
ஓன்றிரெண்டு மேடைகளில் உன்முன்னே நானிருந்தேன் அப்பா! அப்பொழுதும் என்னுள்ளே இருந்தாயே என் அப்பா!
ஆரம்ப பள்ளிநாளில்.. ஐந்தாவது படிக்கும் போது.. ஆண்டு விழா போட்டியிலே அப்பா.. உன் முன்னே நீ எழுதி தந்தததையே ஒப்பித்தேன் அப்பா!
ஆசிரியராக இருந்து அதை ரசித்துக் கொண்டிருந்தாய் என்அப்பா!
தமிழாசிரியர் பிள்ளையென தந்தனரோ ஒரு பரிசு.! அறியேனே அவ்வயதில் என் அப்பா! அப்போதும் புன்னகைத்தாய் அப்பா!
அடுத்தொருநாள் பெங்களூரூ தமிழ்ச்சங்க மேடையிலே.. சிறப்பிக்க நீவந்தாய் என் அப்பா! மொழி வாழ்த்து நான் பாட முன்னிருந்தாய்.. புன்னகைத்தாய் அப்பா!
இன்னொருநாள் திருமயமாம் சொந்த மண்ணில்.. நான் பயின்ற பள்ளியின் முன் அண்ணா சீரணி கலையரங்க மேடையிலே.. யான் எழுதிய கவிதை நூலை வெளியிட்டு வாழ்தினாயே என் அப்பா.! ஏற்புரையில் எனைமறந்தேன் அப்பா!
தாய் மடியும் ஒருமேடை தாலாட்டு கேட்ட மேடை..
தந்தை உன் தோள் இரண்டும் எனக்கு மேடை.. தொல்லுலகை காட்டும் மேடை!
அதற்கு பிறகு.. எத்தனையோ மேடைகளை யான் பார்த்த போதும் என்ன.. ஒரு நாள் தகனமேடை நீயிருந்தாய் நான் மயங்கி விழுந்தேனே!
வாயிருந்து வார்த்தை வர காரணமாய் இருந்தவனே.. வாழ்க்கையிலே நான் இருக்க நீ இன்று இல்லை எனினும்.. நாம் பிறந்த பூமி எனும் மேடையிலே நானிருக்கும் நெஞ்சத்தில் நீயுரைத்த வார்த்தைகளே.. நிழலாடிக் கொண்டிருக்கும்.. உன் ஆசி என்னோடு நிழலாக இருக்கும்.. ஏனென்றால் உனை மறக்க முடியுமோ என் அப்பா!
