அமிர்த தாரை – 33/விசிறி சங்கர்


My Father alone lives in this body. So I am
everywhere. My life is everywhere, Nobody else, Nothing else.

எந்தையே இந்த உடலில் வாசம் செய்கிறார். எனவே நானே எல்லாமுமாக
எங்கும் இருக்கிறேன். எனது வாழ்வு எங்கும் நிறைந்திருக்கிறது. வேறு எதுவும் இங்கில்லை! வேறெவரும் இங்கில்லை !

சுயம் நீங்க, சுடரும் சுயம்புவாக யோகி உரைத்த உயர் அனுபவ வெளிப்பாடு இந்த வார்த்தைகள்.

நான் எனும் சிறைக்குள் சிக்கி, தத்பாவத்தில் இருந்து இயங்கும் நம்மைப் போன்றவர்களுக்கு, இந்த வார்த்தைகள் புதிராகவே தெரியும்.

கடந்து உள் உறையும் கடவுளைக் கண்டவரின் அனுபவம் இஃது.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தரிசனம் இஃது.

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க என்று இறைவனை ஏகமாகவும், அனேகமாகவும் காணும் திருவாசக நோக்கு இஃது

எங்கும் எதிலும் இறை ஒன்றையே காணும்
பக்திப் பெருக்கு இஃது

” காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா “

என்ற மாகவி பாரதியின் பரவசப்
பார்வை இஃது .

த த்வம் அஸி என்ற இரண்டற்ற தன்மையின் ஒளி இஃது

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே சிந்தை தெளிந்த நிலை இஃது

தன்மை அழிய, முன்னிலை, படர்க்கை இல்லா முழு நிலை இஃது

ஈசா வாஸ்யம் இதம் சர்வம் என்ற உபநிடத உண்மை இஃது

அய்யா உண்டு என்ற வைகுண்டரின்
அருள் நிலை இஃது