கண்டேன் “காயத்ரி”யை – சுஜாதா கட்டுரை (பிலிமாலயா – டிசம்பர் 1977)/ Ullas Naik


‘காயத்ரி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு என் வாசகர்கள் பலர் எனக்குப் பேனாவில் கோபத்தை நிரப்பிக் கடிதம் எழுதியிருந்தார்கள். எப்படி இந்த மாதிரி கதையின் மென்மையான, நம்பக்கூடிய பாத்திரங்களைத் திரையில் இரு பரிமாணத்திற்கு விகாரமாக மாற்ற நீங்கள் அனுமதித்தீர்கள்? எப்படி முடிவை மாற்ற அனுமதித்தீர்கள்?’ என்று பல குற்றச்சாட்டுகள். அதையெல்லாம் விட, படம் எடுத்த விதத்தில் நான் திருப்தி தெரிவித்திருப்பதாக ஒரு புரளியும் சேர்ந்துவிட அவர்கள் என்னை மன்னிக்கவே முடி யாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ‘நான் எனக்கும் படம் எடுத்த விதத்திற்கும் சம்பந்தமில்லை. தினமணிக் கதிரில் முற்றும் என்று எழுதியவுடன் நானும் காயத்ரியும் பிரிந்து விட்டோம்’ என்று எழுதிக் கொண்டிருக்க எனக்குத் திராணியில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன். காயத்ரியின் எழுத்து வடிவத்தில் இருக்கும் பாத்திரங்களுக்கும் அவர்களின் சினிமாத் தோற்றங் களுக்கும் உள்ள அதீத வித்தியாசங்களில் அந்த உண்மை புலப்பட்டிருக்கும்.

‘காயத்ரி’யைப் படம் எடுக்க திடீர் என்று முடிவு செய்தார்கள். ‘அனிதா இளம் மனைவி’ என்கிற கதைதான் படமாவதாக இருந்தது இருக்கிறது. அதற்கு முன் பஞ்சு அருணாசலம் அவர்கள். ‘காயத்ரி’யைப் படித்துவிட்டு கதையில் சினிமாவுக்கு ஏற்ற அம்சங்கள் நிறைய இருக்கின்றன என்று விரும்பி உடனே எடுக்க முடிவு செய்து என்னைக் கேட்டார். என்னைப் பொறுத்த வரையில் கதையில் சினிமா அம்சங்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பவை இவை; காயத்ரி ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்துகொண்டு நுழைகிறாள். முதலில் அவர்கள் எல்லோரும் பரிவாகவே அன்பாகவே இருக்கிறார்கள். அழகான கணவன். அக்கா, அய்யர், அவர் பெண் எல்லோரும் முதலில் விரும்பத்தக்க படித்தான் இருக்கிறார்கள். மெதுவாக அவர்கள் நடத்தையில் சில வினோதங்களைக் கவனிக்கிறார்கள். சில சம்பவங்கள் உறுத்துகின்றன. எதற்கும் ஒரு விளக்கம் கிடைக்கிறது. மனது அல்லாடுகிறது. அந்த வீட்டில் தான் ஏறக்குறைய சுதந்தரமற்று சிறைப்பட்டிருப்பதை உணர்ந்து முதல் மனைவியை அவுட் ஹவுசில் (out house) சந்திக்கும்போது ஒருவிதமான உச்சக்கட்டம் ஏற்படுகிறது.

இந்தச் சாத்தியங்களை சினிமாவில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே என் அபிப்பிராயம். முதலிலிருந்தே ரஜினிகாந்த் திருட்டு விழி விழித்து பாட்டிலை எடுத்து விடுகிறார். முதலிலிருந்தே பாத்திரங்கள் அத்தனை பேரும் அவர்கள் சுயரூபத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கதையில் Prevailing mood என்று ஒன்று இருக்க வேண்டும். இந்தக் கதையில் அது காயத்ரியின் மேல் போர்வை போல் படரும் பயம். திரையில் அது சரியாகக் காண்பிக்கப்படவில்லை.

