
நீங்கள் கிரிக்கெட் ரசிகரா? உங்களுக்கு குறைந்த பக்ஷம் 50 வயதாகியிருக்கிறதா? இப்போது சொல்லுங்கள் Tunbridge Wells என்ற ஊரை ஞாபகம் இருக்கிறதா? மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ டூத் பேஸ்ட் விளம்பரத்தில் ” உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? ஒரப்பு இருக்கிறதா? உங்களுக்கு உடன்பிறப்பு உணர்வுகளான சூடு & சொரணை இருக்கிறதா? ” என்று உங்கள் பாத்ரூமுக்குள்ளேயே அடாவடியாய் நுழைந்து வெள்ளையுடைக் காரிகை கேட்கிற மாதிரி என் கேள்விகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.
ஜூன் 18, 1983 …….இந்தியக் கிரிக்கெட்டிற்கு ஒரு மகத்தான நாள். நான் ஒன்றும் மறந்துபோய், ஜூன் 25ற்குப் பதிலாக, ஜூன் 18 என்று சொல்லவில்லை.
உலகக்கோப்பையை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உயர்த்திப் பிடித்து கனத்த மீசையையும் மீறிச் சற்றே பெரிதான தன் முன்னம் பற்கள் தெரிய சிரித்து கபில்தேவ் நிகஞ்ச் என்ற ஹரியானா ஹரிக்கேன் உலகக் கிரிக்கெட் வரைபடத்தில் இந்தியாவின் இடம் என்ன என்பதை வரையறுத்த நாளை எல்லோருக்கும் நினைவிருக்கும். அது ஜூன் 25.
ஆனால், ஜூன் 18, 1983?
அந்த நாளும் விதியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாள்தான்.
அன்று எப்போது வேண்டுமானாலும் பொழிவேன் என்ற மிரட்டலுடன் அடர்ந்த மேகம் கவிந்திருந்தது.
Tunbridge Wells என்ற லண்டனுக்கு வடக்கே 31 மைல் தொலைவில் ஒதுங்கியிருந்த டவுனில்தான் அந்த நம்பமுடியாத கிரிக்கெட் நிகழ்வை விதி நடத்திக்கொண்டது.
39 கோடைகளுக்கு முன், மூன்றாவது உலகக்கோப்பைத் தொடரின் ஒரு மேட்ச் அங்கேயுள்ள Neville Cricket Groundல் நடக்க அந்த நாளைத்தான் நிச்சயம் செய்திருந்தார்கள்.
இந்திய அணி, கிரிக்கெட் உலகின் அப்போதைய குள்ளமணியான ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜிம்பாப்வே அணியை ஒப்புக்குச் சப்பாணியாகக் கருதியதாலும்( இப்போது அப்படியெல்லாம் எந்த அணியையும் சொல்லமுடியாது ) இந்தியா எப்போதுமே இங்கிலாந்தின் பார்வையில் அடிமை தேசம் என்பதாலும் ஆட்டக்களத்தை அசிரத்தையாகத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து இவை போன்ற பெரும் அணிகள் விளையாடுவதாயிருந்தால், Tunbridge Wells போன்ற ஒரு தூங்குமூஞ்சி நகரத்தை விளையாட்டுக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.
இதில் சோகமான வேடிக்கை என்னவென்றால், Tunbridge Wellsல் இந்த மேட்சிற்கு முன்னும் வரலாறு தழுவிக்கொண்ட இந்த மேட்சிற்குப் பின்னும் ஒரு சர்வதேச ஆட்டம் கூட நடைபெற்றதில்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.
அதனால் என்ன…? அந்த ஊரின் கிரிக்கெட் ரசிகர்களும் அநியாயத்திற்குக் கொஞ்சூண்டு இந்திய ரசிகர்களும் என ஒரு நாலாயிரவர் மழை மிரட்டலுக்கு நடுவில் கசிந்து கொண்டிருந்த இளவெயிலில் பீர் அருந்திக்கொண்டு ” என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே ” என்ற ஆவலற்ற நோக்கில் மைதானத்தின் விளிம்புதாண்டி இரைந்து கிடந்தார்கள்.
ஆட்டம் ஆரம்பித்தது. ஆனால், முதலில் பேட்டிங்க் ஆடிய இந்திய அணியோ ஜிம்பாப்வேயின் பெளலிங்கில் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சூதில் மாட்டிக்கொண்ட தர்மபுத்திரன் மாதிரி விழி பிதுங்கி நின்றது.
மேகப் பந்தலின் ஈரம் துணை நிற்க ஜிம்பாப்வே பெளலர்கள் இந்திய மட்டையாளர்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஜிம்பாம்வே வீரர்களின் சந்தோஷக் கூக்குரலைத் தவிர்த்து மயான அமைதி தவழ்ந்தது மைதானத்தில்.
அப்போதுதான், கைப்பின்னலில் வேய்ந்த முழு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு களமிறங்கினார் கபில்தேவ். கைகால்களைச் சுழற்றி உடம்புக்கு சூடுகொடுத்துக்கோண்டு, பின் அம்பயரிடம் தடுப்புக்கு அளவு குறித்துக்கொண்டார். ஐந்தாவது விக்கெட்டும் இந்தியாவின் ஸ்கோர் 17 ஆக இருக்கும்போது வீழ்ந்தது.
