மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா


இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.
ஜப்பானிய வண்டி. ஸி – எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின் – 50 குதிரை சக்தி – பத்தாயிரம் RPM !!
ஏதோ ஃபோர் ஸ்ட்ரோக் பஞ்சக்கல்யாணி போல இருக்கிறது. விரலை வைத்தவுடன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பது சொல்லித்தான் தெரிந்தது.
எஞ்சின் ரகசியம் பேசுகிறது. ஐந்தே ஆரங்களுடன் சக்கரம் – பங்ச்சர் ஆனால் தானாக ஒட்டிக் கொள்ளக்கூடிய ட்யூப்லெஸ் டயர்.
“உட்காருங்களேன், ஒரு ரவுண்டு போகலாம்” என்றார் மகேந்திரன்.
“ரொம்ப வேகம் வேண்டாம்” என்று தயக்கத்துடன் அவர் பின்னால் உட்கார்ந்தேன்.
முதல் கியரிலேயே க்ஷண நேரத்தில் அறுபது கிலோமீட்டரைத் தொட்டார்.
“ஈஸி, ஈஸி” என்றேன்.
“இன்னும் நன்கு கியர் பாக்கியிருக்கிறது” என்றார்.
திண்டுக்கல் ரோடில் வெ…………………………கு தூரத்தில் ஒரு பஸ் தெரிந்தது.
“அதை ஓவர்டேக் செய்யலாமா?’ என்றார் மகேந்திரன்.
“அப்படி எதுவும் அவசியமில்லை” என்றேன். சொல்லி முடிப்பதற்குள், அந்த பஸ், ஸ்ஸ்ஸ்ஸ்….என்று எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்தது.
“பிரேக் எப்படி?” என்று தவறுதலாகக் கேட்டுவிட்டேன்.
குறக்களி, மென்னி எல்லாவற்றையும் ஒருங்கே பிடிப்பது போல ஒரு பிரேக் போட்டு அச்சாக அதே இடத்தில அப்படியே நிறுத்திக் காட்டினார்.
“இருநூறு கிலோமீட்டர் வேகம் வரை போகலாம். நூற்றைம்பதைத்தான் இதுவரைத் தொட்டிருக்கிறேன். அதற்கு மேல் கண்ணில் தண்ணீர் வந்துவிடுகிறது” என்றார்.
“வாஸ்தவம்” என்றேன் கண்ணீருடன்.
“நீங்க வேணும்னா ஒரு தடவை ஓட்டிப் பாருங்களேன்” என்றார் மகேந்திரன்.
எனக்கும் அந்த ஹோண்டாவை ஓட்டிப் பார்க்க ஆசைதான். ஏரோப்ளேன் போல இருந்த அந்த பச்சை நிற மீட்டர் பானலைப் பார்த்தேன். எழுத வேண்டிய தொடர்கதைகளை யோசித்தேன்.
“வேண்டாம்” என்று வந்துவிட்டேன்.

One Comment on “மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா”

  1. மனிதருக்கு பாலுடன் நகைச்சுவை உணர்வு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.
    நிகர் இல்லா கலைஞர்

Comments are closed.