ஔவையார் தனிப்பாடல்கள் [தொடர்ச்சி]/வளவ. துரையன்

வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகம் செறிந்தகை யாள்

சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர்.

அடகு = கீரை. அரிசி உணவு இல்லை. எண்ணெயிட்டு வதக்கிய கீரைதான் உள்ளது என்று சொல்லி உண்ணத் தந்தாள். அது விரும்பக்கூடியதாய், நறுமணம் மிக்கதாய், வயிறார வேண்டியமட்டும் தின்னக்கூடியதாய், பசுமை மாறாமல் சமைக்கப்பட்டு அமிழ்தம் போல் இருந்தது.

ஔவைக்கு இடும்போது அவளுக்கு ஏற்பட்ட பூரிப்பால் அவளது தோள்வளையல் செறிவுற்றது.

“தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ தும்சோழ மண்டலமே” – பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

சிலம்பி என்னும் தாசி 500 பொன் கொடுக்க கம்பர் பாடிய பாதிப்பாட்டை ஔவை நிறைவாகக் கூழுக்குப்பாடியது. தண்ணீரில் சிறந்தது காவிரி நீர். வேந்தரில் சிறந்தவன் சோழன். மண்ணில் சிறந்தது சோழமண்டலம். இவற்றைப் போல சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் நல்லாள் காலில் உள்ள சிலம்பு.