கதையில் பாதிக்கு மேல் mood திடீர் என்று மாறி ஜெய்சங்கர், மூர்த்தியின் ஹாஸ்யங்களில் நழுவி காபரே (cabaret) ஹோட்டல், கறுப்புப் பெட்டி, காரில் துரத்துதல் என்று சென்று. கடைசியில் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் ஒரு ரேப் ஸீன் (rape scene) தற்கொலை! இவைகளுக்கெல்லாம் என்னைக் குற்றம் சொல்பவர்கள் காயத்ரியைப் படித்துப் பாருங்கள். புத்தகம் வந்திருக்கிறது.

நான் படம் எடுத்தவர்களைக் குறை 9சொல்வதாக எண்ண வேண்டாம். அவ்வளவு தொட்டாற் சிணுங்கியாக நான் இருந்தால், படம் எடுப்பதை முதலிலேயே அனுமதித்திருக்க மாட்டேன். விரும்பித்தான் கொடுத்தேன். கமர்ஷியல் சினிமா (Commercial Cinema) என்பது இலக்கியப் படைப்பினின்று முற்றிலும் வேறு பட்டது. அந்த விளையாட்டின் விதிகள் வேறுபட்டவை என்பது எனக்குச் சத்தியமாகத் தெரியும். படம் எடுக்கும்போது அவர்கள் தீர்மானித்த காயத்ரியின் முடிவு பற்றி பஞ்சு அருணாசலத்திடமும் பாஸ்கரிடமும் ஒரு நாள் சாயங்காலம் வெளிப்படையாகவே என் கருத்தை வெளியிட்டேன். அவர்கள் “நீங்க பாட்டுக்கு எழுதிப்பிடறீங்க. எல்லாவிதமான ஆடியன்ஸையும் கவளிக்க வேண்டியிருக்கு. குறிப்பாகப் பெண்கள். செங்கல்பட்டுக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்து ஆள் ஒருத்தன் இதைப் பார்க்கிறான். ‘ஆமா அப்புறம் அவளுக்கு என்ன ஆச்சுடா? சொந்தப் புருஷனே அவளை அப்படிச் செஞ்சப்புறம் அவளுக்கு ஏதுடா வாழ்வு?’ என்று கேட்கிறான்னு வெச்சுக்குங்க; அதுக்கு ன்ன பதில்?’ என்றார்கள்.

என்னிடம் அந்த செங்கல்பட்டு ரசிகருக்குப் பதில் இல்லை. திரைப்படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். சென்னை ஆடியன்ஸையும் மொபசல் (mofussil) ஆடியன்ஸையும், கிராமத்து மக்களையும், பட்டி தொட்டிகளையும் எல்லாவற்றை ம் ஒட்டுமொத்தமாகக் கூட்டி ஒரு சராசரி எடுத்தால் கிடைக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகனுக்காக படம் எடுக்க வேண்டிய சங்கட வலையில் இருக்கும் அவர்கள், போட்ட பணத்தைத் திரும்ப எதிர்பார்ப்பதில் நான் வியப்படையவில்லை. ரசிகர்கள் மாற மறுப்பதும், எடுப்பவர்கள் மாற்ற நினைப்பதும் தமிழ் சினிமாவின் புராதன உபாதைகள்; இன்னும் தீரவில்லை.

காயத்ரியின் சென்னை டிஸ்ட்ரிப்யூட்டர்களான இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். அவர்கள் படத்தைத் திறமையுடன் அலசினார்கள். இந்தக் கதையை வேறுவிதமாக எடுத்திருக்கலாம் என்று அவர்கள் சொன்ன வேறு விதம் எனக்கு டிஸ்ட்ரிப்யூட்டர்களைப் பற்றி இருந்த தப்பு அபிப்பிராயத்தை சரேல் என்று மாற்றியது.

என் நண்பர் கமலஹாசன் ‘காயத்ரி’யினாலே உங்க மாதிரி எழுத்தாளர்கள் கதையும் படமா வர ஆரம்பிக்கிறதுதான் முக்கியம். இது ஒரு நல்ல ஆரம்பம். அப்படித்தான் நீங்க நெனச்சுக்கணும். மற்றதை எல்லாம் மறந்துடலாம்” என்றார்.

படம் நான் நினைத்தது போல் வர வேண்டும் என்றால் அதன் treatment டையே நான் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

சினிமா என்பது ஒரு visual medium என்கிற ஆதார உண்மையை ஏன் பல பேர் புரிந்து கொள்ளவில்லை என்று ஆயாசமாக இருக்கிறது.

