் நம்பிக்கையும் ஒன்றா, அல்லது வேறுபட்டதா என்பது அறிவாராய்சியில் உள்ளதோர் பிரச்சனையாகும். அறிவு என்பது அறிதல் என்பதன் உளமுயற்சியின் விளைவு ஆகும். இவ்வாறு கூறப்படும் போது விளைவின் தன்மை என்ன? உள முயற்சி தனிமுயற்சியா? சமூக முயற்சியா போன்ற கேள்விகள் தோன்றும். நம்பிக்கை என்பது நம்புதல் எனும் உள முயற்சியின் விளைவாகும். இவ்வாறு கூறும் போது நம்புதல் எனும் முய ற்சியின் தன்மை என்ன? நம்பிக்கையின் விளைவு எத்தகையது போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. நான் A யை அறிகின்றேன் எனும் போது என்ன நிபந்தனை பூர்த்தியாகவேண்டும் என்பது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் இடையேயுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கையாளும் ஓர் முறையாகும். நான் ஒன்றை அறிவேன் என்றால் அறிவு நிச்சிய தன்மையுடையதாக இரு த்தல்வேண்டும். நிகழ்தகவுடைய முடிவினை சிலர் அறிவு அல்ல என்பர்.

இதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது பிரச்சனையே ஆகும். ஏனெனில் சமய அறிவுகள் நம்பிக்கையில் தங்கியுள்ளது.

பாரம்பரிய கருத்தில் A.ஐ நான் அறிகின்றேன் எனும் போது A என்பது உண்மையாக இருக்கவேண்டும், நான் அதை நம்புதல்வேண்டும். நான் அதை நம்புவதற்கு போதிய நியாயம் உறுதி இருத்தல்வேண்டும் எனும் மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும் இம்மூன்று நிபந்தனைகளிலும் இருந்து பெறப்படுவது என்னவெனின் அறிவு என்பது உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையாகும். இவ்வாறு கூறும்போது அறிவிற்கும் நம்பிக்கைக்குமிடையே பாஷை ரீதியாக வேறுபாடு உள்ளதே தவிர பண்பு ரீதியாக வேறுபாடு இல்லை.

சமகால தத்துவவாதியான ஏ. ஜெ. அயர் என்பவரின் கருத்தின்படி A என்பவர் B என்பவரை அறிகின்றார் எனும்போது B உண்மையாக இருக்கவேண்டும், B உண்மையாக இருப்பதற்கு B உறுதியாக இருத்தல் வேண்டும், B உண்மை என்று கூறுவதற்கு A யிற்கு போதிய உரிமை இருத்தல்வேண்டும் எனும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும். பாரம்பரிய கருத்தினையும் இக்கருத்தினையும் நோக்கும்போது இவை இரண்டும் சொற்களில் வேறுபடுகின்றதே தவிர கருத்தில் வேறுபாடில்லை. எனவே அறிவு (உண்மை) என்பது உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையாகும்.