
ஒரு இனத்தின் பண்பாட்டையும் அறிவுத் தோற்றத்தையும் எடுத்துக்காட்டுபவை அதன் தொன்மக்கூறுகளும் தொன்மக் கதைகளும் தொல் இலக்கியங்களும் தான். மானிடவியல், இனவியல் அறிஞரும் அமைப்பியலின் பஞ்சவர்களில் ஒருவருமான (Structural Anthropology ) பிரான்ஸ் நாட்டு லெவி-ஸ்ட்ராஸ் (Lévi-Strauss), காட்டுமிராண்டி மனிதனின் மூளையும் நாகரிகமடைந்த மனிதனின் மூளையும் ஒரே அமைப்பையும் குணச் சித்திரங்களையும் கொண்டைவை என்று (The Savage Mind / Tristes Tropiques) என்று வாதிடுகிறார். இன்றைய மனிதனி அறிவியல் பார்வை, அன்றைய மனிதனின் தொன்மக் கதைகளிலும் உள்ளோடி இருப்பதாக பகுத்தாய்ந்து காட்டினார் (The Raw and the Cooked / பச்சையும் வேகவைத்ததும்). இவனுக்கு அவன் இளைத்தவனில்லை என்றார்.
ஒவ்வொரு இனத்துக்கும் பிரபஞ்சத்தின் தோற்றம், கடவுளர்கள், மனிதர்களின் பிறப்புப் பற்றிய தொல்கதைகள் இருக்கும். தமிழினத்தின் தொன்மைங்களைப் பற்றிய ஆய்வு அரிதாகவே நிகழ்ந்துள்ளன. அவையும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அகராதியியலில் துறைபோகிய பேராசிரியர் பெ. மாதையனின் “வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்” (தமிழ்ப் பல்கலைக்கழகம், முதல் பதிப்பு 2001) என்ற நூல் முதன்மையானது. (இதன் புதுமைகருதி இதை நான் பிரசுரமானபோதே வாங்கிப் படித்தேன்). அகராதியியலில் பல நூல்களைத் தந்துள்ள மாதையன் செம்மொழி இலக்கியங்களில் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். காண்க….. (https://muelangovan.wordpress.com/2014/01/28/பேராசிரியர்-பெ-மாதையன்-அ/) (நான் சேலம்-7 அரசு கலைக் கல்லூரியில் இருந்தபோது, பெரியார் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த இவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன்.)
வே.அண்ணாமலை, சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம் தொகுதி-1, (மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2000) என்ற நூலும் வெளிவந்துள்ளது.
நமது தொல் இலக்கியங்கள் சங்க இலக்கியம் என்று சொல்லப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். எனவே இவற்றில் தமிழரின் தொன்மங்களைத் தேடிக் கண்டடைவதை மேலுள்ள நூல்கள் செய்கின்றன. தமிழரின் அறிவுக் கோட்பாட்டையும் அறிவுத்தோற்றத்தையும் (எபிஸ்டமாலஜி /அறிவறிவியல்) ஆராய்பவர்களும் சங்க இலக்கியத்தையே முதன்மையானதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
நாட்டுப்புறவியலிலுள்ள தொல் படிவத் தொன்மங்கள் முக்கியமான ஆய்வுக்குரியவை. லெவி-ஸ்ட்ராஸ் முக்கியமாக பழங்குடி இனங்களின் கதைகளைத் தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். பாளையங்கோட்டையிலுள்ள புனிதசேவியர் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையிலிருந்த தே.லூர்து “நாட்டார் வழக்காற்றியல்” என்ற ஆய்விதழைக் கொண்டுவந்தார். அதில் (கடைசி இதழில் என்று நினைக்கிறேன்) லெவி-ஸ்ட்ராசின் பழங்குடிக் கதையின் விரிவான பகுப்பாய்வு ஒன்று மொழிபெயர்க்கப்பட்டது நினைவில் இருக்கிறது.
தமிழியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள் முதலில் இந்தத் துறையிலும் விரிவாக்கம் செய்யப் பாடுபட வேண்டும்.
தமிழவன், பூரணசந்திரன், எம்டிஎம், செல்லப்பெருமாள், டி.தருமராஜன், போன்றோர் எழுதிய மேல் அமைப்பியம் தொடர்பான நூல்களிலும் லெவிஸ்ட்ராஸ் பற்றிய அறிமுகங்களைப் பெறலாம். இன்றுள்ள மானுடவியல் அறிஞர்களில் முதன்மையான நண்பர் பக்தவச்சல பாரதியின் ‘மானுடவியல் கோட்பாடுகள்’ என்ற நூல் முக்கியமானது. அவர் பண்பாட்டு / வரலாற்று / இலக்கிய / திராவிட / தமிழர் மானுடவியல்கள் என்ற வகையில் எழுதிவரும் விரிவான பல நூல்கள் பிரமிப்பூட்டக்கூடியவை.
4
