மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்

தந்தையின் ஓராண்டு நினைவில்…..

எங்கள் அன்புத் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று – ஜூன் 17. கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி எங்கள் மகன் நந்தாவின் பிறந்த நாளில் அழைத்து வாழ்த்தும்போது வழக்கமான உற்சாகத்தோடு தான் இருந்தது அவரது குரல். இன்று, நந்தாவுக்கு பி காம் கடைசி செமஸ்டரின் கடைசி தேர்வு. வாழ்த்த அவரில்லை. கடந்த ஆண்டு அவர் மறைந்த இதே நாளில் கூட அவனுக்கு செமஸ்டர் தேர்வு இருந்தது, அதுவும் அந்த செமஸ்டரின் கடைசித் தேர்வு. அவர் முகத்தைப் பார்த்துத் துயரம் பொங்க ஆசி பெற்று எழுதப் போன நாளாக அது இருந்தது.

அன்றைய நாள் கொரோனா அச்சம் விலகாத பொழுது, காலை நடையை நானும் ராஜியும் வீட்டு மொட்டை மாடியில் நடந்து கொண்டிருக்க, தம்பி தேசிகனின் அழைப்பு வந்த போது, அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தான் முதல் செய்தி. வழக்கம்போல் இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடுவார், கவலைப்பட வேண்டாம் என்று ராஜி சொல்லிக் கொண்டிருந்தாலும், அந்த முறை உள்ளூர ஒரு மனது இந்த முறை என்ன ஆகுமோ என்ற பரிதவிப்பில் இருந்தது. காலை ஒன்பது மணிக்கு முன் அவர் விடை பெற்றிருந்தார்.

‘எப்போது தகவல் வந்தாலும், முதல் ஆளாக நீ வந்து சேரவேண்டும்’ என்று என்னிடம் அதற்கு முந்தைய சந்திப்புகளில் ஒரு முறை என் கரம் பற்றிச் சொல்லி இருந்தார் அப்பா. ‘அப்படியெல்லாம் நடக்காது, நீங்கள் இன்னும் இன்னும் இருப்பீர்கள்’ என்ற போது, ‘இது கூடுதல் கால அளவு, எப்போதும் நிறைவு பெற்றுவிடும்’ என்று மிக இயல்பாகச் சொன்ன அன்று நான் ஏதும் பேசாமல் அவர் என்னிடம் நிறைய பேசிக் கொண்டிருந்த நாள்.

தகவல் வந்தபோது, அப்படி சட்டென்று போட்டது போட்டபடி நான் முதல் ஆளாகப் போய்ச் சேர முடியவில்லை தான். நாங்கள் புறப்பட்டுப் போவதற்குள், மருத்துவமனையில் இருந்து அவர் வழக்கமான இடத்திற்கு வெற்றுடலாக வந்து சேர்ந்துவிட்டிருந்தார், வழக்கம்போல் நாங்கள் உள்ளே நுழையும்போது, ‘ரமேஷா’ என்று அப்போது அவர் விளிக்கவில்லை. ஆனால், அந்தக் குரல் இந்த விடியற்காலை நேரத்தில் இதை எழுதும்போதும் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அப்பா வேறொன்றும் சொல்லி இருந்தார், என் மறைவுக்குப் பிறகு உரிய முறையில் என் வாழ்க்கை குறித்து மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியது உன் வேலை என்றார். கடந்த ஓராண்டில் எழுதி இருக்கும் எல்லாத் தொடர்களிலும் வலிய திணிக்கப்படாமல், வெகு இயல்பாக விவாதப் பொருள்களில் அவர் நிறைந்து ததும்பி இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.

கடந்த ஆண்டு இதே நாளில், அவர் இல்லாத முதல் நாளில் அம்பத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அறிந்தவர் தெரிந்தவர்க்கெல்லாம் அனுப்பிய செய்தி இதோ இங்கே இருக்கிறது:

என் அன்புத் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள், முதுமை காரணமான மாரடைப்பினால், இன்று காலை 8.50 மணிக்கு காலமானார். 95 வயது.

ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர். உன்னதமான மனித நேயர். அப்பழுக்கற்ற சேவை, வருவாய்த் துறையில் அசாத்திய துணிச்சல், நேர்மை, கம்பீரம் இவற்றின் உருவமாகத் திகழ்ந்தவர்.

தான் பழுத்த இறை நம்பிக்கையாளர் எனினும் மாற்று சிந்தனை ஏற்று என்னை, தோழர் ராஜேஸ்வரியை மார்க்சிய தத்துவப் பிடிப்பை மதித்துக் கொண்டாடி ஏற்று எங்கள் திருமணம், பின்னர் 2019ல் எங்கள் மகள் இந்து அஷ்வின் திருமணம் சடங்குகள் அற்று தானே முன்னின்று நடத்தி ஆசி வழங்கிய மகான்.

பி இராமமூர்த்தி, விபி சிந்தன், இ எம் எஸ் நம்பூதிரிபாட், என் சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் பால் அபார மதிப்பு கொண்டிருந்தவர்.

விடை தருகிறோம் பாகுபாடு அற்று சமூகப் பார்வை, பரந்த பொது நலம், யார்க்கும் அஞ்சாத நேரிய வாழ்க்கை இவற்றோடு என்றும் பேசப் படும் பண்பாக்கத்தின் அன்பு உள்ளத்திற்கு.

இந்த மாதம் ஐந்தாம் தேதி, குவிகம் இணைய வழி நிகழ்வில், நண்பர் கவிஞர் நாகேந்திர பாரதி அவர்கள் நடத்திய அருமையான நேர் காணலில், ‘உங்கள் தந்தை ஒரு நண்பரைப் போல் உங்களோடு நெருக்கம் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா இட்டிருந்த பணியை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்று மேலும் உணர்ந்த தருணம் அது.

என் எழுத்தை மிகவும் விரும்பி வாசித்துப் பெருமையோடு அவர் கொண்டாடியதைக் கடைசியான சந்திப்பு ஒன்றில் மிகவும் சிறப்பான முறையில் தெரிவித்தார். அவருள் ஒரு கம்பீரமான இலக்கிய விமர்சகர், அரசியல் நோக்கர், சமூகப் பார்வையாளர், நெறி மிக்க கடமையாளர் இருப்பதை வெவ்வேறு தருணங்களில் வியப்போடு பார்த்ததுண்டு. தனது கருத்துகளை வெளிப்படுத்த ஒருபோதும் அஞ்சியவர் அல்ல அவர், தனது உயரதிகாரியிடம் கூட – செய்யும் பணி சார்ந்தும்கூட! கணமேயும் காத்தல் அரிதான கோபம் தான் குணமென்னும் குன்றேறி நின்ற அவரது கோபம். அதே வேளையில், அபார நகைச்சுவை உணர்வு பெற்றிருந்தவர் அவர். இசையில் அவருக்கு இருந்த நாட்டமும், கலைகளில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஓயாத அரசாங்கப் பணிகளில் ஓடிக்கொண்டே இருந்தபோதும் வெளிப்படுத்தியவர் அவர்.