அதன் பின், பட்டணத்தில் பூதம் சினிமாவில் வருவதுபோன்று , கபில்தேவின் மட்டையில் பட்ட பந்து கதறிக்கதறி மைதானத்தின் எல்லாத் திசைகளின் எல்லைக் கோடுகளையும் — எல்லைக்கோடுகளாக மலர்ந்திருந்த rhododendron பூக்கள் அடர்ந்த செடிகளையும் தொட்டுத் தொட்டு காமத்தீ பரவின காதலென முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
ஜிம்பாப்வேயின் பெளலர்களான பீட்டர் ரா சன், கெவின் கரன் (சென்னை சூப்பர் கிங்க்ஸில் போன சீஸனில் கலக்கிக் கொண்டிருந்த சாக்ஷாத் சாம் கரனின் தோப்பனார்தான் ) மற்றும் ஜான் ட்ராய்கோஷ் எல்லாம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதை உடல்மொழியில் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
மட்டையில் பட்டதெல்லாம் பெளண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவுமான ரன் மழை பெய்துகொண்டிருக்க…. சூல்கொண்டிருந்த வான் மேகம் உறைந்து போயிருந்தது.
கபில்தேவ், அதுவரை யாரும் தொட்டிராத 175 ரன்களை வெறும் 138 பந்துகளில் எட்டி அவுட் ஆகாமலிருந்தார். அந்த இமாலய 175ல் பதினாறு பெளண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடக்கம்.
கபில்தேவின் அன்றைய விஸ்வரூபத்தில் Tunbridge Wells மேலும் சுருங்கி ஒரு புள்ளியாகிப் போனது.
குறிப்பிட்ட அறுபது ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 266 ஆக உயர கபில்தேவிற்கு உறுதுணையாக அன்று ரோஜர் பின்னி, சையத் கிர்மானி மற்றும் மதன் லால் போன்ற வானர சேனைதான் உதவியது.
லாங்க் டைல் என்றால் அணியின் நீண்ட வால்தானே?
இந்த ஒரு மேட்சிற்குப் பிறகுதான், இந்திய அணியை ” கபிலின் சாத்தான்கள் ” என மருண்டும் செல்லமாகவும் அழைக்க
ஆரம்பித்தது சர்வதேச கிரிக்கெட் உலகம்.
இன்று கிரிக்கெட் உலகத்தின் வணிக சாத்தியத்தை …. குறிப்பாக இந்தியாவின் சொல் அம்பலம் ஏறுவதை நாம் பார்க்க முடிகிறதென்றால்…. அது இந்த உலகக் கோப்பைக்குப் பிறகுதான்.
தேவர் மகன் படத்தில், சிவாஜி சொல்லுவாரே … ” விதை … நாம போட்டது ” என்று. அதே போல் உலக அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் கம்பீரத்திற்கு விதை ….. கபில் போட்டது. அவரின் 16 பெளண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் கொண்டு உருவாக்கின…. தேவதைக் கதைகளை மெய்ப்படுத்தின …. புராண இந்திய வீரர்களின் பெருமையை மீட்டெடுத்த …. இந்திய உலகக்கோப்பைக் கனவை உயிர்ப்பித்த அந்த 175 நாட் அவுட்தான் வீரிய விதை.
ஆனால், நான் எழுத வந்தது இந்தியக் கிரிக்கெட்டின் பாதையை… அதன் போக்கை… மாற்றிவிட்ட இந்த மேட்சின் விவரங்களைப் பற்றி மட்டுமல்ல.
பொதுவாக, அமைதியில் ஊறிக்கொண்டிருக்கும் அந்த Neville Cricket Ground, கபில்தேவின் உன்னத ஆட்டத்தை அரூபமாக மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
ஒன்றுமே இல்லாத தெருக் கிரிக்கெட் மேட்சையே வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளும் பீத்தல் உலகம், உலகக் கோப்பை அதிர்ஷ்டத்தையே மாற்றிப் போட்ட Tunbridge Wells ஆட்டத்தை இருட்டாக்கி வைத்தது என்ன ஒரு துரதிர்ஷ்டம் ?
சாதாரணமாகவே இங்க்லீஷ்காரன்கள் ale ஐ உறிஞ்சிக்கொண்டு ஏலேலோ என்றிருப்பார்கள். எப்போதாவது விக்கெட் விழுந்தாலோ பெளண்டரி அடித்தாலோ குக்கும்பர் சேண்ட்விச்சை மெல்வதை நிறுத்திவிட்டு, நாம் பிச்சைக் காரர்களுக்கு பாக்கெட்டைத் தடவி எடுத்து போடும் ஓரிரண்டு குறைந்த மதிப்பு நாணயங்கள் மாதிரி ரெண்டு மூணு கைத்தட்டல்களை அளந்து போடுவார்கள். ஆனால், அன்று அப்பேற்பட்டவர்களே கபில்தேவின் மட்டையில் பட்ட செர்ரியின் வலியில் சிலிர்த்த சத்தத்திற்கு எல்லையோரப் பூக்களோடு சேர்ந்து குதூகலித்ததை ஒரு ஃபோட்டோ கூட எடுக்காமல்… அந்த அழகான வெள்ளை ஸ்டேடியத்தின் கேலரியில் அந்த மேட்சின் ஒரு படம் கூட இல்லாமல் அமங்கலமாக இருப்பதை என்னவென்று சொல்வது…?