பஞ்சு அருணாசலத்திடமும் பாஸ்கரிடமும் எனக்கு எத்தவிதச் சண்டையும் இல்லை. அவர்கள் கோணத்தை என்னால் உணர முடிகிறது.

‘காயத்ரி’யின் மூலம் எனக்கு ஏற்பட்ட புதிய நட்புகளை நான் முக்கியமாகக் கருதுகிறேன். அனந்து போன்ற டைரக்டர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சில ஆச்சரியங்கள் வெளிப்படு கின்றன. ஒரு திரைக்கதையை நான் எழுதி, அதை பாலசந்தர் இயக்குவதற்கு வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு சினிமா எடுப்பதின் பற்பல வேதனைகளில் ஒரு நாவலுக்குரிய சமாச்சாரம் இருக்கிறது.

=====================================

என் குறிப்பு :

காயத்ரி திரைப்படத்தைப் பற்றிய ஒரு விவரம் தெரியாத / புரியாத myth பல சுஜாதா வாசகர்களிடையே இன்னமும் உலவுகிறது. அது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்தப் படத்தில் வஸந்த் நடித்து அந்த உன்னதமான பாத்திரத்தை கேலிக்கூத்து ஆக்கிவிட்டார் என்பது.

சுஜாதா எழுதிய காயத்ரி குறுநாவலைப் படித்துவிட்டு படம் பார்த்தவர்கள் இதில் என்ன அபத்தம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். கதையில் கதாசிரியராக சுஜாதாவின் பாத்திரமும் இருக்கிறது. அவர் இந்தக் கதையில் கணேஷ் – வஸந்த் பாத்திரங்களுடன் உரையாடுவார். சந்தேகங்கள் கேட்பார். அவர் கதாபாத்திரத்தை திரைப்படத்தில் “செல்லப்பா” என்ற கோமாளி எழுத்தாளராக மாற்றி, நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி வடிவில், உலவ விட்டிருப்பார்கள். திரைப்படத்தில் வஸந்த் கதாபாத்திரம் கிடையாது. ஜெய்சங்கர் மட்டுமே “கணேஷ்” பாத்திரத்தில் வருவார்.

சுஜாதா கதையின் முடிவை மிகவும் சுதந்திரமாக (1977 லேயே)-open ended – முடித்திருப்பார். தமிழ் திரையுலகில் கற்பு மிகவும் முக்கியம். அது இல்லாவிட்டால் பெண்கள் ஒன்றுமில்லை / கற்பு என்பது உடல் சார்ந்தது என்ற பத்தாம்பசலித்தனம் இன்னமும் உயிரோடு உள்ளது.

சக இயக்குனர் ஒருவரிடம் இது குறித்து பேசியபோது, “இதெல்லாம் தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியாத / தவிர்க்கக்கூடாத அடையாளங்கள். அதை மீறி எந்த இயக்குனரும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். உண்மைதான்.

எனக்கும், (இன்றைய) திரையுலகைச் சார்ந்த பலருக்கும், நண்பர் Ram Sridhar போன்றவர்களுக்கும் புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் முதல் படத்திலேயே தன்னுடைய “அபார திறமை” யைக் காட்டிவிட்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு தன்னுடைய பல நாவல்களை படுகொலை செய்ய சுஜாதா அனுமதித்ததுதான். நட்புக்காக இந்தக் கொடுமை நடந்தேறியது என்றாலும் கூட இது மன்னிக்க முடியாத குற்றம்தான்.

=> => Ullas Naik

One Comment on “கண்டேன் “காயத்ரி”யை – சுஜாதா கட்டுரை (பிலிமாலயா – டிசம்பர் 1977)/ Ullas Naik”

  1. காயத்ரி படம் இருக்கட்டும். நினைத்தாலே இனிக்கும் படம் வந்த அன்றைய தினம் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட்டு ராணி சீதை ஹாலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சுஜாதா விடம் நிகழ்ச்சி முடிந்த பிறகு சுமார் 30 நிமிடங்கள் பேசினேன்.

Comments are closed.