மைலாப்பூரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களது வில்லுப்பாட்டுக்கு (‘பாவி டயர் செய்த பஞ்சாப் படுகொலை’ என்ற வரியை அடிக்கடி சுப்பு மாதிரியே பாடிக்காட்டுவார்), மவுண்ட் ரோடு தியேட்டர்களில் படங்களுக்கு (அதே கண்கள் பார்த்துவிட்டு எனக்கு 3 நாள் காய்ச்சல் கண்டதைக் கிண்டல் செய்வார்), வேலூர் வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் இரவு நெடுநேரம் எடுத்து முடியும் இராமாயண பட்டிமன்றங்களுக்கு, கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நாட்டிய பேரொளி (அடைமொழிகளோடு தான் திரைக்கலைஞர்கள் எல்லோரையும் குறிப்பிடுவார்) பத்மினியின் தசாவதாரம் நாட்டியத்திற்கு, திருப்பதி மலைக்கு, திருவண்ணாமலை கோயில் பிரமோற்சவத்திற்கு, சாத்தனூர் அணைக்கட்டுக்கு, மறவாமல் ஒவ்வொரு முறை கடக்கும்போதும் ஆற்காடு ஸ்வீட் என்று மக்கன் பேடா கடைக்கு…..எதைத் தான் தரவில்லை அவர், எத்தனை கோடி இன்பம் ஈந்தார்!
1979இல் நான் பட்டப்படிப்பு முடித்தது சென்னையில், முதுநிலை படிப்புக்கு என்னோடு கோவையில் இரு என்று அவர் சொல்லவும், அரசினர் கலைக்கல்லூரியில் விண்ணப்பம் பதிவு செய்திருந்தேன், ஒரு நாள் காலையில் அழைத்திருந்தனர், விவரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு, இறுதி முடிவு பிற்பகல் என்று சொல்லி இருந்தார் வேதியியல் துறைத்தலைவர். மீண்டும் போய்க் காத்திருந்தோம் மாணவர்கள் சிலர். மொத்தம் 12 இருக்கைகள் தான். பெரும்பாலும் பட்டப்படிப்பு செமஸ்டர் முறையில் படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்து இருந்தனர், நானோ நான்-செமஸ்டர் முறையில் படித்துவிட்டுப் போனவன், வாய்ப்புகள் இல்லை என்றே போய் நின்றுகொண்டிருந்தேன்.

சுவாரசியமான ஒரு விகிதத்தில் 2:1 என்று பிரித்து எட்டு பேர் செமஸ்டர், நான்கு பேர் நான்-செமஸ்டர் என்று அனுமதி வழங்க இருந்தனர். துறைத் தலைவர் ஒவ்வொருவர் பேராக அங்கே இருப்போரை அழைத்தார், ஜோசப் உனக்கு கிடைச்சிருச்சு, சாமுவேல் பிரபாகர் உனக்கும், சங்கரன் உனக்கும் கிடைச்சிருச்சு, ஆறுமுகம், மாணிக்கம், பரமேஸ்வரி, மரியா ஜெஸ்ஸி உங்களுக்கும் கிடைச்சிருச்சு…என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டு போனவர், தனது கையில் இருந்த பதிவேட்டைப் பார்த்தபடி என்னருகே வந்தார், வேணுகோபால் என்றார்…வேணுகோபால்… வேணுகோபால்.. வேணுகோபால்… என்ன சொல்றது, நீயோ நான்-செமஸ்டர் ஆச்சே….வேணுகோபால் என்று ஜபம் செய்வதுபோல் ராகம் போட்டு என் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்து, அதனால் தான், உனக்கும் கிடைச்சிருச்சு என்று நிறுத்தி சிரித்துக் கை குலுக்கி அனுப்பி வைத்தார்.

அந்தக் குறுகிய இடைவேளையின் தவிப்பு என்னால் அட்மிஷன் கிடைத்ததைக் கொண்டாட முடியாத ஒரு கிறுக்கு மனநிலைக்கு ஆழ்த்த, அதே உணர்வோடு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன், வீட்டில் இருந்து ஜீப்பில் புறப்பட்டு ரெஸ் கோர்ஸ் சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த என் தந்தை, ஜீப்பை நிறுத்தச் சொல்லி அருகே அழைத்தார், “என்னப்பா ஆச்சு?” என்று ஆர்வத்தோடு கேட்டார்.

“கெடைச்சிருச்சுப் பா, சீட் கொடுத்துட்டாங்க” என்று எந்த மகிழ்ச்சியும் உணர்ச்சியும் இன்றி வறட்சியான ஒரு குரலில் அவருக்குச் சொன்னேன்.

