
முன்பெல்லாம் பணி நிமித்தம் ஆண்டுக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்வது வழக்கம். பாலா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நான் என் வாழ்வின் அனுபவங்களை முறையாக அணுகக் கற்றுக் கொண்டது பாலகுமாரனை வாசித்த பிறகு தான். பாலைவன சுடுமணலில், குடும்பத்தின் அருகாமையற்ற கொடுங்கனவு போன்ற நாட்களை நகர்த்திச் செல்ல எனக்கு உறுதுணையாக இருந்தவை பாலாவின் நாவல்களே! என்று கூறுவதை வழக்கமாகக் கொண்ட பல நண்பர்களை நானறிவேன்.
80 களில் பிறந்த எனக்கு பள்ளியிறுதி நாட்களில் தான் பாலகுமாரன் அறிமுகமானார். அவரது நாவல்களில் முதல்முறையாக தூர்தர்ஷனில் தொடராகக் காண நேர்ந்தது ‘இரும்புக் குதிரைகள்’. அப்போது அது பெரிதாக மனதில் பதியவில்லை. இரும்புக் குதிரைகள் ஈர்க்க மறந்த கவனத்தை அவரது தாயுமானவன் கதை ஈர்த்துக் கொண்டது. வாகை சந்திர சேகர் நாயகனாக நடித்த அந்தத் தொடர் பாலகுமாரனின் கதை என்பதை பிறகெப்போதோ தான் அறிய நேர்ந்தேன்.
தொடர் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் மனதில் பதியத் தவறிய பாலா… பள்ளிக்கும், கல்லூரிக்குமான இடைவெளிகளில் நாவல் வடிவில் ஆகர்ஷித்துக் கொண்டார். அது ஒரு கனாக்காலம் என்று சொல்வதற்கேற்ப அப்போது விடுமுறை நாட்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு புத்தககங்கள் வாயிலாக ஆக்ரமித்த எழுத்தாளர்களில் சுஜாதா, ராஜேஷ்குமார், பாலகுமாரனுக்கு மிக முக்கியமான இடமுண்டு. இவர்களில் முதல் இருவரைக் காட்டிலும் பாலா நாவலை விடாது வாசித்த நண்பர்கள் பலர் அப்போது எனக்கு இருந்ததால் நாங்கள் அனைவரும் புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டு வாசித்தோம். அப்போது தான் பாலகுமாரன் எங்களுக்கு பாலாவானார்.
தமிழ் படைப்புலகில் சூப்பர் ஸ்டார்களாக ஜொலித்த எழுத்தாளர்களில் பாலகுமாரனுக்கு முக்கியமான இடமுண்டு. குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட பாலகுமாரன் நாவல்களென்றால் நிச்சயம் பரிச்சயமிருக்கும். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த போதும்கூட இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நிகழ்ந்த பதற்றங்களை ‘வெள்ளைத்துறைமுகம்’ எனும் நாவலாக்கும் முயற்சியில் இருந்தார். சுமார் 500 பக்கங்கள் எழுதி முடித்த நிலையில் உடல்நிலை ஒத்துழைத்தவரையிலும் அதற்கான முனைப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டே வந்திருக்கிறார். அந்த முயற்சி முழுமை பெற்று நாவல் வெளிவந்த பிறகு காலன் அவரை அழைத்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே பாலகுமாரனைப் பொருத்தவரை நிறைவேறாத கடமையாக இருந்திருக்கக் கூடும். மற்றபடி ஒரு எழுத்தாளராகவும், குடும்பத்தலைவராகவும், அவர் தனது வாழ்வில் ஈட்டியது அனைவராலும் அத்தனை எளிதில் தொட்டு விட முடியாத உயரங்களையே!
தமிழில் நாவல் மற்றும் தொடர்கதை உலகில் பாலகுமாரன் சாதித்தது மிக அதிகம். வாரம் தோறும் அவரது கதைகள் பிரசுரமாகாத வார இதழ்கள் இல்லை எனுமளவுக்கு சிலகாலம் தமிழர்கள் பாலகுமாரன் பித்துப் பிடித்துப் போய்க் கிடந்தார்கள். அந்த அளவுக்கு சுஜாதாவைவை அடுத்து இளைஞர்களை அதிகம் ஆகர்ஷித்துக் கொண்ட எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரனே எனலாம்.
பெண் வாசகர்கள் அடுத்தடுத்து இலக்கியத் தரமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் எழுதக்கூடியவர்களான பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன், ரமணி சந்திரன் முதல் தீவிர இலக்கியப் படைப்பாளியான அம்பை வரை தங்களது ரசனையின் எல்லைகளை விரிவடையச் செய்துகொண்டு வாசிப்பின் எல்லையை மடைமாற்றம் செய்து கொள்ள ஆப்சன்கள் நிறைய இருந்த காலகட்டதில் ஆண் வாசகர்களுக்கு சுஜாதாவை அடுத்து தங்களது மனம் ஒப்பிக் கொள்ளும் அளவில் மரியாதைகுரிய படைப்பாளியாகக் கொண்டாடக் கிடைத்தது பாலகுமாரன் மட்டுமே.
நன்றி: தினமணி
முகநூல் பகிர்வு : ஆர்.கந்தசாமி
