விகடனிலிருந்து பேசுகிறோம் /சிவசங்கரி

விகடனிலிருந்து பேசுகிறோம் என்றதுமே, “என் மகள் லலிதாவைப் பற்றி விகடனுடன் கட்டாயம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்மா. விகடன் சேர்மன் பாலன் சாரின் செகரட்டரியாக அவளை வேலைக்கு அமர்த்திவிட்டேன். அவளின் கற்பூர புத்தியைப் பார்த்துவிட்டு எடிட்டோரியலிலும் பயிற்சி கொடுத்தார் சேர்மன். அந்தக் காலகட்டத்தில் என்னுடைய கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அந்த நாள்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்” என்றவர் தன்னை நிதானப்படுத்தி கொண்டு, வளர்ப்பு மகள் தன் வாழ்வில் நுழைந்த தருணம் பற்றிப் பேசினார்.

`1976 அல்லது 77 என்று நினைக்கிறேன். அப்போது நான் என் கணவருடன் விழுப்புரத்தில் இருந்தேன். அந்தச் சமயத்தில் நிறையப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். நிறைய வாசகிகள் கடிதம் மூலம் தங்களுடைய பாராட்டை எனக்குத் தெரிவிப்பார்கள். அப்படி ஒரு வாசகியின் கடிதமாகத்தான் லலிதாவின் கடிதமும்அம்மா’ என்று விளித்து வந்திருந்தது.

அப்போது அவள் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் ஹோம் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள். கடிதத்தில், உங்கள் எழுத்துகளையெல்லாம் படித்துவிட்டு உங்களை என் அம்மாவாக நான் வரித்துக்கொண்டேன்' என்று எழுதியிருந்தாள். நான் அதற்கு,உங்களுக்கு ஒரு அம்மா இருக்கிறார். அதனால் நான் உங்களுக்கு அம்மாவாக முடியாது. ஆனால், நல்ல சிநேகிதியாக இருக்க முடியும்’ என்று பதில் கடிதம் எழுதினேன். அதற்கு அவள், ஒரு இன்லேண்ட் லெட்டர் முழுக்க அம்மா, அம்மா என்று எழுதி அனுப்பினாள். அத்தோடு விட்டாளா… ஒருமுறை யாருக்கும் தெரியாமல் கல்லூரிக்கு லீவு போட்டுவிடு என்னை வந்து பார்க்க விழுப்புரம் வந்துவிட்டாள்.

அதிர்ந்து போய்விட்டேன் நான். இப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்ற பிறகு அப்படிப்பட்ட தவறை அவள் செய்யவே இல்லை. ஆனால், நான் எழுத்துத் தொடர்பான வேலைக்காகச் சென்னை வரும்போதெல்லாம் நான் தங்குகிற ஹோட்டலில் தவம் கிடப்பாள். மேலே படி என்றதும் செகரெட்டரி கோர்ஸ் படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சென்றாள். என்னை அம்மா என்றும், என் கணவரை அப்பா என்றும், என் அம்மாவைப் பாட்டி என்றும் அழைப்பாள்.

ஒரு தடவை என் அம்மா, `அந்தப் பொண்ணு உன் மேல உயிரையே வெச்சிருக்கா. உன்னை அம்மான்னே கூப்பிடட்டும்” என்றார்.

நான் அவளுடைய முழுமையான அன்பை என் கணவர் இறப்பின் போதுதான் தெரிந்துகொண்டேன்.

“எங்கள் குடும்ப வழக்கப்படி மகள்தான் தந்தையின் உடலைக் குளிப்பாட்ட வேண்டும். அவரைச் சுற்றி அத்தனை கூட்டம். என் லலிதா… என் மகள்… விடுவிடுவென்று எழுந்து உள்ளே போனாள். தலையில் தண்ணீர் விட்டுக்கொண்டு வந்தவள், என் கணவரின் உடலை… இல்லையில்லை… அவள் அப்பாவின் உடலைக் குளிப்பாட்ட ஆரம்பித்து விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் அவள் அன்பில் ஆடிப்போய்விட்டோம்மா…” – எழுத்தின் கரை கண்ட ஆளுமையின் குரல் உடைந்து சிதறுகிறது. தேற்றவே முடியவில்லை சிவசங்கரியை…

“என் கணவர் மறைந்ததும், தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, எனக்கு எல்லாமுமாகிப் போனாள். அவள் கணவர், அவள் குடும்பம் என எல்லாருமே என் மீது பிரியமாகத்தான் இருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்னால், `சாப்பாட்டை விழுங்கக் கஷ்டமாக இருக்கிறதுமா’ என்றாள். முதலில் டாக்டர்கள் கேஸ்ட்ரிக் பிராப்ளம் என்று சிகிச்சையளித்தார்கள். எதுவும் சரியாகவில்லை. ஸ்கேன் செய்து பார்த்தோம். இரைப்பையிலும், கல்லீரலிலும் கேன்சர்… நாலாவது ஸ்டேஜ் என்றார்கள். நாங்கள் நிலைகுலைந்து போனோம்.

ஆனால், அவள் மட்டும் இன்னும் ஆறே மாதத்தில் சரியாகி வந்து உங்க எல்லாரையும் டேக் கேர் பண்ண ஆரம்பிச்சுடுவேன்' என்று நம்பிக்கையாகப் பேசி வந்தாள். கடைசி நேரத்தில்கூட என்னை மறுபடியும் தனியாக விட்டு விட்டுப் போகிற வேதனையை அவள் கண்களில் பார்த்தேன்.நாங்க எல்லோரும் பத்திரமா இருப்போம். நீ நல்லபடியா போயிட்டு வா’ என்று சொன்னபிறகுதான் அவளோட உயிரே கிளம்பியது.

என் குழந்தை கடைசிக்காலத்தில் ஒரு வாய் நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல், வலி தாங்க முடியாமல் … ஒரு நாளைக்கு ஆறு தடவை பெயின் கில்லரும், தூக்க மாத்திரையும் சாப்பிட்டு… கஷ்டப்பட்டுட்டாள்மா. இன்னமும் இதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியலை…” – குரல் உடைகிறது சிவசங்கரிக்கு.

மகளின் நினைவுகள் மட்டுமே இனி அவருக்கான ஆறுதல்.

நன்றி: விகடன்

முகநூலில் பகிர்ந்து கொண்டவர் : ஆர்.கந்தசாமி