“அதை சந்தோஷமா சொல்லத் தெரியாதா…முகத்தைப் பார்த்தா கிடைக்காத மாதிரி இல்ல இருக்கு….” என்று கடுங்கோபத்தோடு அவர் என்னைக் கடிந்து சொன்னதில் தெறித்த அவரது பரிதவிப்பு என்னை வாட்டியது, எத்தனை முட்டாள் தனமாக நடந்து கொண்டோம் என்று இப்போது கூட வலிக்கிறது.

எப்போதும் இராம காதையில் வருவதைப்போல, ‘கண்டேன் சீதையை’ என்று தான் தகவல்கள் சொல்ல வேண்டும் என்று இளமையிலேயே கற்பித்தவர் அவர். எதிரே செய்திக்குக் காத்திருப்பவரது உளவியல் முக்கியம் என்ற பாடத்தை அன்று நெருக்கமாக உணர்த்தி விட்டிருந்தார் தந்தை.

பின்னாளில், அலாதியான சிரிப்பும், கொண்டாட்டமுமாக எத்தனையோ விஷயங்களை அவரோடும், அவர் எங்களோடும் பகிர்ந்த ஒவ்வொரு தருணமும் அற்புதமானவை. அதேபோல், துயரச் செய்திகளை எத்தனை எச்சரிக்கையோடும், படிப்படியாகவும், கவனத்தோடும் அடுத்தவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கற்பித்திருந்தார் அவர்.
நேரில் வந்து யார் அழைத்தாலும், எல்லா நிகழ்வுகளுக்கும், கொரோனா காலத்தைத் தவிர மற்ற காலங்களில் விட்டுக்கொடுக்காமல் அம்மாவையும் அழைத்துக் கொண்டு போய் வாழ்த்திவிட்டு வருவார் அப்பா. தம்பிகள் அதை நேர்த்தியாக உறுதி செய்வார்கள், தேசிகன் கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொள்வான். சபையில் அவர் போய் அமர்ந்து இருப்பதும் உற்றார் எல்லாம் அடுத்த நொடியே அவரைச் சூழ்ந்துகொண்டு நலம் விசாரித்துத் தங்கள் குடும்ப முன்னேற்றங்கள் அவருக்குச் சொல்லிவிட்டு ஆசி பெற்றுச் செல்வதும் அமோகமான காட்சியாக இருக்கும். அம்மா தனது உடல் நல பிரச்சனைகள் எல்லாம் பொருட்படுத்தாது அவரது அணுக்கத் தொண்டர் போல், அதே நேரத்தில் அவரது உடல் நலம் குறித்த அக்கறையோடு அவரோடு அத்தனை நெடிய நடை நடந்திருக்கிறார் காலமுழுவதும். சிற்றன்னை என்று உணராமல் அன்னையாக அவரை அடையாளப்படுத்தியவர் தந்தை, தாயற்ற எனக்கு அறிமுகமாகும்போதே அன்னையாக ஆகிவிட்டவர் அவர்.

கடந்த மார்ச் மாதம் கூட, எங்கள் அண்ணன் ரங்கராஜனின் மைத்துனர் மகள் திருமணத்திற்கு அப்பாவும் வழக்கம்போல் வந்திருந்தார், அதே நேரத்தில் நாங்களும் அங்கே கலந்தோம். ஆனால் எங்கள் யாருக்கும் ஒரு துயரச் செய்தி சொல்லப்படாது இருந்தது, எங்கள் அண்ணனின் மாமனார், அதாவது மணப் பெண்ணின் தந்தை வழி பாட்டனார் முதல் நாள் வரவேற்பில் உற்சாகமாக வந்துவிட்டுப் போனவர், விடியற்காலையில் எழுந்து ‘வெந்நீர் போடு, குளித்துவிட்டு மண்டபத்திற்குப் போகவேண்டும் ‘என்று சொன்னவர் – அடுத்த சில நிமிடங்களில் மாரடைப்பில் மரித்துப் போயிருந்தார்.

