கோடை வயல்/தி சோ வேணுகோபாலன்

நாகப் படம் ஒடுங்க,
நச்சுப்பல் ஒடிந்துவிழ
வேகத் திரைகடலின்
வீறலைகள் தானடங்சு
ஆகக் குகைக்குள்ளே
அனல் குளிர்ந்து நீறாக
ஏக மவுனத்தின்
இறுக்கத்தில், இருள் வழிய,
அச்சுக் கறுப்பாகி
அலைந்ததெலாம் நின்றுவிட
மிச்சம் இருப்பதெலாம்
மிரண்டோடி விட்டதினால்
கொஞ்சம் பொறுப்பீர்.

………..

கோடிட்டு
அடையாளம் செய்து
விட்டு விட்டேன் ;
சென்மங்கள் உண்டானால்
வருகின்ற சென்மத்தில்
வழிபார்த்துத்
தடம் பிடித்து
தொடர்ந்து தொழில் புரிவேன்
தலையெழுத்தும் உண்டானால்!

………

அந்த நாள் வரைக்கும்
அழியாமல் காத்திடுவீர்.
போதைக் கவிச்சுவையால்
பித்தன் போல் வேண்டுகிறேன்
சேதப் படுத்தாதீர்!
சிதைத்துக் குலைக்காதீர் !

…….

பிள்ளைக் கனவெல்லாம்
பின்னாலே பேசுதற்கே
வெள்ளைக் காகிதங்கள்
விட்டுவைத்தேன்
பல இங்கே !

One Comment on “கோடை வயல்/தி சோ வேணுகோபாலன்”

Comments are closed.