
குழந்தை தான் அது…
உலகம் பிடிபடாமல்
தாய்ப் பேச்சும் கேளாமல்
தட்டுத் தடுமாறி
எங்கிருந்து எங்கே
எதைத் தேடி
எங்கள் உள்வாசல் அருகே
நுழையவும் மாட்டாமல்
நகரவும் தோன்றாமல்
‘என்னைத் தூக்கிக்கொள் ‘
என்று கெஞ்சுகிற
குழந்தையைப் போல்
முன்னங்கால் இரண்டும் தூக்கியபடி
வாசல் நிலைப்படியின்
கீழ்ப்பகுதியைக்
கவ்விக் கொள்ளவும் வாகற்று
உந்தித் தாவவும் போக்கற்றுத்
திணறிக் கொண்டிருக்கையில்
வெளி வாசலிலிருந்து
திரும்பிக் கொண்டிருக்கிறோம்
நந்தாவும் நானும்
உறவினரை வழியனுப்பிவிட்டு
‘ஏய் …எலிக்குஞ்சு…’ என்றதும்
காலடி சத்தத்தில்
வாசல் நடையிலிருந்து தோட்டத்தின் பக்கமாகக்
கம்பிக் கதவுப் புறம்
எங்கே எப்படி
எவ்விதம் பாதை கண்டுணர்ந்ததோ
மறைந்து போயிருந்தது நொடி நேரத்தில்….
‘பாவம்ப் பா’ என்ற
அவனது சொற்களில் தெறித்தது
ஒரு குழந்தையைப் பற்றிய கவலை.

குழந்தையின் தவிப்பும் புரிகிறது. தாத்தாவின் பெருமிதமும் புரிகிறது.
அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ். அருமை.
எலி எலி காணோம்
ஆஹா அருமை. அப்படியே ஒரு எலி குழந்தை கண்முன்னே வந்து ஆட்டம் காட்டி விட்டு போகிறது
அருமை அருமை
என்னை தூக்கிக்கொள் என்றதிலும்
பாவம் பா என்றதிலும்
உங்கள் ஜீவ காருண்யம் தெரிகிறது.
கவிதை நயம்பட எலிகுஞ்சு
உலா.
மனசை விடப் பெரிய எலி வளை எது? என்று என் கவிதையைத் தொடங்கி ஒரு கவிதையை எழுதி முடித்திருந்தேன்… உங்கள் கவிதையைப் படித்தேன்… மகிழ்ந்தேன்….
அன்பின் வழிப்பட்டது உலகம் என்பதை உணர்த்தும் கவிதை.