உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி

இன்று காலை எனது நண்பர் மேட்டூர் டாக்டர் மனோஜ் கிருஷ்ணன் அவர்களுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன தகவல்

வயதான மூதாட்டி ஒருவர் வந்து சர்க்கரை அளவைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். பரிசோதனையில் நானூறுக்கும் மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்திருக்கிறது. “ஏன், சர்க்கரைக்கு மாத்திரை சாப்பிடுவதில்லையா?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார். “ஐயா, நான் சின்ன சின்ன வேலைகளுக்குப் போய் கொஞ்சம் சம்பாதிபேன். இப்போது சில நாட்களாக வேலை கிடைக்காததால் மாத்திரை வாங்கப் பணம் இல்லை. நேற்றுதான் அரசாங்க மாதாந்திர உதவிப்பணம் ரூபாய் ஆயிரம் வந்தது” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு டாக்டர் “உங்களுக்குப் பிள்ளைகள் யாரும் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். “மகள் வீடு பக்கத்தில்தான் உள்ளது. மாத்திரை வாங்க பணம் கேட்டதற்கு நான்கு நாட்கள் மாத்திரை சாப்பிடாவிட்டால் செத்தா போய்விடுவாய்? என்று சொல்லி விட்டு மகள் பணம் தர மறுத்து விட்டாள்” என்று அந்த மூதாட்டி கூறினாராம்.

அதன் பின்னர் டாக்டர் பரிசோதனை, மாத்திரை என்று ஐநூறு ரூபாய் அளவுக்கு அந்த அம்மாவிற்கு இலவசமாக எல்லாம் செய்து கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

“மருமகள், மகன் கொடுமைப்படுத்துவதைக் கேள்விப்பட்டதுண்டு. மகளே இப்படியா? இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெறாமலே வறியவர்கள் அவர்களை வளர்த்துத் திருமணம் செய்த செலவுப் பணத்தைத் தங்கள் முதுமைக்குச் சேமித்து வைத்திருக்கலாமோ?” எனறே எனது மனது நினைத்தது.

இப்படி எத்தனையோ பணம் இல்லாத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும் மனோஜைப் பார்த்துப் “பிழைக்கத் தெரியாத மருத்துவர்” என்று மக்கள் சொல்வதும் உண்டு.

வியாபாரமாகி விட்ட மருத்துவ உலகில் மனிதாபிமானத்தோடு பணமில்லாத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நாட்டில் மிகச் சிலரே உள்ளனர். பணத்தின் மீது ஆசை இல்லாத வியப்புக்குரிய மனிதர் டாக்டர் மனோஜ். இத்தனைக்கும் மிகவும் வசதியானவரும் இல்லை. பாரதியைப் போல நாய்களுக்கும், பூனைகளுக்கும், மயில்களுக்கும், பசியோடு இருக்கும் மனநலம் குன்றிய மனிதர்களுக்கும் அவர் உணவு அளிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.

உயர்ந்த உள்ளம் கொண்ட எனது இனிய நண்பர் டாக்டர் மனோஜ் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.

One Comment on “உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி”

Comments are closed.