திருமணம் எல்லாம் நல்லபடி முடிந்தபின், சற்று நேரமெடுத்துத் தான் மணப்பெண்ணின் தந்தைக்கே அவரது தந்தையின் மறைவுச் செய்தி சொல்லப்பட்டது, அப்போது வீடு திரும்பி விட்டிருந்த என் தந்தை, அம்மாவையும் அழைத்துக் கொண்டு தனது நெருக்கமான நண்பராக மலர்ந்திருந்த சம்பந்தி மறைவின் அதிர்ச்சியோடு நேரே போய்ப் பார்த்துக் கதறிவிட்டுத் திரும்பினார்.

மகிழ்ச்சியோ, துயரமோ, நெகிழ்ச்சியோ கையடக்கமாக வைத்துக் கொள்ள அவருக்குத் தெரியாது. ஒருவர் தவறிழைத்திருக்கிறார் என்று தெரிந்துவிட்டால் சமரசமும் கிடையாது, நேருக்கு நேர் கேட்டுவிடுவார், பின் சமாதானமாகிக் கொள்வார்.

கோவையில் பிற்பட்ட வகுப்பு மாணவர் விடுதி காப்பாளர் ஒருவர் நடத்தை காரணமாக நேரே சென்று விசாரணை நடத்தி உடனே தற்காலிக வேலை நீக்கம் செய்து விட்டு வந்துவிட்டார் அப்பா. அன்று நள்ளிரவு நேரம் வீட்டு வாசல் தட்டுப்பட, மாடியில் படித்துக் கொண்டிருந்தவன், இறங்கி வந்து யார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன், உறக்கத்தில் இருந்த என் தந்தை தானும் எழுந்துவந்து உரத்த குரலில் யாரது இந்த நேரத்தில் என்று கேட்க, அந்தப் பக்கம் பதிலே இல்லை, நான் ஒற்றைக் கதவு மட்டும் மெல்லத் திறந்து பார்க்க, எதிரே இருப்பவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, அப்பா கண்டுகொண்டு விட்டார், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் வார்டன்.

எனக்கோ அச்சம், ஏதேனும் ஆயுதங்களோடு அப்பாவைத் தாக்க வந்திருப்பாரோ என்று கதவைச் சார்த்த முற்பட்டேன், அவரோ, என்னைத் தள்ளிவிட்டு வெளியே சென்று, ‘வீட்டுக்கு எதற்காக வந்திருக்கிறாய், அதுவும் இந்த நேரத்தில்?’ என்று இரைந்து பேசினார். அந்தக் காப்பாளர் காலில் விழுந்தார், குழந்தை குட்டியெல்லாம் இருக்கு, என்னைத் தண்டிக்க வேண்டாம், இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று ஏதேதோ புலம்பினார். என் தந்தை ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்: ‘உன்னை நம்பி எத்தனை குழந்தைகளை அங்கே விட்டிருக்கிறோம், அவங்களைப் பட்டினி போட்டால் உன் பிள்ளைகளுக்கு எப்படி சோறு கிடைக்கும், அப்படி செய்யலாமா நீ, பணத்தைக் கையில் தொடும்போது பயம் வேண்டாமா, மரியாதை வேண்டாமா, எப்பேற்பட்ட பொறுப்பு அது?’

தன் மீது ஒரு முறை பொய்யான புகார் எழுப்பப்பட்ட போது, கொஞ்சமும் அசரவில்லை அவர், வீட்டில் புலம்பக் கூட இல்லை. இத்தனை நாள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்தேன், எனக்கு இந்த நிலையா என்று ஒரு முறை கூட என்னிடம் சொன்னதில்லை. அசாத்திய துணிவோடு எதிர்கொண்டு நெருப்பாக நின்றார். ஆனால், அவரது கடைநிலை ஊழியர் நாச்சிமுத்து அய்யா எங்களிடம் அப்படி கலங்கிக் கண்ணீர் வடித்து, அவர் மீது வன்மம் கொண்டிருந்தோரை சபித்துக் கொட்டினார்.

