
வீரயுக நாயகன் ‘வேள்பாரி’ நாவலின் வாசிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. உங்களுக்கு சரித்திர நாவல் பிடிக்குமென்றால் நிச்சயம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அடிப்படையில் இதுவொரு வெகுசன படைப்பு என்றாலும் அதையும் தாண்டிய விஷயங்களைக் கொண்டிருக்கிறது.
நடுத்தரவர்க்கத்தினரின் பிரதான பொழுதுபோக்காக ஒரு காலத்தில் இருந்த ‘தொடர்கதைகள்’ என்கிற கலாசாரம் இன்று ஏறத்தாழ வழக்கொழிந்து விட்ட நிலையில் இது போன்ற எஞ்சிய தொடர்களே அதன் அருமையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.
இனக்குழுக்களை அழித்து உருவாகிய பேரரசுகளின் கதை என்கிற பின்புலத்தில் ஒருகாலக்கட்டத்து தமிழக வரலாற்றை புனைவின் நிழலில் பேசுகிறது ‘வேள்பாரி’ . காடு பற்றி நாம் அறியாத பல நுண்விவரங்கள் இந்தப் புனைவில் கொட்டிக் கிடக்கின்றன. கலாசார தொன்மையின் விவரங்களும் இதில் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.
**
நேற்று வாசித்த பகுதி ஒரு சாகச திரைப்படத்தின் பரபரப்பான ஆக்ஷன் பிளாக்கிற்கு இணையானது. வாசித்தவர்களுக்கு தெரியும். ஓர் அபூர்வமான விலங்கினத்தை திருடுவதற்காக பறம்பின் எல்லையில் அந்நியர்கள் புகுந்து விடுகிறார்கள். காடு பழகுவதற்காக மாணவர்களை அழைத்துச் செல்லும் தேக்கன் இவர்களைப் பார்த்து விடுகிறான். தானே அவர்களைத் தடுக்கச் சென்று இயலாத நிலையில் பாரிக்கு தகவல் சொல்கிறான்.
அவர்களைத் தடுப்பதற்காக இவர்கள் வகுக்கும் வியூகங்களும் அவற்றில் வெளிப்படும் பின்னணி விவரங்களும் எதிர் தரப்பு செய்யும் எதிர்வினைகளும் எழுத்தில் அல்லாமல் சுவாரசியமான காட்சிகளாக நம் கண் முன் விரிகின்றன. தனது திறமையான, விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இதை சாதித்திருக்கிறார் சு. வெங்கடேசன். வாசிப்பின் பலம் என்பது இதுதான். காட்சிகளைச் சார்ந்திருக்காமல் நம் சொந்த கற்பனைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
பாரியும் தேக்கனும் காலம்பனும் வாசிக்கும் ஒவ்வொருவரின் மனப்பதிவுகளிலும் வெவ்வேறு தோற்றங்களில் விரிவார்கள்.
இந்தப் பரபரப்பான பகுதியை ரயிலில் வரும் போது வாசித்துக் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டுக் கூடாதே என்றும் தோன்றிக் கொண்டேயிருந்தது. ‘என்னடா இது இம்சை..’ என்று வழியிலேயே ஒரு நிலையத்தில் இறங்கி ஓரிடத்தில் அமர்ந்து இந்தப் பகுதி முடியும் வரையில் வாசித்து விட்டு பிறகே கிளம்பினேன். எத்தனை சுவாரசியம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
(ஆனால் இந்தப் பரபரப்பான பகுதி முடிந்த பிறகு அவிழும் முடிச்சில் தர்க்கம் சற்று இடறி இருப்பதாக எனக்குப் பட்டது)
**
ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாகவோ, அல்லது கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடராகவோ உருவாக்குவதற்கு சிறந்த படைப்பு என்று ‘வேள்பாரி’யைச் சொல்வேன். அத்தனை விவரங்களை உள்ளே கொட்டியிருக்கிறார் ஆசிரியர்.
‘இத்தனை சிறப்பாகச் சொல்கிறார்களே’ என்று பொன்னியின் செல்வனை எத்தனையோ முறை வாசிக்க ஆரம்பித்து சலித்துப் போய் விட்டிருக்கிறேன். (இன்னுமொரு முறை முயற்சிக்கலாம் என்றும் ஓர் உத்தேசம்). ஆனால் முதன்முறையிலேயே என்னை வளைத்துப் போட்டு விட்டார் வெங்கடேசன். கல்கியை மிக அநாயசமாக ஓவர் டேக் செய்து விட்டார் என்றே சொல்வேன்.
**
எங்கிருந்தோ கிடைத்த epub கோப்பை வைத்து என்னுடைய பழைய ஆண்ட்ராய்ட் கைபேசியில்தான் இந்தப் புதினத்தை தள்ளித் தள்ளி வாசித்துக் கொண்டிருக்கிறேன். ம.செ.வின் அற்புதமான ஓவியங்களை இழக்கிறோமே என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது.
இந்தப் புதினம் தொகுப்பாக வந்த சமயத்தில் “இந்த நூலை உங்களுக்கு வாங்கித் தந்தே தீருவேன். தயவு செய்து நீங்கள் வாங்கி விடாதீர்கள்’ என்று உள்பெட்டியில் ஒரு நண்பர் தொடர்ந்து செய்தி அனுப்பிக் கொண்டேயிருந்தார். பிறகு காணோம்.
அவருடைய கண்ணில் இந்த நிலைத்தகவல் படவேண்டுமென்று வனதேவதையை வேண்டிக் கொள்கிறேன். 🙂
(மீள்)
