உதயசங்கர்
அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள்,
“ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..”
அவன் நூறாவது முறையாகத் தலையாட்டினான். அவனுக்கு அசோக் தெருவில் காத்துக் கொண்டிருப்பானென்ற எண்ணமே இருந்தது. உடனே டவுசருக்கு மேலே அரைஞாண் கயிற்றை இழுத்து விட்டுக் கொண்டு ஓடிப் போகப்போனான். அம்மா மறுபடியும் இழுத்து நிறுத்தினாள்.
“ நீ எப்படிப் பார்த்தேன்னு கேட்டா என்ன சொல்லுவே..”
அவனுக்கு உடனே ஞாபகம் வரவில்லை. அவன் முழிப்பதைப் பார்த்த அம்மா,
“ சனியனே! எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்கு.. நாளைக்கு மானத்தை வாங்குனே தொலைச்சிருவேன்.. தொலைச்சி…. நான் விளையாண்டுட்டு வீட்டுக்குள்ளே வரும்போது கோபால் மாமா டிரங்கு பெட்டியிலிருந்து எடுக்கறதைப் பார்த்தேன்… அப்படின்னு சொல்லணும்..”
என்று சொன்னாள். அவன் வேகமாகத் தலையாட்டினான். உடனே தெருவுக்குப் போய் எறிபந்து விளையாடப்போய் விட்டான். இடையில் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வந்தான். அப்போதும் அம்மா சொன்னாள். மத்தியானம் சாப்பிடும்போதும் அம்மா சொன்னாள். சாயங்காலம் காப்பி குடிக்கும் போதும் அம்மா சொன்னாள். அவன் வாங்கித்திங்கக் காசு கேட்டான். அப்போதும் அம்மா சொன்னாள். இப்போது அவனுடைய மனதில் காட்சிகள் உருவாகத்தொடங்கின.
அவன் பிரகாஷுடன் கிட்டிப்புள் விளையாடி விட்டு வீட்டுக்குத் தண்ணீர் குடிக்க வருகிறான். வாசல்படியைத் தாண்டும்போது பட்டாசலில் ஏதோ சத்தம் கேட்டது. அவன் திரும்பிப்பார்க்கிறான். அங்கே கோபால் மாமா ஸ்டூலில் ஏறி டிரங்கு பெட்டியைத் திறந்து சங்கிலியை எடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் அதைச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டிருக்கிறான்.
இப்படி ஒவ்வொரு காட்சிச்சட்டகமாக அவனுக்குள் ஓடியது. நாளைக்கு யார் கேட்டாலும் இப்படியே சொல்லவேண்டும். ராத்திரி சாப்பிடும் போதும் அம்மா மறுபடியும் சொன்னாள். அப்போது அவன் அம்மாவிடம் திருப்பிச் சொன்னான். அவளுக்குத் திருப்தி.
மறுநாள் இரண்டு மூன்று பெரியாட்கள், சில பொம்பிளையாட்கள் அந்த வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்திருந்தனர். அவனுடைய அம்மாவும் ஒரு பக்கத்திலும் எதிரே நிலைப்படியில் கோபால் மாமாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
“ அண்ணாச்சி ..இங்க பாருங்க.. குழந்தையும் தெய்வமும் ஒண்ணும்பாக.. பிள்ளை வாயிலேர்ந்து பொய் வராது.. இப்ப எம்பிள்ளையைக் கூப்பிட்டுக் கேளுங்க.. அவன் பார்த்ததச் சொல்லட்டும் அப்புறம் நீங்களே ஒரு முடிவு எடுங்க..”
என்று அம்மா சொன்னாள். உடனே என்னை ஒரு மீசைமாமா கூப்பிட்டார்.
“ ராசா.. நீ என்னடா பார்த்தே? அதைச் சொல்லு..”
அவன் ஒரு கணம் தயங்கினான். அவன் கண்களில் மருட்சி. அம்மாவைப் பார்த்தான். அம்மா சொன்னதையெல்லாம் ஒரு தடவை ஞாபகப்படுத்தினான். அப்புறம் வாயைத் திறந்து பேசினான்.
“ நான் வெளியே வெளயாடப்போயிட்டு தண்ணீ குடிக்க வரும்போது….. பட்டாசல்ல.. அம்மா படுத்திருந்தா.. அவமேலே கோபால் மாமா படுத்திருந்தாரு.. அம்மா அவ கழுத்தில கிடந்த சங்கிலியக் கழட்டி கோபால் மாமா கழுத்தில போட்டு விட்டா.. நான் தண்ணீ குடிச்சிட்டு மறுபடியும் வெளயாடப்போயிட்டேன்..”
என்று சொல்லிவிட்டு பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தான்.

சா (கா)ட்சிப் பிழை ! அந்தப் பையன் விளையாடப் போயிருக்கும் போது அம்மா வீட்டில் இல்லையா .சங்கிலி இருக்குமிடம் அவருக்கு எப்படி தெரிந்தது ?
மோசம்