ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 18

14.10.2021


அழகியசிங்கர்

சம்பிரதாயமான வணக்கங்களுக்குப் பிறகு, ஜெகன் பேச்சைத் துவங்குகிறான்.

ஜெகன் : நீங்கள் முபீன் சாதிகாவின் கட்டுரைகள் என்ற  புத்தகத்தைப் படித்தீர்களா ?.

அழகியசிங்கர் : சில புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போது நம்மை உதைக்கும். கிட்ட வர விடாது.  அதில் இந்தப் புத்தகமும் ஒன்று.

ஜெகனும் : தமிழில்தானே எழுதியிருக்கிறார்.

அழகியசிங்கர் :தமிழில்தான் எழுதியிருக்கிறார். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை  மேலை நாட்டு இலக்கியம் புரிந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் புரியும்.

மோகினி :  தமிழவனின் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற புத்தகத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்.

ஜெகன் : ஆமாம்.  நானும் திரும்பத்திரும்பப் படித்தேன்.

அழகியசிங்கர் : தமிழவனின் கதைத் தொகுப்பை நான்கு விதமாகப் பகுத்துக்கொள்ளலாம் என்கிறார்.

1. ப்ளாஸ்டிக் யதார்த்தம் 2. மௌனி வகையிலான படைப்பாக்கம் 3. மாற்றி அமைத்துக் கட்டப்படும் கூறுகள் 4. மௌனத்தின் மொழி

மோகினி : இதில் இரண்டு புரியவில்லை.  ப்ளாஸ்டிக் யதார்த்தம், மௌனி வகையிலான படைப்பாக்கம்.

அழகியசிங்கர் : நானும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  ப்ளாஸ்டிக் யதார்த்தம் என்றால் என்ன?

ஜெகன் :  முபீன் இப்படிக் கூறுகிறார்.  ‘நெகிழ்ந்த எதார்த்தம்.  அல்லது திரும்பத் திரும்பப் பல வகையில் பிசைந்து உருவாக்கிக் கொள்ள உதவும் எதார்த்தம்.வாசிப்புக்கு உகந்தபடி தகவமைத்துக் கொள்ளும் எதார்த்தம். 

அழகியசிங்கர் :  இன்னொரு கருத்தையும் கூறுகிறார். படைப்பாக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எதார்த்தவாதத்திலிருந்து உருமாறி ரேமண்ட் கார்வர், ஆன் பியாட்டி போன்ற படைப்பாளரகளிடம் வடிவம் கொண்டதாக இந்த பிளாஸ்டிக் யதார்த்தவாதம் இருக்கிறது என்கிறார்.

மோஹினி :  தமிழவன் கதைகளில் இது எப்படிப் பொருந்திப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

அழகியசிங்கர் : இரண்டாவதாக மௌனியின் படைப்புலகப் பகடி என்கிறார்

ஜெகன் :  மௌனியின் அக உலகப் பிறழ் களத்தின் மொழிதலை இந்தக் கதைகள் பகடி செய்திருக்கின்றன என்கிறார்.

அழகியசிங்கர் : இதுவும் புரியவில்லை. 

மோஹினி : அவர் குறிப்பிடுகிற தமிழவனின் கதைகளான ‘யாருக்கும் தெரியாதது’, ‘காணாமல் போன இருவர்’ கதைகளைப் படித்தால் கதைகளில் மௌனியின் இருண்மையில் மறையும் கதை மொழியிலிருந்து எட்டிப் பார்க்கும் பொருள்போல உருவான கதையாடலை வாசிக்க முடிகிறது என்கிறார்.

 
அழகியசிங்கர் : குறிப்பிடப்பட்ட கதைகளைப் படித்துவிட்டு வருவோம். 

ஜெகன் : தொடர்ந்து பேசுவோம்.

அழகியசிங்கர் : பேசுவோம்.

மோஹினி : ஆசிரியர் பக்கத்தை முடித்துவிடலாம்.  அழகியசிங்கர் : நன்றி.