அப்பா! /செல்வி பிரகாஷ்🌹

தந்தையர் தினமாம். கலங்கிய கண்களுடன் நான் உன் புகைப்படத்தில் புதைகிறேன்.
சிரித்த முகத்துடன்
என்னைத்தோண்டிஎடுக்கிறாய்.

இன்னும் அறிவுரைகளை வழங்கியபடி என் முன்னால் நீ .

கடந்தவைகள் கண்முன்னால் கணக்குப்போட நீ மட்டும் இதயத்தில் கனக்கிறாய்.

காற்றில் வருவாயா? கண்ணீராய் விழுவாயா?

படபடக்கிறது மேசைமேல் காகிதம்.உனக்கொரு கவிதையை கேட்டபடி.

அடைந்து அடைபட்டு சிக்கித்தவிக்கிறாய் நீ இன்னும் என் இதயத்தில்.

வீழாமல் எழுவதற்கு கற்றுக்கொடுத்ததை மறந்து உன் நினைவில் வீழ்ந்தே போகிறேன் எழுவதற்கு முயற்சித்தபடி.

சாரலடிக்கும் சன்னலோரம் காத்திருக்கிறேன் நீ தூரலாய் என் மேல் விழுவதற்கு

நிழலை உற்றுப்பார்க்கிறேன் நிஜத்தில் உன் பிம்பம்.

தொடர்கிறாய் என்றே தூங்கச்செல்கிறேன் தெய்வமே!