விளம்பரத்தில் Surrogate என்று ஒன்று /ரமேஷ் கல்யாண்

விளம்பரத்தில் Surrogate என்று ஒன்று உண்டு. பதிலி விளம்பரம் என்று தோராயமாக தமிழில் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பெயரில் ஒரு பொருளுக்காக விளம்பரம் செய்வார்கள். ஆனால் அந்த பொருள் கிடைக்காது. அல்லது பெயரளவில் இருக்கும். நுகர்வுக்கு கிடைக்காது. ஏனென்றால் விளம்பரத்தின் நோக்கம் அந்த பொருளுக்கு அல்ல. அதே பிராண்டின் பெயரில் உள்ள சட்டபூர்வமாக விளம்பரம் செய்ய முடியாத வேறொரு பொருளுக்கு. . உதாரணமாக கிங்க்பிஷர் தண்ணீர் பாட்டில் என்று விளம்பரம் செய்யும். ஆனால் அதன் நோக்கம் மது. ராயல் சேலஞ் கோல்ப் விளையாட்டு என்று சொல்லும். ஆனால் அதன் நோக்கம் மது. பேக்பைப்பர் சோடா என்பார்கள். ஆனால் அதன் நோக்கம் மது. இப்படி பல. இப்போது புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை என்பதால் அதை வேறு வகையில் செய்வார்கள். சமீபமாக குட்கா வகை புகையிலை பொருளுக்கு ஏலக்காய் வகை என்று அமிதாப், அக்ஷய், தேவ்கன் போன்ற பெரும் நடிகர்கள் விளம்பரத்தில் தோன்றினார்கள். அது ஆட்சேபிக்கப்பட்டு சிலர் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். சிலர் அந்த விளம்பரம் மூலம் தனக்கு வரும் பணத்தை நன்கைடையாக தந்துவிடப் போவதாக சொன்னார்கள். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் குறிப்பிட்ட விளம்பரம் சட்டபூர்வமானதுதான். ஆனால் அதன் நோக்கம் நியாமானது அல்ல. ஆகவே விளம்பரதாருடன் உள்ள உடன்படிக்கை முடியும் காலம் வரை அந்த விளம்பரத்தை நிறுத்த சொல்லி அவர் கோர முடியாது.

சட்டபூர்வமான ஒன்று என்பதாலேயே அது நியாய பூர்வமானதாக இருந்துவிட முடியாது. இதற்கு பொறுப்பாளிகள் பிராண்டின் உரிமையாளர்கள்தான்.

தற்போது அரசாங்கம் இதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் நீங்கள் விளம்பரம் செய்யும் பொருளின் வருடாந்திர விற்பனை குறைந்தபட்சம் ஐந்து கோடி இருக்கவேண்டும். விளம்பரம் செய்யப்படும் மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி இருக்கவேண்டும் என்கிறது. அதாவது பொருள் இல்லாமல் வெறும் பிராண்டின் பெயருக்காக விளம்பரம் என்பதை தடுக்கும் நோக்கம்.

இம்பீரியல் ப்லூவின் – men will be men – போன்றவை மிக பிரபலம். விள்ம்பரம் என்பது அடிக்கடி உங்களுக்கு ஒரு பெயரை விதவிதமாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
கிங்க்பிஷர் காலண்டர்கள் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு அவர்கள் செய்யும் செலவு பெரிது. விளம்பரம் என்பதன் மூலம் ஒரு பொருளை வாங்க எண்ணம் உண்டாகும்போது அந்த பிரண்டை நோக்கி நீங்கள் நகர்வீர்கள்.

Surrogate advertisement என்பது அது misleading information எது என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையும் உண்டு.

விற்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் விளம்பர அனுமதி இல்லை என்பது என்ன லாஜிக் என்று கேட்கிறீர்களா? நியாயம்தான்.

எந்த விளம்பரமும் இல்லாமல் அதிக வசூல் ஆவது டாஸ்மார்க்குகளில் அல்லவா. அரசாங்கத்துக்கு பொறுப்பு இருப்பதால்தான் அதற்கு விளம்பரம் செய்வதில்லை.

அந்தவகையில் பொருட்கள் போக – மிகச் சிறந்த பிராண்டுகள் இன்றைய அரசியல் கட்சிகள்தான். ஒரே பொய்யை விதவிதமாக சொல்லி சொல்லி அதை உண்மையாக நிறுவிவிட முயலும் தரப்புதான்.

ஏனென்றால் அவர்களுக்கு நன்றாக தெரியும் வாக்காளர்களை குடிமகன்களாக (சிடிசன்ஸ்) பார்க்காமல் நுகர்வோர்களாக, பயனாளர்களாக பார்க்க தெரிந்த ஜனநாயக பிசினஸ் அது.

விளம்பரத்தில் சட்டபூர்வம் என்பதை தாண்டி சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அது குறித்து வேறொரு பதிவில்.