BBC நிறுவனம் அன்று ஏனோ சைக்கிள் கடை கவுண்டமணி பாணியில் ” வெங்கடேசன்னு பேர் வெச்சிருக்கறவனுக்கெல்லாம் வண்டி வாடகைக்குக் கிடையாது” ங்கற த்வனியில், இந்தியா ஜிம்பாப்வே மேட்சையெல்லாம் படம்பிடிக்கவோ ஒளிபரப்பவோ முடியாது…. இன்னிக்கு நாங்க ஸ்ட்ரைக்குப்பா ” னு Tunbridge Wells பக்கமே turn பண்ணவில்லை.
ஸ்ட்ரைக் என்று சொன்னதெல்லாம் பொய் … இந்தப் “பொடி” மேட்சில் ரிப்போர்ட் செய்வதற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை என்ற மேதாவித் தனமான போக்குதான் என்று சில பேர் சொல்லக் கேள்வி( மீடியாவைக் கொச்சைப் படுத்திவிட்டேன் என்று யாராவது BBC சார்பாகக் கேஸ் போட்டுவிட்டால் என்ன செய்வது…! எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது ) .
அதனால், என் தாத்தா கல்யாணம் மாதிரி… இந்த மேட்சும் புகைப்படங்களும் தொடர்ப் படமும் இல்லாத ஒரு நினைவாகவே இருக்கும் சாபத்தைப் பெற்றிருக்கிறது. ” ஓ ! அந்த மேட்சா ? நான் அங்கிருந்தேனே … ! ” என்று பாதி ஆச்சர்யத்தில் கண்விழிக்கும் சில ப்ரிட்டிஷ்காரர்களுக்கும் முடி உதிர்ந்து தொப்பை விழுந்து சில பற்கள் மட்டுமே கொண்ட வாயோடு வயதானதின் சகல அடையாளங்களும் ததும்ப கபில்தேவின் 175 நாட் அவுட்டை அவர்கள் அவுட் ஆகப் போகும் சில வருடங்கள் மட்டுமே நினைவிலிருந்து சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.
நானும் ஒவ்வொரு வருடமும் இந்தக் காப்பிய நாளின்…… நெருங்கி அணைத்துக்கொண்ட பழம் நினைவுகளின் கதகதப்பில் உருகிக் கொண்டிருப்பேன்.
இதெல்லாவற்றையும் என்னை யோசிக்க வைத்திருப்பது அன்றைய ஹிண்டு நாளிதழின் விசேஷ கிரிக்கெட் correspondent திரு. மோஹன் அவர்களின் தொடர் பதிவுதான். அவர் அனுப்பவில்லை என்றால் கபில்தேவ், பெளலரின் தலைக்கு மேல் தூக்கி அடித்த ஒற்றை ஷாட்கூட நமக்குக் கிடைத்திருக்காது. அவரின் கவிதையான இங்க்லீஷ் ரிபோர்ட்டிங்கை ( cannon fodder turns in to a cannon என்பதுதான் இந்த ஆட்ட முடிவின்பின் அவர் despatch செய்திருந்த தலைப்பு) அர்த்தமே புரியாமல் மனப்பாடம் செய்து வைத்து நண்பர்களிடம் ரொம்ப நாளைக்கு பெரிய கிரிக்கெட் விற்பன்னன் மாதிரி பீளா விட்டுக்கொண்டு அலைந்தது வேறு கதைக்கான மேட்டர்.
எனக்கு இந்த நாளைப் பற்றி எண்ணும்போதெல்லாம் துஷ்யந்தன் மறந்துபோன சகுந்தலையின் ஞாபகம்தான் வரும்.
சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் துர்வாசகராக மாறிப் பெரும் சங்கீதக் குரலில் கோபத்திலும் ஸ்ருதி விலகாது ” துஷ்யந்தா நீ மறந்து போ… துஷ்யந்தா நீ மறந்து போ ” என்று சாபத்தை இரண்டு முறை உறுதி செய்து பாடும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
கபில்தேவின் இந்த ஆட்டம் இனி நாட்டுப்புறப் பாடல் போல வாய் மொழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்லும் பயணம் கூட ஒரு தொன்ம வசீகரமாகிவிடும்.
Tunbridge Wells ன் Neville Cricket Ground ஐ அணைத்து எல்லையாக நிற்கும் rhododendron bushes வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் துளிர்த்து மலர்ந்து சிரிக்கும் பூக்களோடு ஒரு வரலாற்றுப் பிழையை ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கும்