சக மனிதர்களை நேசிக்கவும், அன்பு செலுத்துவதே வாழ்க்கையாக வாசிக்கவும், தாராள மனத்தோடு உதவிகள் புரியவும், நல்லது நடக்கையில் அழைத்தோர் மகிழ ஓடோடிப் போய் வாழ்த்தவும், நெருக்கமானவர் குடும்ப இழப்பில் அருகே சென்று ஆற்றுப்படுத்தவும், நேர்மையாக இருக்கவும், மிகுந்த சகிப்புத் தன்மையோடு மனிதர்களைப் புரிந்து கொள்ளவும், ஒட்டி வாழவும் தமது வாழ்க்கை நெறியால் இடையறாது கற்பித்துக் கொண்டே இருந்த உன்னத வாழ்க்கை வாழ்ந்தவர் தமது இருப்பை நிறைவு செய்த நாளிது.

ஆனால், அவர் இல்லாதது தெரியாது கடந்து போய்விட்ட ஆண்டு தான் இது. நிறைவாக வாழ்ந்த மனிதர்கள் நிறைந்து இருக்கின்றனர் இல்லங்களில் – உள்ளங்களில்! அவர்கள் மறைந்து விட்டனர் என நாம் ஏன் துயரத்தில் மூழ்க வேண்டும். நினைவுகளில் கட்டமைக்கப்படுவது தான் மனித வாழ்க்கை, அந்த நினைவுகள் செம்மையானவை எனில், வாழ்க்கையின் அடித்தளம் எத்தனை வலுவானது, அதன் தோற்றம் எத்தனை பொலிவானது, அதன் வண்ணங்கள் எத்தனை சிறப்பானவை, அதன் குரல் தேவைப்படும்போது உரத்தும், ஆற்றுப்படுத்தும் போது மென்மையாகவும் ஒலிக்கிறது, அவரது குரலைப்போலவே !


6 Comments on “மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்”

  1. செழுமையான நினைவாற்றல், செரிவான நினைவேந்தல். படிப்போரை கலங்கடிக்கும், நெகிழ வைக்கும் சொல்லாடல். அற்புதமான நடை. தந்தையைப்பற்றி இதுவரையில் பகிர்ந்து கொள்ளாத நிகழ்வுகள் , அற்புதம். நன்றியும் வாழ்த்துக்களும்.
    எ. சண்முகம்.

  2. நேர்மை, அஞ்சாமை, முற்போக்கு அரசியல் செயல்பாட்டார்களோடு நட்பும் புரிதலும்
    புரிந்து தங்களது அன்பு மகனுக்கு ஆதரவான மனநிலையில் வாழ்ந்த வாழ்க்கை நிறைவில் இன்னும் தங்கள் செயல்பாட்டில் வாழ்கிறார் அவருக்கு எனது இதயங்கனித்த வணக்கம்!

  3. “அந்த நாள் ஆண்டவன் படைப்பு” இன்று ஒரு திரைப்பாடலில் வரும். உங்கள் தந்தை அப்படிப்பட்டவர். சிறந்த குணங்களுக்கு இருப்பிடமாகத் தானும் இருந்து கொண்டு, தன் அடுத்த தலைமுறைக்கும் அதில் போதித்தவர் என்று தெரிகிறது. “அவரவர் எச்சத்தால் காணப்படும்” திருவள்ளுவர் சொன்னது உங்கள் விஷயத்தில் உண்மையாகிறது.

  4. எத்தனையோ நாட்கள் இம்மகானை பற்றி நேரில் கூரிய பொது சிலகித்ததுண்டு! இன்று கண்களை துடைத்துகொண்டு படிக்க வேண்டியதாயிற்று

Comments are closed.