நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி

Inbox

பானுமதி ந

நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும்

கலைமகள் துதி- தொடர்ச்சி

மண்ணிலே பிறப்பெடுத்தும் மறை வேதவன் நாயகி நினைக்

கண்ணென நினைக்கும் கருத்தழிந்தேன் இன்று

எண்ணியே வருந்துகிறேன் என்னிலே உனை ஏற்றுவதை

உன்னியே உணரச் செய்தாய் உத்தமியே! நீ வாழ்க!

அன்பிலே குன்றானாய் அறிவிலே பாற்கடலானாய் நற்

பண்பிலே தென்றலென உளமெலாம் தழுவுகிறாய்!

சொல்லாக உருவானாய், சொல்லிலே பொருளானாய்

சொல்கின்ற மொழியெலாம் நீ எனும் சிறப்பானாய்.

கலையெலாம் அடி பணியக் கலைமகள் என நின்றாய் உளக்

களையெலாம் அழித்திடவே அம்மா உனை அழைக்கிறேன்

சிலையெலாமிருந்தும் என் சீர் மகள் அதிலில்லையோ?

அலை மகள் மடிப்புறத்து அமர்ந்து சிரிக்கின்றாயோ?

அறமாகி மறமாகி கருவாகி உயிராகி

ஒளியாகி ஒலியாகி உயர்ந்து நிற்கும் உணர்வாகி

விரி வெளியாகிக் காற்றாகி மண்ணாகிப் புனலாகி

பரந்து நிற்கும் கடலாகி நின்றனையே! எனதாருயிரே!

சீற்ற மிகு சிம்மச் செருக்கடக்கி துர்க்கையாய்

ஆற்றல் மிக அழகாக அதன் மீது அமர்ந்தருள்பவளே!

ஏற்றம் தரு நின் தாமரைப் பாதங்களை

மாற்றம் சொல்வோர் மேதினியில் அழிவாரே!

அன்னப் பறவை தன் அழகான நடை நடந்து

செவ்விய சீரடி நோக உன் நடை கண்டு வருந்திடவே

செவ்விதழோரம் இளநகை இழைந்தோட

அமுத மலராக அமர்ந்தனையே! ஹம்ச வாகினியே!

உண்மையை உணர்த்துவாய் உமையவளே போற்றுவேன்

உயிர்ப்பிக்கும் இயற்கையின் உயிராகச் சிரித்தனையே!

களையெலாம் அழிந்து நற்கலையெலாம் வளர்ந்திடவே

வாணி சரஸ்வதி! வாக்காக வருவாயே! வரமெலாம் தருவாயே!

உனை வணங்கி உயிர் வாழ அருள் வேண்டும்

உயிராக உனை நினைக்க மதி வேண்டும்

மதியாக நீ என்னுள் வர வேண்டும்.

மதியாதார் புன் எண்ணம் அழிய வேண்டும்.

மனமாக மானினி நீ அமைய வேண்டும்

சினமான பேய் விட்டு நீங்க வேண்டும்

எண்ணங்கள் பாமாலையாய் ஆக வேண்டும்

பன்னூல்கள் உனக்கு நான் சூட்ட வேண்டும்

நலமெலாம் நன்றாக அளித்த நங்காய்

நாளெலாம் எனைப் பிரியாதிருக்க வேண்டும்.